Showing posts with label ரமளான். Show all posts
Showing posts with label ரமளான். Show all posts

Tuesday, August 3, 2010

ரமளானின் மூன்று பகுதிகள்

ரமளானின் மூன்று பகுதிகள்

புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமலானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமலானின் 30 நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது.

இந்த கண்ணிய மிக்க மாதத்தின் முப்பது நாட்களைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகையில் அல்லாஹ் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக அடையாளம் காட்டியுள்ளார்கள் என்று கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட்கொடையாகவும்
நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும்
கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது.

அல் ஹதீஸ் ஆதார நூல் இப்னுகுஜைமா பாகம் 3 எண் 191

முதலாவது பத்து நாட்களில்

இந்த ஹதீஸின் அடிப்படையையும் நாம் கவனத்தில் கொண்டு முதலாவது பத்து நாட்களில், அதிகமதிகமாக அல்லாஹ்விடம் துவாச் செய்து அவனால் வழங்கப்பட்ட உயிர், பொருள், இதர செல்வங்கள், கல்வி, அறிவு, ஆற்றல்கள், திறமைகள், பார்வை, செவி, புலன், நுகர்தல், உணர்தல் போன்ற அனைத்து விதமான அருட் கொடைகளையும் நினைவு கூரவும் அவற்றிற்கு முறையாக நன்றி செலுத்திடவும் அதன் மூலம் மேலும் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் அதிகமதிகமான அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெறவும் முயல வேண்டும்

இரண்டாவது பத்தில்
முறையாக அல்லாஹ்விடம் மனமுருகி அதிகம் அதிகம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்றைப் பற்றி மனம் வருந்தி, மீண்டும் அவற்றில் ஈடுபடாமல் இருக்க உறுதியெடுத்துக் கொண்டு அனைத்துத் தொழுகைகளிலும் குறிப்பாக இரவுத் தொழுகைகளிலும் பாவமன்னிப்பையும் இவற்றில் இருந்து பாதுகாவல் பெற அல்லாஹ்வின் உதவியும் கேட்க வேண்டும் என்று உணரலாம்.

மூன்றாவது பத்து நாட்கள் நரகத்தில் இருந்து பாதுகாப்பு தேடவேண்டும்
"முஃமின்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் இடுகின்ற கட்டளைகளில் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்வார்கள்." (அல் குர்ஆன் 66 : 6)

"எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" (அல்குர்ஆன் 2 :201)

அதே போல் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த அந்தஸ்தான சுவனத்தில் இடம் வேண்டியும் பணிவுடனும் மனமுருகியும் நம்பிக்கையுடனும் பிராத்திக்க வேண்டும். அவற்றின்பால் கொண்டு செல்லும் நற்செயல்களில் தொடர்ந்து இறுதி மூச்சுவரை ஈடுபட உறுதி பூண்டு உதவி கோரி பிராத்திக்க வேண்டும். இதையும் ரமலானிலும் ரமலான் அல்லாத ஏனைய நாட்களிலும் தொடர்ந்து கடைப்பிடித்திடல் வேண்டும்.

Monday, August 24, 2009

ரமளானும் அல்குர்ஆனும்

ரமளானும் அல்குர்ஆனும்

( மவ்லவி அல்ஹாஃபிழ் டி.எம். முஜிபுர் ரஹ்மான் சிராஜி – திருப்பூர் )

நோன்பும் குர்ஆனும்

சங்கை மிகுந்த ரமளான் மாதம் நம்மிடையே வருகை புரிந்துள்ளது. குறைந்த காலத்தில் குறைந்த செயலின் மூலம் அதிகமான நன்மை களை நமக்கு பெற்றுத்தரும் மாதமாகும் இது. இம்மாதம் குறித்து அல்லாஹு தஆலா,

“ரமளான் மாதம் எத்தகையது என்றால் அதில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் நேர்வழியிலிருந்தும் சத்தியத்தையும் அசத்தியத்தை யும் பிறித்தறிவிக்க கூடியதிலிருந்தும் தெளிவான விளக்கமாகவும் உள்ள குர்ஆன் இறக்கியருளப்பட்டது.”
-அல்குர்ஆன் (2:185) என்று கூறுகிறான். அவ்வாறு ரமளானில் அருளப் பட்ட குர்ஆனைக் குறித்து அண்ணலார் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் பொழுது


“நீங்கள் அல்லாஹ்விடம் திரும்பிச் செல்வதற்கும் அவனிடம் நெருங்குவதற்கும் உதவியாக அவனிடமிருந்து வந்த குர்ஆன் ஷரீ பைத் தவிர வேறு சிறந்த பொருளை பெற்றுக் கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார்கள்.

அறிவிப்பாளர்கள் : ஹள்ரத் அபூதர் (ரளி) நூல் : ஹாகிம்

அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்றுத்தரும் அற்புத வேதமான குர்ஆன் ஷரீபை அல்லாஹுதஆலா குர்ஆனின் அதிகமான வசனங் களை ரமளான் மாதத்தில் தான் இறக்கி வைத்துள்ளான். நோன்பை நமக்கு கடமையாக்க விரும்பிய அல்லாஹுதஆலா குர்ஆன் இறக்கி அருளப்பட்ட ரமளான் மாதத்தை நோன்பு மாதமாக தேர்ந்தெடுத்தான். குர்ஆனில் கூறப்பட்ட பெரும்பாலான விஷயங்களை மனிதன் உடனடி யாக செயல்படுத்தும் முகமாக குர்ஆன் அருளப்பட்ட ரமளான் மாதத்தையே நோன்பை நோற்க கடமையாக்கி இரவில் நின்று வணங்குவதையும் வலியுறுத்தினான். நோன்பு வைப்பதின் காரணமாக மற்ற மாதங்களில் தொழுகை மற்றும் இன்ன பிற விஷயங்களில் கவனக் குறைவாக இருக்கும் முஃமின்கள் ரமளான் மாதத்தில் தொழுகை மற்றும் தான தர்மங்கள் செய்வது என்ற நிலையில் முஃமின்கள் ஈடுபடுகின்றனர். குர்ஆன் கூறும் தொழுகை, தான தர்மங்கள், நற்செயல்கள் ஆகியவற்றை உடனடியாக அமல் செய்யும் விதமாக ரமளான் மாதம் அமைகிறது.

அனைத்தும் உள்ளடக்கிய அல்குர்ஆன்

குர்ஆன் அருளப்பட்ட இந்த ரமளான் மாதத்தில் குர்ஆனைப்பற்றி சில விஷயங்களை நாம் நினைவு கூர்வோம். குர்ஆனில் அல்லாஹ் இம்மை, மறுமை மற்றும் அனைத்து விஷயங்களையும் கூறியுள்ளான். குர்ஆனில் அல்லாஹ் கூறாத விஷயங்களே இல்லை. இருப்பினும் அண்ணலார் (ஸல்) அவர்கள் குர்ஆனில் பொதிந்துள்ள விஷயங்களை ஐந்து அம்சங்களில் உள்ளடக்கி கூறுகிறார்கள்.

