Tuesday, August 3, 2010

ரமளானின் மூன்று பகுதிகள்

ரமளானின் மூன்று பகுதிகள்

புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமலானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமலானின் 30 நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது.

இந்த கண்ணிய மிக்க மாதத்தின் முப்பது நாட்களைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகையில் அல்லாஹ் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக அடையாளம் காட்டியுள்ளார்கள் என்று கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட்கொடையாகவும்
நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும்
கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது.

அல் ஹதீஸ் ஆதார நூல் இப்னுகுஜைமா பாகம் 3 எண் 191

முதலாவது பத்து நாட்களில்

இந்த ஹதீஸின் அடிப்படையையும் நாம் கவனத்தில் கொண்டு முதலாவது பத்து நாட்களில், அதிகமதிகமாக அல்லாஹ்விடம் துவாச் செய்து அவனால் வழங்கப்பட்ட உயிர், பொருள், இதர செல்வங்கள், கல்வி, அறிவு, ஆற்றல்கள், திறமைகள், பார்வை, செவி, புலன், நுகர்தல், உணர்தல் போன்ற அனைத்து விதமான அருட் கொடைகளையும் நினைவு கூரவும் அவற்றிற்கு முறையாக நன்றி செலுத்திடவும் அதன் மூலம் மேலும் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் அதிகமதிகமான அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெறவும் முயல வேண்டும்

இரண்டாவது பத்தில்
முறையாக அல்லாஹ்விடம் மனமுருகி அதிகம் அதிகம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்றைப் பற்றி மனம் வருந்தி, மீண்டும் அவற்றில் ஈடுபடாமல் இருக்க உறுதியெடுத்துக் கொண்டு அனைத்துத் தொழுகைகளிலும் குறிப்பாக இரவுத் தொழுகைகளிலும் பாவமன்னிப்பையும் இவற்றில் இருந்து பாதுகாவல் பெற அல்லாஹ்வின் உதவியும் கேட்க வேண்டும் என்று உணரலாம்.

மூன்றாவது பத்து நாட்கள் நரகத்தில் இருந்து பாதுகாப்பு தேடவேண்டும்
"முஃமின்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் இடுகின்ற கட்டளைகளில் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்வார்கள்." (அல் குர்ஆன் 66 : 6)

"எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" (அல்குர்ஆன் 2 :201)

அதே போல் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த அந்தஸ்தான சுவனத்தில் இடம் வேண்டியும் பணிவுடனும் மனமுருகியும் நம்பிக்கையுடனும் பிராத்திக்க வேண்டும். அவற்றின்பால் கொண்டு செல்லும் நற்செயல்களில் தொடர்ந்து இறுதி மூச்சுவரை ஈடுபட உறுதி பூண்டு உதவி கோரி பிராத்திக்க வேண்டும். இதையும் ரமலானிலும் ரமலான் அல்லாத ஏனைய நாட்களிலும் தொடர்ந்து கடைப்பிடித்திடல் வேண்டும்.

Sunday, August 1, 2010

சிறுகதை : நான் தான் ஷைத்தான்

சிறுகதை : நான் தான் ஷைத்தான்

(ஷேக் சிந்தாமதார்)

அதிகாலை நாலரை மணிக்கு “பஜ்ர்” தொழுகைக்காக வீட்டிலேயே ஒளு செய்து கொண்டு நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் பள்ளிக்குப் புறப்பட்டார் முஸ்தபா. தெரு விளக்குகள் சரியாக எரியாத காரணத்தாலும் சமீபத்தில் பெய்த மழையாலும் ஓரிடத்தில் கால் தவறிச் சேற்றுக்குள் விழுந்து விட்டார்.

உடைகள் முழுக்கச் சேறாகிவிடவே, வீடு திரும்பி அவற்றை மாற்றிக் கொண்டு மீண்டும் ‘ஒளு’ செய்து கொண்டு புறப்பட்டார்.

