Thursday, May 8, 2008

ஷார்ஜாவில் தேரிருவேலி ஜமாஅத் உதயம்

ஷார்ஜாவில் தேரிருவேலி ஜமாஅத் உதயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாச்சாரத் தலைநகராம் ஷார்ஜாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முதுகுளத்தூர் அருகேயுள்ள தேரிருவேலியைச் சேர்ந்த அனைவரும் ஒருங்கிணைந்து ஐக்கிய அரபு அமீரக தேரிருவேலி ஜமாஅத் ஒன்றினை ஏற்படுத்தினர்.

தாயகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் ‘சிராஜுல் உம்மத்' மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்ப்யீ அவர்களது ஆலோசனையின் பேரில் தேரிருவேலி ஜமாஅத் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய நிர்வாகக்குழு தேர்வு செய்யப்படும் வரை மௌலவி அலி பாதுஷா மன்பயீ அவர்கள் ஜமாஅத்தின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்.

மௌலவி சாதிக் மன்பயீ அவர்கள் ஹஜ்ரத் பஷீர் சேட் ஆலிம் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினார். அதனைத் தொடர்ந்து மௌலவி பஷீர் சேட் ஆலிம் தனது ஏற்புரையில் முதுகுளத்தூர் ஜமாஅத்தினர் அமீரகத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதைப் போன்று தேரிருவேலி ஜமாஅத்தினரும் சமுதாயப் பணிகளில் ஈடுபட முனைந்திருப்பதைப் பாராட்டினார். முதுகுளத்தூர் சமுதாய மாணவர்களுக்கு தனிப்பயிற்சி அளிப்பதைப்போன்று இன்று மாவட்டம் முழுவதும் இத்தகைய பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
முதுகுளத்தூர் மற்றும் தேரிருவேலி ஜமாஅத்தினர் இத்தகைய பணிகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டு ஊருக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ள பல பணிகளை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் முதுகுளத்தூர் ஜமாஅத் மேற்கொண்டுவரும் சமுதாயப்பணிகளை எடுத்துரைத்தார்.

கூட்டத்தில் முஹம்மது அலி, ஹபிப் திவான், ஏ. அஹ்மத் இஸ்மத்துல்லாஹ், ஏ. அஹ்மது இம்தாதுல்லாஹ் உள்ளிட்ட தேரிருவேலி மற்றும் முதுகுளத்தூர் ஜமாஅத்தினர் கலந்து கொண்டனர். துஆவிற்குப் பின்னர் நிகழ்ச்சி நிறைவுற்றது.

www.muduvaibasheersaitalim.blogspot.com