“புனித குர்ஆனில் ஐந்து விஷயங்கள் உள்ளன. 1. ஹலால் (ஆகுமாக்கப்பட்ட விஷயங்கள்) 2. ஹராம் (விலக்கப்பட்ட விஷயங்கள் 3. முஹ்கம் (தெளிவான மொழிநடை கொண்ட வசனங்கள்) 4. முதஷா பிஹாத் (மறைவான விஷயங்களான சுவனம், நரகம் அர்ஷ் போன்ற விஷயங்களை கூறும் வசனங்கள் 5. உதாரணங்கள் கூறும் வசனங்கள்.


இவ்வாறு குர்ஆனில் ஹலால் என்று கூறப்பட்டுள்ள விஷயங்களை ஹலால் என்று கருதுங்கள். ஹராமை ஹராமாக கருதுங்கள். கொள்கைகள் கோட்பாடுகள் சட்டங்கள் ஆகியவற்றை கூறும் முஹ்கம் வசனங்கள் படி செயல்படுங்கள். மறைவான விஷயங்களை சுவர்க்கம், நரகம், அர்ஷ் ஆகியவற்றை விபரிக்கும் முதஷாபிஹான வசனங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். அதனை துருவி ஆராய முற்படாதீர்கள். முந்தைய சமுதாயங்கள் அழிந்து மடிந்தது பற்றிய படிப்பினை தரும் சம்பவங்களில் மூலம் படிப்பினை பெறுங்கள்.

அறிவிப்பாளர்: ஹள்ரத் அபூஹூரைரா (ரளி) நூல்: மிஷ்காத்.


குர்ஆன் முழுவதிலும் அல்லாஹ் கூறியுள்ள விஷயங்களை அண்ணலார் (ஸல்) அவர்கள் ஐந்து அம்சங்களில் பொதிய வைத்து கூறிவிட்டார்கள். குர்ஆனில் வழிகாட்டுதல் படி வாழ்வது என்பது சிரமத்திற்குரிய விஷயமல்ல. விளங்க முடியாத வேதாந்தத்தையோ புரிய முடியாத தத்துவத்தை குர்ஆன் கூறிவிடவில்லை. மிக எளிதாக பாமரர்களும் புரிந்து கொள்ளும் விதமாக இலகுவான வழிகாட்டுதல் களைத்தான் குர்ஆன் முன் வைக்கிறது.

உதாரணமாக மனித வாழ்க்கையின் நோக்கமென்ன? என்ற வினாவை முன் வைத்தால் இன்று அறிஞர்கள், யோகிகள் தவத்திரு என்று கூறிக்கொள்பவர்கள் விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்கள் என்றால் ஜீவன், முக்தி, ஆன்மா என்றெல்லாம் கூறி நம்மை குழப்பி விடுவார்கள். ஆனால் குர்ஆன் மிகமிக இலகுவாக அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக விடை பகர்கிறது. மனித வாழ்வின் நோக்க மென்ன? தெரியுமா? “மனித இனம் இறைவனை வழிபட்டு வாழ வேண்டும் என்பதற்காகவே படைக்கப்பட்டுள்ளான்” என ஒற்றை வரியில் திருக்குர்ஆன் (51:56) பதில் பகர்கிறது. குர்ஆனின் கருத்துக் களும் வழிகாட்டலும் இலகுவானது என்பதை அல்லாஹ்வே தனது குர்ஆனில் தெளிவுபடுத்துகிறான். :இந்த குர்ஆனை அறிவுரை பெறு வதற்காக திட்டமாக நாம் எளிதாக்கி வைத்துள்ளோம். எனவே அறிவுரை பெறுகிறவர் எவரேனும் உண்டா? (54:32) என்று அல்லாஹ் கேட்கிறான்.


பழங்கதை புத்தகமல்ல

திருக்குர்ஆனை ”வேதம்” என்றதும் அது பூர்வீகமான நூல் என்றதும் அதில் பழங்கதைகள் புராண இதிகாசங்கள் நிறைந்திருக்கும் என்று நாம் எண்ணி விடக்கூடாது. முற்காலம், தற்காலம் இனிவரும் காலம் ஏன் உலக அழியும் காலம் வரை உண்டான அனைத்து விஷயங்களை யும் அல்குர்ஆனில் காணலாம். அறிவியல் அற்புதங்களையும் குர் ஆனின் மூலமாக காணமுடியும். உதாரணத்துக்கு திருகுர்ஆன் கூறும் சில விஞ்ஞான சங்கதிகளை காணலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் பூகோள வல்லுநர்கள் வானவியல் சம்பந்தமாக சில கருத்த்துக்களை குறிப்பிட்டனர். அதாவது “இந்த பிரபஞ்சம் நிபுலா என்ற பேரண்டத்தில் சேர்ந்திருந்தது. பின்பு அதிலிருந்து பிரிக்கப்பட்டது. அதன் பின்பு தான் பால்வெளி உருவாயின” என்று கூறினர்.

இந்த விஷயத்தை அல்லாஹு தஆலா சுமார் 1400 வருடங்களுக்கு முன்பே திருகுர்ஆனில் பதிவு செய்து வைத்துள்ளான். “நபியின் கூற்றை நிராகரிப்பவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? வானங்கள் பூமி அனைத்தும் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன. பிறகு நாம் அவற்றை தனித்தனியாக பிளந்தோம்.

-அல்குர்ஆன் (21:30)

தாவர வர்கத்திலும் ஜோடிகள் உண்டு

தாவர இனத்தைச் சார்ந்த பூக்கள், செடிகள், கனிகள் அனைத்திலும் ஆண்,பெண் என்ற இருபாலும் உண்டு. தாவரவியல் வல்லுநர்கள் இது குறித்து கூறும் பொழுது பூக்களில் “ஸ்டோமென்” (STOMEN) என்ற ஆண் இன அம்சமும், “ஓவன்ஸ்” (OVENS) என்ற பெண் இன அம்சமும் உண்டு. இவற்றிலிருந்து தான் கனிகள் உற்பத்தி ஆகின்றன என்று கூறு கின்றனர். அல்லாஹுதஆலா சுமார் 1400 வருடங்களுக்கு முன்பே இது குறித்து குர்ஆனில் பதிவு செய்து வைத்திருக்கிறான். “ஒவ்வொரு கனி வகை தாவரங்களின் ஜோடிகளையும் அல்லாஹ் படைத்துள்ளான்.” – அல்குர்ஆன் (13:3) என்று குர்ஆனில் கூறுகிறான்.
ஆணிகளாக சிகரங்கள்

பூமியின் அமைப்பு குறித்து பூமி ஆய்வாளர்கள் கூறும்போது பூமியின் தூரம் 3750 மைல்களாகும். நாம் வாழும் பூமிப்பகுதி சுமார் 30 மைல்கள் வரையிலான பகுதி மெலிதான இலகுவான பகுதிகளாகும். மெலிதான பகுதி என்பதால் அதிர்வுகள் ஏற்பட சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே அதிர்வுகளும் பூமி அசைவுகளும் ஏற்படாவண்ணம் மலைகள் தாங்கிப் பிடிக்கின்றன. அதாவது பூமியில் அடிக்கப்பட்ட ஆணிகள் போன்று மலைகள் பூமியின் அசைவை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன. இது நில ஆய்வாளர்களின் கூற்றாகும். ஆனால் அல்லாஹுதஆலா சுமார் 1400 வருடங்களுக்கு முன்பே இது குறித்து குர்ஆனில் கூறி உள்ளான். “நாம் பூமியை விரிப்பாக்கவில்லையா? மேலும் மலைகளை, முளைகளாக ஊன்றி வைக்கவில்லையா?