அந்த இடத்தை மிகக் கவனமாகக் கடந்து விட்ட போதிலும், சற்று தள்ளி வேறொரு இடத்தில் அதே மாதிரி கால்தவறி மீண்டும் சேற்றில் விழுந்து விட்டார்.

திரும்பவும் வீடு சென்று உடைகளை மாற்றிக் கொண்டு, மிகவும் தாமதமாகிவிட்டதை உணர்ந்து அவசரமாகப் படியிறங்கியபோது, கையில் ‘லாந்தர்’ விளக்குடன் ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார். “பள்ளிக்குத்தானே போறீங்க பாய்? வாங்க நான் கூட்டிட்டுப் போறேன்” என்றவாறு முஸ்தபாவின் கையை பிடித்து அழைத்துச் சென்றார்.

ஜாக்கிரதையாக நடக்கும் கவனத்தில் எதுவும் பேசிக்கொள்ளாமல் வந்த முஸ்தபா, பள்ளிவாசலை நெருங்கியதும் “நீங்கள் யாரு, தெரியலையே?” என்றார் அந்த முதயவரிடம்.

“நான் தான் ஷைத்தான்” என்று சிரித்தார் அவர்

அதிர்ச்சியுடன் நோக்கிய முஸ்தபாவிடம் அமைதியாகத் தொடர்ந்தார் அவர். “உங்களை சேற்றிலே விழ வச்சது நான்தான். ஆனா நீங்க திரும்பவும் வந்துட்டீங்க. இரண்டாவது தடவையும் விழ செஞ்சேன் அப்படியும் விடாமே நீங்க மூணாவது தடவையும் வந்துட்டீங்க. முதல் தடவை சேற்றிலே விழுந்திட்டு நீங்க திரும்பவும் கிளம்பினப்பவே அல்லாஹ் உங்க பாவங்களை மன்னிச்சிட்டான். மீண்டும் ஒரு தடவையும் நீங்க புறப்பட்டதும் உங்க குடும்பத்தார் பாவங்களையும் மன்னிச்சிட்டான். இன்னொரு தடவையும் உங்களை விழவச்சு அதுக்கப்புறம் நீங்க கிளம்பிட்டா, ஊர்க்காரங்க எல்லாரோட பாவங்களையும் மன்னிச்சிடப் போறானேன்னு பயந்துதான் நானே பத்திரமாகக் கூட்டிட்டு வந்தேன்” என்றவாறே நடக்கத் தொடங்கினார் அவர்.

( நர்கிஸ் பெண்கள் மாத இதழ், மே 2010 )

Saturday, July 3, 2010

இந்நாளுக்கு - ஈடுஉண்டோ?

இந்நாளுக்கு - ஈடுஉண்டோ?

நோக்கத்தில் பூக்கும் ஆக்கம் -நோன்பாளர் பக்கம் நிற்கும்!
நோட்டத்தில் நாட்டம் காட்டும் -நோன்பாளர் வாட்டம் காக்கும்!
தேட்டத்தில் திருவருள் காட்டும் -தெய்வீகம் உய்வீகம் பூக்கும்!
வட்டத்தில் வாஞ்சை வளரும் -வளருகின்ற வாகை நோக்கம்!

முப்பது நாள் வாழும் வாழ்க்கை –முனைப்பான ஞான சேர்க்கை!
எப்போதும் ஈமான் இதயம் -இருந்திடும் தீனின் வாழ்க்கை!
தப்பாது எடுத்தடி வைக்கும் -தகமையே உள்ளின் ஓர்மை!
செப்பிடும் மொழியின் நன்மை –சேர்த்திடும் இன்பச்செம்மை!

முழு ஆண்டு வாழ்வதற்கு –முழப்பயிற்சி நோன்பின் மான்பு!
பழுதறவே வாழ்க் கற்கும் -பக்குவமே விரத வேள்வி!
தொழுது இறையை தூய்மை பெறுதல் -துன்யாவின் இன்ப மகிழ்ச்சி!
கெழுதகையாய் ஈகை தந்த –கிளர்ச்சியதே வாழ்வின் புரட்சி!