-அல்குர்ஆன் (78:6, 21:31)

இனிக்கும் கடல்நீர்

உலகில் பெரும்பாலான பகுதிகள் கடல்நீரால் சூழப்பட்டுள்ளது. அந்த கடலிலும் அல்லாஹு தஆலா பல அற்புதங்களை ஏற்படுத்தியுள்ள தாக குர்ஆனில் கூறியுள்ளான். கடலில் மத்திய தரைக்கடலும் அட்லாண்டிக் கடலும் “ஜிப்ரால்டர்” என்ற பகுதியில் இணைகின்றன. மத்திய தரைக்கடல் சங்கமிக்கும் இந்த இடத்தில் அதன் நீரின் தன்மை மற்றும் சுவை மாறுபடுவதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் கூறிகிறார்கள். இவ்வாறு இருகடல்கள் சங்கமிக்கும் இடத்தில் கண்ணுக்கு புலப்படாத தடுப்பு போன்ற அமைப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த தடுப்பை சைக்னாக் லைன் (PYCNOCLINE) பகுதி என்று கடல் ஆய்வாளர்கள் பெயரிட்டு அழைக்கிறார்கள். இவர்கள் தெரிவிக்கக் கூடிய இந்த விஷயத்தை அல்லாஹு தஆலா சுமார் 14 நூற்றாண்டு களுக்கு முன்பே குர்ஆனில் பதிவு செய்து வைத்துள்ளான்.

”அல்லாஹ் எத்தகையவன் என்றால் இரு கடல்களையும் ஒன்றாக கலந்திடச் செய்துள்ளான். இது இனிமையானது. மதுரம் மிக்கது. மற்றொன்று உப்பும் கசப்பும் நிறைந்தது. (இரண்டும் ஒன்றோடொன்று கலந்திடாத வண்ணம்) இரண்டுக்குமிடையே மீற முடியாத ஒரு தடுப்பையும் ஏற்படுத்தி உள்ளான்.”

-அல்குர்ஆன் (25:53)


திருகுர்ஆனில் புதைந்துள்ள அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்த ஒரு நூலில் ஒரு அற்புத நிகழ்வை குறிப்பிட்டுள்ளார்கள். மத்திய தரைக்கடல் பகுதியில் “கப்தான் லாக் குஸ்ஸோ” என்ற பிரஞ்சு ஆராய்ச்சியாளர் கடலில் மூழ்கி ஆய்வு நிகழ்த்திக் கொண்டிருந்த போது திடீரென்று அவரின் முகத்தில் மாட்டியிருந்த முகமூடி சற்று விலகுகிறது. அப்போது கடல்நீர் சிறிதளவு அவரின் வாயினுள் சென்று விடுகிறது. கடல் நீரை சுவைத்த அவருக்கு பெரும் ஆச்சர்யம். காரணம் வாயினுள் புகுந்த நீர் உப்பு கரிக்காமல் இனித்தது. “இது என்ன வியப்பாக இருக்கிறது. கடல்நீர் இனிக்கிறதே ! என்று நினைத்து சற்று தள்ளி இன்னொரு இடத்தில் நீரை சுவைத்துப் பார்த்தார்.


ஆனால் அந்த நீர் உப்பு கரிப்பாக இருந்தது. பெரும் வியப்படைந்த “கப்தான்” அவர்கள் கடலில் மேலும் பல இடங்களில் ஆராய்ந்து பார்த்தார். பெரும்பாலான இடங்களில் கடல்நீர் உப்பு கரிப்பாக இருந்தாலும் சில இடங்களில் நீர் தித்திப்பாக இருந்தது. இருவகையான நீரும் கலந்தே கடலில் இருந்தாலும் இரண்டுக்கும் மத்தியில் ஒரு ”வகையான” தடுப்பு இருப்பதைப் போன்று உணர்ந்தார். தனது ஆராய்ச்சியை முடித்துக் கொண்டு வெளியில் வந்த கப்தான் இதைப் பற்றி யாரிடமாவது விசாரிக்க வேண்டும் என நினைத்தார். அப்போது தான் அவருக்கு பிரஞ்சு ஆய்வாளர் டாக்டர் மாரீஸ் புகைல் அவர்களின் நினைவு வந்தது. ( இந்த மாரிஸ் புகைல் என்பவர் உலகப் பிரசித்தி பெற்ற “பைபிலும் குர்ஆனும் விஞ்ஞானமும்” என்ற நூலை எழுதியவர் ) அவரிடம் தனது கண்டுபிடிப்பை ஆச்சர்யத்தோடு விபரித்தார். அப்போது அவர் “நான் சர்வசமய நூல்களையும் படித்து அதன் கருத்துக்களை ஆராய்ந்து வருபவன் என்ற முறையில் சொல்கிறேன். நீங்கள் சொல்கிற இந்த விஷயம் முஸ்லிம் சமய வேதமான அல்குர்ஆனில் (25:53, 35:12, 55:19,20) ஆகிய வசனங்களில் தெளிவான முறையில் சொல்லப்பட்டிருக்கிறது. தாங்கள் சொல்வதைப் பார்க்கும் போது 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே திருகுர்ஆனில் இவ் விஷயம் பதியப்பட்டுள்ளது என நினைக்கும்போது பெரும் வியப்பாக உள்ளது” என பதில் பகர்ந்தார். சுப்ஹானல்லாஹ் ! குர்ஆனின் அறிவியல் விஷயங்களால் எண்ணிப்பார்க்கும் போது கடலை விட ஆழமான கருத்துக்கள், அறிவியல் விஷயங்கள் குர் ஆன் தன்னிடம் புதைத்து வைத்துள்ளது. என்று உறுதியிட்டு கூறமுடியும். குர்ஆன் எனும் இந்த ஆழ்கடலில் மூழ்கி அதன் அரிய கருத்துக்கள் எனும் முத்தை எடுக்க இந்த ரமளான் மாதத்தை விட சிறப்பான மாதம் வேறென்ன இருக்க முடியும்?


தேன்,தேனீ, திருகுர்ஆன்

மனிதகுலத்துக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அற்புத நோய் நிவாரணி தேன் என்பதில் இருகருத்து இருக்க முடியாது. அண்ணலார் (ஸல்) அவர்கள் தனது மருத்துவ வழிகாட்டுதலில் (திப்பநபவி) அதிகமான இடங்களில் தேனைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். மருத்துவத்துறைகள் ஒப்பற்ற இடத்தை பிடித்துள்ள இந்த தேனை உருவாக்கும் தேனியைப் பற்றியும் ஆய்வாளர்கள் ஆய்ந்து வந்துள்ளார்கள். அவர்களில் “வான் பிரிஸ்க்” என்ற ஆய்வாளர். தேனீ பற்றி குறிப்பிடும் போது மலரி லிருந்து தேனீ அதன் சாற்றை உறிஞ்சி அதனை உற்பத்தி செய்கிறது. இவ்வாறு தேனீ சாறு கிடைக்கக்கூடிய மலர்களை கண்டால் உடனே அது திரும்பிச் சென்று மற்ற தேனீக்களுக்கும் குறிப்பிட்ட மலர்களை யும் அது இருக்கும் பகுதிகளையும் தெளிவான முறையில் விபரிப் பதாக குறிப்பிடுகிறார். இவ்வாறு அறிவிப்புச் செய்யும் தேனீயும் தேனை சேகரிக்க செல்லும் தேனீக்களும் அனைத்தும் பெண் தேனீக்கள் தான் என்றும் தன் ஆய்வில் குறிப்பிடுகிறார். இந்த விஷயங்களை அல்லாஹு தஆலா தனது குர்ஆனில் தெளிவான முறையில் குறிப் பிடுகிறான்.

“உம்முடைய இறைவன் தேனீக்கு “மலைகளிலிருந்தும் மரங்களி லிருந்தும் ( மனிதர்களாகிய) அவர்கள் கட்டுகின்ற (தேன்கூடு முதலிய) வற்றிலிருந்தும் வீடுகளை நீ அமைத்துக்கொள்?” என்ற உள்ளுணர்வை ஏற்படுத்தினான். பிறகு எல்லாக்கனி மலர் வகைகளிலிருந்தும் நீ உணவருந்தி உன்னுடைய இறைவனின் எளிதான வழிகளில் நீ புகுந்து செல்வாயாக ! என்றும் உள்ளுணர்வை ஏற்படுத்தினான்.


அல்குர்ஆன் (16:68) இந்த ஆயத்தில் அல்லாஹ் தேனீயைப் பற்றி குறிப்பிடும் பொழுது ”நீ சாப்பிடு” நீ நுழைந்து கொள்” என்ற அர்த்தத்தை பொதிந்துள்ள “குலீ” “ஃபஸ்லுகீ” என்ற வாசகத்தை கூறி யுள்ளான். இந்த வாசகம் பெண்பாலிடம் உபயோகப்படுத்தும் வார்த்தை களாகும். இதன்மூலம் அல்லாஹுதஆலா தேனைத் தேடிச் சென்று மலர்களின் சாறுகளை சேகரிக்கும் தேனீக்கள் பெண் தேனீக்கள் தான் என்ற விஷயத்தையும் தெரியப்படுத்துகிறான். தற்கால ஆய்வில் அறியப்படுகிற விஷயத்தை சுமார் 1400 வருடங்களுக்கு முன்பே அல்குர்ஆன் பதிவு செய்து வைத்திருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அல்லவா !


மேகம் கருக்கிறது மழை வரப்பார்க்கிறது

பிரபஞ்சத்தில் அல்லாஹ் எவ்வளவோ ஆச்சரியமான விஷயங்களை வைத்திருப்பதைப் போன்று வான் மண்டலத்திலும் அல்லாஹ் ஆச்சர்யங்களை வைத்துள்ளான். அவைகளில் ஒன்று மழை பெய்வது. நீலவானில் திடீரென மேகங்கள் ஒன்று சேர்ந்து கருத்துப்போய் மழை பொழிய ஆரம்பிக்கிறது. நீரியல் ஆய்வாளர்கள் இது குறித்து கூறும் போது “காற்றுதான் மேகங்களை ஒன்றிணைத்து – குளிர்வித்து மழை பொழிய வைக்கிறது.” என கூறுகிறார்கள். இதை நாம் செயற்கையாக வும் செய்ய முடியும். மழை பொய்த்துப் போய் வறட்சி ஏற்படும் கால கட்டத்தில் விமானத்தின் மூலம் ரசாயணப் பொருட்களைத் தூவி மேகங்களை செயற்கையாக குளிரவைத்து மழை பொழிய வைக்க முடியும் என்று கண்டுபிடித்து அதில் சிறிதளவு வெற்றியும் பெற்றார் கள். ஆக மேகங்களை காற்று ஒன்றிணைத்து குளிர்விப்பதால் மழை பொழிகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இக்கருத்தை அல்லாஹுதஆலா குர்ஆனில் முன்பே பதிய வைத்துள்ளான்.


“காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாம் அனுப்பி வைத்தோம். பிறகு வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி வைத்து அதனை உங்களுக்கு நாம் புகட்டினோம்.”

-அல்குர்ஆன் ( 15:22 )

இவ்வாறு அல்லாஹுதஆலா காற்றின் மூலம் மேகங்களை குளிர வைத்து மழை பொழிய வைப்பதை குறித்து அல்லாஹுதஆலா திரு குர்ஆனில் பல இடங்களில் கூறியுள்ளான்.

அல்லாஹுதஆலா திருகுர்ஆனின் மூலம் மனித சமுதாயத்தின் முழு வாழ்க்கைக்கு வழிகாட்டி என்பதை நிரூபிப்பதைப் போன்று தற்கால நவீன அறிவியல் விஷயங்களையும் சுமார் 14 நூற்றாண்டு களுக்கு முன்பே தன்னில் கொண்டுள்ளது என்பதை விபரிப்பதற்காகத் தான் மேற்கண்ட ஆய்வு விஷயங்களை நாம் பதிவு செய்துள்ளோம். இது போன்று எண்ணற்ற நவீன கண்டுபிடிப்பு விஷயங்களை பற்றியும் குர்ஆன் தெரிவிக்க காத்திருக்கிறது. எனவேதான் அல்லாஹ் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து ஆராய வேண்டாமா? “ – அல்குர்ஆன் ( 4: 82 ) என்று கேட்கிறான்.


குர்ஆனும் நாமும்

மனித சமுதாயத்திற்கு அவன் சார்ந்த அனைத்து துறைகளுக்கும் முழு வழிகாட்டிய அல்லாஹ்வால் அருளப்பட்ட குர்ஆனை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம்? குர்ஆனை அது ஏதோ சடங்கு சம்பிரதாயங்களை போதிக்கும் நூல் என்பதைப் போன்று பள்ளிவாசல் களிலும் வீட்டில் ஒரு பெட்டியிலோ உரையிலோ போட்டு வைத்து விடுகிறோம். யாராவது இறந்து விட்டால் குர்ஆனின் ஞாபகம் நமக்கு வருகிறது. அதை ஓதி இறந்தவர்களுக்கு நன்மை சேர்ப்பித்துவிட்டால் – அத்துடன் குர்ஆனோடு நம்முடைய தொடர்பு முடிந்து விட்டது என்ற நிலையில் நாம் உள்ளோம். அஸ்தஃபிருல்லாஹ். குர்ஆனுடைய வழி காட்டுதலை மனித சமுதாயம் அலட்சியப்படுத்தியதால்தான் பாவங் களும், தீமைகளும் பல்கிப் பெருகிப் போய் உலகம் பெரும் பிரச்சனையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. உணவுப் பற்றாக்குறை. பணவீக்கம் – அத்தியாவசியப்பொருள்கள் விலையேற்றம். உலகம் வெப்ப மயமாகுதல் நாட்டுக்கு நாடு அரசியல் குழப்பங்கள். இன்னும் பல பிரச்சனைகள். இவைகளெல்லாம் ஏன்? ஏன்? குர்ஆன் அதற்கு பதிலுரைக்கிறது.


“மனிதர்களுடைய கைகள் சம்பாதித்த (கெடுதலான) வற்றின் காரணத்தால் தரையிலும், கடலிலும் (அழிவு) குழப்பம் பரவி விட்டது. அவர்கள் செய்ததில் சிலதை அவர்களுக்கு அவன் சுவைக்கச் செய் வதற்காக (இவ்வாறு செய்கிறான். இதனால் பாவங்களிலிருந்த) அவர்கள் திரும்பி விடக்கூடும்.”

-அல்குர்ஆன் ( 30:41 )

மனிதர்களுக்கு மனிதர்களே தேடிக்கொண்ட வினைகள் தான் உலகில் தற்போது நிகழும் சூழ்நிலைகள் என குர்ஆன் தெளிவாக பதிலுரைத்து விட்டது. அது போன்று முஃமினானவர்களுக்கு மத்தியில் நிகழக்கூடிய பிரச்சனைகள் பிளவுகள் இஸ்லாமிய நாடுகளுக்கு மத்தியில் நிகழ்ந்துள்ள கருத்து வேறுபாடுகள், இஸ்லாமிய நாடுகளை நோக்கி ஐரோப்பிய நாடுகள் போர் தொடுக்கும் சூழ்நிலைகள் இவை களேல்லாம் எதனால்? ஏன்? இதற்கும் குர்ஆன் தெளிவான விடை தருகிறது.

“முஃமின்களே ! உங்களுக்கிடையில் நீங்கள் பிணங்கித் தர்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் கோழைகளாகி விடுவீர்கள். உங்களுடைய பலம் குன்றி விடும். – அல்குர்ஆன் (8:46)

முஃமின்கள் குர்ஆனின் வழிகாட்டுதல்களை புறந்தள்ளியதின் காரணமாக சர்வர்தேச இஸ்லாமிய சமுதாயத்திடம் கருத்து வேறுபாடு, பிளை, உண்டானது. அதனால் பிற சமுதாயத்தின் பார்வையில் இஸ்லாமிய சமுதாயத்தைப் பற்றி காழ்ப்புணர்ச்சியும் வெறுப்புணர்வும் தான் ஏற்பட்டுள்ளது. “உயர்வான உம்மத்” என குர்ஆனால் போற்றப்பட்ட சமுதாயம் கேவலப்பட்டு நிற்பதற்கு காரணம் குர் ஆனின் வழிகாட்டுதலை கைவிட்டது தான் காரணம்.

என்ன செய்ய வேண்டும் ?

உலகம் முழுவதும் மனித சமுதாயத்திடம் குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்திடம் சுபிட்சமும், மகிழ்ச்சியும் செழிப்பும் மலர வேண்டும் என்றால் குர்ஆன் அருளப்பட்ட இந்த ரமளான் மாதத்தில் குர்ஆனுட னான நம் தொடர்பை வலுப்படுத்த வேண்டும். “சடங்கு நூலாக” திரு குர்ஆனைப் பயன்படுத்துவதை விட்டு விட்டு நம் வாழ்வின் அஸ்தி வாரமாக குர்ஆனை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உலகின் அனைத்து மொழிகளிலும் திருகுர்ஆன் மொழிபெயர்ப்பு விரிவுரை களை நூற்களாகவும் குறுந்தகடு ( ) களாகவும் வெளிவந்துள்ளது. அர்த்தமும் விளக்கமும் புரிந்து குர்ஆனை ஓதி – விளங்கி, நமது வாழ்விலும் நமது சந்ததியினரின் வாழ்விலும் குர்ஆனின் வழிகாட்டு தல்களை கொண்டு வர வேண்டும். பின்பு அந்த வழிகாட்டுதல்களை பிறருக்கும் எத்தி வைக்க வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் திருகுர்ஆன் அருளப்பட்ட இந்த ரமளான் மாதத்தில் குர்ஆனை விளங்கி அதன் வழிகாட்டுதல்படி வாழ்க்கை வாழ நமக்கு வழிகாட்டுவானாக !


நன்றி : குர்ஆனின் குரல் மாத இதழ்

Friday, August 21, 2009

ரமளானின் மகிமை

ரமளானின் மகிமை

( தொகுப்பு : மவ்லவி அப்துல் காதர் ரஷாதி, புளியங்குடி )

http://www.mudukulathur.com/religiondetails.asp?id=144

புனிதமிகு ரமளான் மாதம் முஸ்லிம்களின் பரக்கத் என்னும் ரஹ்மத்துடைய அளப்பெரும் பொக்கிஷமாகும்.

ரமளான் மாதத்தின் முதல் இரவில் ஷைத்தான்களை விலங்கிடப்படுகிறது. நரகத்தின் தாழிட்டு சுவர்க்கம் என்னும் ரஹ்மத்தின் வாசல்களை திறந்து விடப்படுகிறது.

இப்புனிதமிகு மாதத்தின் மிகமுக்கிய வணக்கம் நோன்பாகும். நோன்பு என்றால் சுபுஹுஸாதிக் (மெய் வெள்ளை) அதிகாலையிலிருந்து சூரியன் மறையும் வரை நோன்பின் நிய்யத்துடன் உண்ணுவது, குடிப்பது, மனோ இச்சை சேர்க்கை செய்வது ஆகியவற்றிலிருந்து தவிர்த்து கொள்வதாகும்.

நோன்பு சம்பந்தமான ஹதீஸுகளில் நோன்பிருப்பதால் ஏற்படக்கூடிய பலாபலன்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக:

’’அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்போரின் முந்தைய பாவங்களனைத்தையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான்’’

’’நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரி மணத்தை விடவும் அதிகம் மதிப்புள்ளதாகும்’’

’’நோன்பிருப்போருக்கு அல்லாஹ்வே தனது புறத்திலிருந்து நன்மையை அளிக்கிறான்’’

’’ சுவனலோகத்தில் ‘ரய்யான்’ என்னும் வாசல்வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள்’’
நோன்பில்லாதவர்களுக்கு உண்டாகும் கடுமையான கொடூரமான வேதனையைப் பற்றியும்
ஹதீஸில் கூறப் பட்டுள்ளன.

‘’படைத்தவன் எஜமானனாகிய அல்லாஹுத்தஆலா அவனின் (நோன்பில்லாதவனின்) இழிவான இச்செயலால் அவனை கடுமையாக வெறுக்கிறான்’’

‘’வானவர்கள் இன்னும் நல்லோர்களின் கூட்டத்தில் அவனின் இச்செயல் இழிவானது தீயது என்று ஞாபிக்கப் படுகிறது’’

‘’ரமளான் மாதத்தில் நோன்பில்லாதவன் உண்ணக் குடிக்கச் சென்ற அவ்விடம் இவன் என்மீது பாவம்புரிந்தான் என்று மறுமையில் சாட்சி பகரும்’’

எனவே முஸ்லிம்கள் ரமளான் மாதத்தின் மகிமையை உணர்ந்து அதனின் கிரியைகளை ஏற்று நடப்பது மிக அவசியமாகும். மாறாக ரமளான் மாதத்தில் ஆற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றாது அசட்டையாகவும் பொழுது போக்காகவும் ரமளான் மாதத்தை கழித்து விட்டால் அதுவே தமது இம்மை மறுமையின் நஷ்ட வழிகேடாகும். இதனை முஸ்லிம்களாகிய நாம் உணர்ந்து செயல்படுவோமாக!

நோன்பு ஃபர்ளு கட்டாயக்கடமை

நோன்பு நோற்பது ஃபர்ளு – கட்டாயக்கடமை என்பது குர்ஆன், ஹதீஸ், இஜ்மாயே உம்மத் ஆகியவற்றால் உறுதிப் படுத்தப்பட்டதாகும்.

நோன்பு நோற்பது ஃபர்ளு – கட்டாயக்கடமை என்பதை மறுப்பவன் காஃபிர் ஆவான். தங்கடமின்றி நோன்பு வைக்காதவன் பெரும்பாவி தீயவனாவான்.

நோன்பின் நிய்யத்

நோன்பு வைப்பதற்கு நாவால்தான் நிய்யத் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்று நான் நோன்பு வைக்கிறேன் என்று மனத்தால் நிய்யத் செய்தாலே போது மானாதாகும்.

தமிழில் அல்லது அரபியில் நாவால் நிய்யத்செய்வது ஏற்றமானதாகும். நோன்பின் நிய்யத்:

நவைது ஸவ்மகதின் அன் அதாயி ஃபர்ளி ரமளானி ஹாதி ஹிஸ்ஸனதி லில்லாஹிதஆலா

இந்த வருடத்தின் ரமளான் மாதத்தின் ஃபர்ளான நோன்மை அதாவாக அல்லாஹுத்தஆலாவுக்காக நாளை நோற்க நிய்யத் செய்கிறேன்.

உண்ணாமல் குடிக்காமல் சேர்க்கை செய்யாமல் இருந்தும் நோன்பின் நிய்யத் இல்லையாகில் நோன்பாகாது.

நோன்பின் நேரம் சுபுஹு ஸாதிக் (மெய் வெள்ளை) அதிகாலையிலிருந்து ஆரம்பமாகின்றது. ரமளான் மாதத்தின் நோன்பின் நிய்யத்தை சுபுஹு ஸாதிக் முன்பாகவே நிய்யத் செய்வது ஏற்றமானதாகும். இருப்பினும் மதியம் உச்சத்திற்கு சிறிது நேரம் முன்பு வரையிலும் நிய்யத் செய்யலாம் கூடும். நிபந்தனையாதெனில் சுபுஹு ஸாதிகிலிருந்து சாப்பிடாமல் குடிக்காமல் உடலுறவு கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும்.

ஸஹர் – நோன்புபிடிப்பது

ஸஹர் சாப்பிடுவது சுன்னத்தாகும். பசி இல்லை என்றாலும் சிறிதளவேனும் சாப்பிடவேண்டும் அல்லது தண்ணீராகிலும் குடித்துக் கொள்ள வேண்டும்.

ஸஹர் உடைய நேரம் பிற்படுத்திச் சாப்பிடுவது சுன்னத் தாகும் எனினும் ஸஹர் உடைய நேரம் கழிந்து விட்டதோ என்று நேரத்தில் சந்தேகம் கொள்ளும் அளவு பிற்படுத்தக் கூடாது.


இஃப்தார் – நோன்பு திறப்பது

சூரியன் மறைந்துவிட்டது என்று உறுதியானதற்குப்பின் உடன் நோன்பைத் திறந்துவிடுவது முஸ்தகப் ஆகும். நேரம் தாழ்த்துவது மக்ருஹ் ஆகும்.

மேகத்துடைய காலங்களில் இஃப்தார் – நோன்பு திறப்பதைத் தாமதித்தும் ஸஹர் – நோன்பு பிடிப்பதை தீவிர மாக்குவதும் அவசியமாகும்.

நோன்பு திறக்கும் நேரத்தில் தனது கடுமையான தேவை கம்மியாகும். அளவுக்கு முடிந்தால் சாப்பிட்டுக் குடித்துக் கொள்ள வேண்டும். அதனால் மக்ரிப் உடைய தொழுகை மனநிம்மதியுடன் பயபக்தியாக தொழுது கொள்வதற்கு வழி வகுக்கும்.

இமாம் மக்ரிப் உடைய தொழுகைக்கு தீவிரமாக்காமல் முக்ததி – பின்தொடரும் ஜனங்களை கவனத்தில்கொண்டு சிறிது நேரம் தாமதிக்கவும். அதனால் ஜனங்கள் நிம்மதியுடன் வாய் கொப்பளித்து ஜமாஅத்தில் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

இனிப்பான பொருளைக்கொண்டு நோன்பு திறப்பது நல்லதாகும். பேரீத்தம் பழம், தண்ணீர் அல்லது மற்றவை களைக்கொண்டும் நோன்பு திறக்கலாம். சிலர் உப்பைக் கொண்டு நோன்பு திறப்பது மிகுந்த நன்மையளிக்கும் என விளங்கிக்கொண்டுள்ளனர். அது தவறாகும்.


நோன்பு திறக்கும் துஆ

அல்லாஹும்ம லகசும்து வபிக ஆமன்து வஅலைக தவக்கல்து வஅலா ரிஜ்கிக அஃப்தர்து பதகப்பல்மின்னி.

’’யா அல்லாஹ்! உனக்காகவே நோன்பு வைத்தேன், உன்னைக் கொண்டே விசுவாசம் கொண்டேன், உன் மீதே நம்பிக்கை வைத்தேன், உன்னுடைய இரணம் கொண்டே நோன்பு திறக்கின்றேன் என்னுடைய நோன்பை ஏற்றுக் கொள்வாயாக!

நோன்பின் முறித்தல்கள்

1)மூக்கு அல்லது காதில் மருந்து செலுத்துவது. 2) வேண்டு மென்றே வாய்நிரம்ப வாந்தியெடுப்பது. 3)வாய்கொப்பளிக்கும் போது தொண்டையினுள் தண்ணீர் சென்றுவிடுவது. 4) கல், மண், இரும்பு போன்றவற்றை விழுங்குவது. 5) சூரியன் மறைந்துவிட்டது என தவறுதலாக எண்ணிக்கொண்டு நோன்பு திறப்பது. 6) இரவு என தவறுதலாக எண்ணிக் கொண்டு சுபுஹு ஸாதிக்குப்பின் சாப்பிடுவது. 7) பீடி, சிகரெட், குடிப்பது, வெற்றிலைப்பாக்கு சுவைப்பது. 8)அதிகம் இரத்தம் கலந்த எச்சிலை விழுங்குவது. 9) மலம் கழிக்கும் துவாரத்தில் மருந்திடுவது, பெண் சிறுநீர் கழிக்கும் இடத்தில் மருந்திட்டால் நோன்பு முறிந்துவிடும் ஆணுக்கு அல்ல. 10) பற்களின் இடரில் அகப்பட்ட மாமிசம் போன்றவைகளை வாயிலிருந்து வெளியாக்கிப் பின்னர் அதை உட்கொண்டால் நோன்பு முறிந்து விடும். வாயினுள்ளே தனது நாவால் அதனை அகற்றி அதுவும் ஒரு சுண்டல் அளவு பருமன் உள்ளதாக இருப்பின் அதை உட்கொள்வதால் நோன்பு முறிந்துவிடும். ஒரு சுண்டல் அளவைவிட சிறியதானால் நோன்பு முறியாது.

வேண்டுமென்றே நோன்பை முறித்தால் அந்தநோன்பை ‘களா’ செய்யவேண்டும். மேலும் கப்பாரா (பரிகாரமும்) வாஜிபாகும்.

நோன்புடைய கப்பாரா - பரிகாரமாகிறது.

தொடர்ந்து இரண்டு மாதகாலம் வரை 60 நாட்கள் இடைவிடாது நோன்பு நோற்கவேண்டும். இடையில் விடுபட்டுவிட்டால் திரும்பவும் 60 நாட்கள் இடைவிடாது நோன்பிருக்க வேண்டும்.

நோன்புவைப்பதற்கு சக்தியற்றிருந்தால் அறுபது மிஸ்கீன் களுக்கு காலையிலும் மாலையிலும் வயிறுநிரம்ப உணவளிக்க வேண்டும். அல்லது அறுபது மிஸ்கீன்களுக்கு ஸதகயே ஃபித்ர் உடைய அளவு அரைமரக்கால் தானியம் அல்லது தானியத்துடைய மதிப்பின் பணத்தை கொடுக்க வேண்டும்.


நோன்பை முறிக்காதவைகள்

1)மறதியாக சாப்பிடுவது, குடிப்பது, சேர்க்கை செய்வது. 2)மிஸ்வாக் பல்துலக்குவது. 3) தனது நாட்டமின்றி வாந்தி வருவது. 4) நறுமணம் நுகர்வது. 5) தனது விருப்பமின்றி தூசி, புளுதி, ஈ, கொசு தொண்டையினுள் செல்லுவது. 6) தலை மீசையின் மீது எண்ணெய் தடவுவது. 7) தூக்கத்தில் ஸ்கலிதமாவது. 8) கண்ணில் சுர்மா இடுவது, மருந்து அல்லது தண்ணீர் ஊற்றுவது. 9) எச்சில், சளியை விழுங்குவது. 10) வேண்டுமென்றே வாயநிம்பாமல் சிறிதளவு வாந்தியெடுப்பது. 11) இரவில் உடலுறவுகொண்டு சுபுஹு ஸாதிக்கு முன்பே குளிக்காமலிருப்பது. 12) இன்ஜெக்‌ஷன் – டாக்டரிடம் ஊசிமருந்து எடுப்பது. இவைகளினால் நோன்பு முறிந்துவிடாது.


நோன்பின் மக்ருஹ்கள்

1)அவசியமின்றி ஏதாவது பொருளை வாயில்போட்டு சுவைப்பது அல்லது உப்பு போன்றவைகளை சுவைத்து துப்புவது. 2) புகையிலை கொண்டு பல்துலக்குவது. 3)முழுக்குடன் குளிக்காமல் பகல் முழுவதும் கழிப்பது. 4) இரத்தம் குத்தி வாங்குவது. 5) புறம்பேசுவது அதாவது பிறரின் குறையை மறைமுகமாக பேசுவது இச்செயல் அனைத்துக் காலங்களிலும் ஹராமாகும். அதிலும் ரமளானின் காலத்தில் புறம்பேசுவது குற்றத்தை அதிகரிக்கிறது. 6) நோன்பு வைத்துக்கொண்டு ஏசி பேசி சண்டையிடுவது.
இவைகள் அனைத்தும் நோன்பின் மக்ருஹ் ஆகும். நோன்பு முறிந்துவிடாது.


நோன்பு வைக்காமலிருப்பதற்கு
அனுமதிக்கப்பட்டவர்கள்

1)வியாதியின் காரணத்தால் நோன்பிருக்க சக்தியற்றிருந்தால் அல்லது வியாதி அதிகரித்துவிடும் என்றிருந்தால் நோன்பில் லாமல் இருப்பதற்கு அனுமதி உண்டு. பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.
2) கற்பஸ்திரி நோன்பிருப்பது தனது அல்லது தன்னுடைய குழந்தையின் உயிருக்கு ஆபத்தாகும் என்றிருப்பின் அச்சமயம் நோன்பு நோற்காமலிருப்பதற்கு அனுமதியுண்டு பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.
3) தனது அல்லது பிறரின் குழந்தைக்கு பால் குடிப்பாட்டும் பெண் நோன்பு நோற்பதால் குழந்தைக்கு பால் குறைந்து விடும் கஷ்டம் ஏற்படும் என்றிருப்பின் அச்சமயம் நோன்பு நோற்காமல் பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.
4) பிரயாணம் செய்யும் முஃஸாபிர் (சுமார் 48 – மைல் தொலை தூரம் பயணம் செல்பவர்) நோன்பு வைக்காமலிருப் பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

பிரயாணத்தில் கஷ்டம் இடைஞ்சலில்லாமலிருப்பின் நோன்பு நோற்பதுவே ஏற்றமானதாகும். பிரயாணத்தில் தனக்கு அல்லது தன்னுடனிருக்கும் சஹாக்களுக்கு நோன்பிருப்பதினால் கஷ்டம் ஏற்படும் என்றால் நோன்பில்லாமலிருப்பதுவே நல்லதாகும்.
5) நோன்புடன் பிரயாணத்தைத் தொடர்ந்தால் அந்த நோன்பை பூர்த்திசெய்வது அவசியமாகும். பிரயாணத்தி லிருந்து நோன்பில்லாமல் சாப்பிட்டு, குடித்து ஊர் திரும்பினால் அன்றைய மீதமான நேரங்களை நோன்பைப் போன்றே இருந்து கழிக்க வேண்டும்.
6) நோன்பை விட்டு விடு என்று கொலைமிரட்டலைக் கொண்டு பயமுறுத்தப்பட்டால் நோன்பைவிட்டு விடுவதற்கு அனுமதியுண்டு. பின்னர் அதனை ‘களா’ செய்யவேண்டும்.
7) வியாதி, பசி, தாகத்தின் அதிகரிப்பால் அவரை நோட்ட மிட்ட தீன்தாரியான முஸ்லிம் வைத்தியர் அல்லது டாக்டர் உயிருக்கு ஆபத்து என குறிப்பிட்டால் நோன்பை விட்டு விடுவதற்கு அனுமதியென்ன! கட்டாயக்கடமையுமாகும். பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமுமாகும்.
8) ஹைள் – மாதவிடாய் , நிபாஸ் – பிரசவத்திற்கு பின் ஏற்படும் இரத்தம் இக்காலங்களில் பெண் நோன்பிருக்காமல் விடுபட்ட அந்த நோன்பை பின்னர் ‘களா’ செய்வது கட்டாயமாகும்.


தராவீஹின் சட்டங்கள்

புனித ரமளான் மாதத்தின் இரவுகளில் இஷாவுடைய ஃபர்ளு தொழுகைக்குப்பின் 20 ரகஅத் தராவீஹ் தொழுகை தொழுவது சுன்னத்தே முஅக்கதாவாகும். தராவீஹ் தொழுகையில் ஒரு தடவை குர்ஆன்ஷரீப் ஓதுவது அல்லது கேட்பது சுன்னத்தாகும்.

எனவே தராவீஹ் 20 ரகஅத் தொழுவது – குர்ஆன்ஷரீப் ஒரு தடவை தராவீஹ் தொழுகையில் ஓதுவது அல்லது கேட்பது ஆக இவ்விரண்டும் தனித்தனியான சுன்னத்தாகும். ஒருசில இரவுகளில் பூராகுர்ஆன்ஷரீபையும் தராவீஹ் தொழுகையில் ஓதக்கேட்டு மீதமான நாட்களில் தராவீஹ் தொழுகையை விட்டு விடுவோருக்கு ஒரு சுன்னத்தை நிறை வேற்றிய நன்மைதான் கிடைக்கும்.

குர்ஆன்ஷரீப் மனனமான ஹாபிஸ் கிடைக்காவிட்டால் அலம்தரகைப போன்ற சிறு சூராக்களை மட்டும் ஓதி தராவீஹ் தொழுகையை நிறைவேற்றிவிடலாம்.

இஷா ஃபர்ளு தொழுகைக்கு முன் தராவீஹ் தொழுகை தொழுவது கூடாது. எனவே
பள்ளிவாசலில் இஷா ஃபர்ளு ஜமாஅத் முடிந்ததின் பின் வருவோர். இஷாஉடைய ஃபர்ளு தொழுகையை நிறைவேற்றிய பின்புதான் தராவீஹ் தொழுகையில் சேர வேண்டும். விடுபட்ட தராவீஹ் தொழுகையை தராவீஹ் ஜமாஅத் முடிந்ததற்குப் பின்பு தனிமையாக தொழுது கொள்ள வேண்டும்.

வித்ரு தொழுகையை தராவீஹ் தொழுகைக்கு முன் அல்லது பின் தொழுது கொள்ளலாம். எனவே தராவீஹ் தொழுகை பாக்கியுள்ளவர் வித்ரு தொழுகையை ஜமா அத்துடன் நிறைவேற்றிவிட்டு பின்னர் விடுபட்ட தராவீஹ் தொழுகையை தனியாக தொழுது கொள்ளலாம்.

தராவீஹ் தொழுகையில் குர்ஆன் ஷரீப் உடைய எழுத்துக் களின் உச்சரிப்புகள் விடுபடும் விதத்தில் மிகவேகமாக ஓதுவது பெரும்பாவமாகும். அவ்வாறு ஓதுவதால் ஓதக் கூடிய இமாமும், ஓதுவதைக் கேட்கும் முக்ததிகளுக்கும் எவ்வித நன்மையும் கிட்டாது.

ஒவ்வொரு நான்கு ரகஅத்திற்குப் பின்பும் சிறிதுநேரம் அமர்ந்திருப்பது முஸ்தஹப்பாகும். தொழுகக்கூடியவர்களின் சவுகரியத்தைக் கருதி இமாம் ருகூவு. சுஜூதுஉடைய தஸ்பீஹ்கள், ஸலவாத் போன்றவற்றை ஓதாமல் விட்டு விடுவது கூடாது.

குர்ஆன்ஷரீப் கத்தம்செய்யும் நாளில் அளவுக்கதிகமான மின் விளக்குகளைக் கொண்டு அலங்கரிப்பது போன்ற இஸ்ராப் – மேல்மிச்சமான செலவுகள் செய்வது தவிர்க்க வேண்டியவைகளாகும். இனிப்பு வழங்குவதற்கு வலுக் கட்டாயமாக பணம் வசூலிப்பதும் பள்ளியில் இனிப்பு வழங்கும் சமயம் இரைச்சலிட்டுக் கூச்சலிடுவதும் ஒன்றுக் கொன்று ஏசிப்பேசிக்கொள்வதும் மார்க்க முரணான காரியங்களாகும்.


இஃதிகாப்

புனித் ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் இஃதிகாப் இருப்பது சுன்னத்தே முஅக்கதா அலல் கிபாயாவாகும். ஊரில் ஒருவர் மட்டும் இஃதிகாப் இருந்தால் அதுவே மற்றெல்லோருடைய பொருப்பிலிருந்தும் கடமை விடுபட்டு விடுகிறது. ஒருவர்கூட இஃதிகாபில் இல்லையாகில் எல்லோரும் சுன்னத்தை விட்ட பாவிகளாகி விடுவார்கள்.

ஆண்கள் பள்ளிவாசலிலும் பெண்கள் தன்னுடைய வீட்டின் குறிப்பான ஒரு பகுதியிலும் இஃதிகாப் இருக்க வேண்டும். இஃதிகாப் உடைய நிய்யத்தும் பெண்கள் ஹைளு, நிபாஸை விட்டும் சுத்தமாக இருத்தலும் வேண்டும். இஃதிகாப் இருக்கும் காலங்களில் ஹைளு வந்துவிட்டால் அல்லது குழந்தை பிறந்துவிட்டால் இஃதிகாபை விட்டுவிடவேண்டும்.

இஃதிகாபின்போது உடலுறவு கொள்வது, முத்தமிடுவது, கட்டிபிடிப்பது கூடாது.

இஃதிகாப் இருக்கும் ஆண் தேவையற்று பள்ளிவாசலை விட்டும் பெண் தனது இஃதிகாபின் இடத்தை விட்டும் வெளியாகுவது கூடாது. தேவையில்லாமல் இஃதிகாபின் இடத்தை விட்டும் வெளியாகுவது இஃதிகாபை முறித்து விடும் செயலாகும். இதுவரை எத்தனை நாட்கள் இஃதிகாபில் இருந்தாரோ அதுமட்டும் கூடிவிடும்.

ஆம், தன்னுடைய அல்லது மார்க்கத்தின் தேவையைக் கருதி வெளிக்கிளம்புவது கூடும்.

1)தன்னுடைய தேவைக்கு வெளிக்கிளம்புவது உதாரணமாக: மலம், ஜலம், கழிப்பதற்கு வெளியாகுவது.

2)மார்க்கத்தின் தேவையைக் கருதி வெளியாகுவது உதாரணமாக இஃதிகாப் இருக்கும் பள்ளிவாசலில் ஜும்ஆ நடைபெறவில்லையாகில் ஜும்ஆ தொழுகைக்காக வேண்டி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு வெளிக்கிழம்பிச் செல்வது.

அறிந்தோ அல்லது மறதியாகவோ உடலுறவு கொள்வது இஃதிகாபை முறித்துவிடும். இதில் ஞாபக மறதியைக் கவனிக்கப்பட மாட்டாது. இஃதிகாபில் முற்றிலும் வாய்மூடி இருப்பது மக்ரூஹ் ஆகும் வீண்பேச்சில் ஈடுபடாமல் குர்ஆன் ஷரீப் ஓதுவதிலும் மற்ற வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட வேண்டும்.