ஈகையின் ஏற்றம் சொல்லும் -எழில் அதுவே ஈதுபெருநாள்!
வாகையின் வளர்ச்சிக்குக் காட்டும் -வனப்பு அதுவே ஈதுபெருநாள்!
தோகையாய் வண்ணம் மின்னும் -தூய்மை அதே ஈதுபெருநாள்
ஆஹா…! இந்நாளுக்கீடு –அகிலத்தில் வேறு உண்டோ?


ஒருவனுக்கு இறைவன் உபகாரம் செய்து அதற்கு
அவன் நன்றி கடனுக்காக அல்ஹம்துலில்லாஹ் என்று கூறு
வானேயானால் அவனுக்கு அல்லாஹ் முதலில் வழங்கியதை
விட அதிகமான உபகாரங்களை கொடுத்து விடுகிறான்.

Friday, June 25, 2010

ஈமானின் •பர்ளுகள்

ஈமானின் •பர்ளுகள்
-ஷாஹா-

ஈமான் பொருளைக் கூறிடுவேன்
இதமாய் அதனைக் கேட்டிடுவீர்
ஈமான் பொருளாம் நம்பிக்கை
என்று மனத்தில் வைத்திடுவீர்!
கண்ணால் பார்க்கும் பொருளெல்லாம்
ஈமானதிலே சேர்வதில்லை
எண்ணமதிலே வேரூன்றி
ஏந்தி வளர்வதே ஈமானாம்!
ஆறு கிளைகள் அதற்குண்டு
அடுக்கடுக்காகச் சொல்லுகிறேன்
அதையும் மனத்தில் அன்போடு
அடக்கி வைப்பீர் மானிடரே!
அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான்
அவனே எல்லாம் வல்லவனாம்
என்றே ஈமான் முதல் பர்ளை
எண்ணி மனத்தில் வைத்திடுவீர்!
இறைவன் கட்டளை நிறைவேற்ற
இருக்கின்றார்கள் வானவர்கள்
ஜிப்ரீல் முதலாம் மலக்குகளை
நம்புவதே இரண்டாம் பர்ளாம்!
கெட்டழியும் மனிதர்குலம்
தட்டழிந்து திரியாமல்
கட்டுக்கோப்பாய் வாழ்வதற்கு
காட்டிய ஒளியே நபிமார்கள்!
ஆதி மனிதர் ஆதம் முதல்
அருமை அண்ணல் அவர்கள்வரை
எண்ணில் அடங்கா நபிமார்கள்
மண்ணில் தோன்றினர் என நம்பு!
பிரளயம் கண்ட நூஹ¤நபி
இறைவன் தோழர் இபுறாஹீம்
மூஸா ஈஸா தாவூதும்
எங்கள் நபிகள் கோமானும்
நபிகள் என்று ஏற்பதுவே
மூன்றாம் கடமை ஈமானில்!



லட்சத்திருபத்து நாலாயிரம்
நபிமார் என்ற தலைவர்களில்
மூஸா தாவூத் இருவருடன்
ஈஸா முஹம்மத் இருவருக்கும்
நான்கு வேதங்கள் இறக்கித் தந்தான்
நாயன் கருணைக் கனிவோடு!
மூஸா பெற்றார் தவ்ராத்தை
ஸபூரைப் பெற்றார் தாவூதும்
ஈஸா பெற்றார் இஞ்சீலை
இணையில்லாத புர்கானை
எங்கள் நபிகள் கோமானார்
இறஸ¥லுல்லாஹ் பெற்றார்கள்!
இந்தவேதங்கள் நான்கினையும்
நயமுடன் ஏற்பது ஈமானில்
நான்காம் கடமையாகும் இதை
நன்றாய் மனதில் வைத்திடுவீர்!
மரணத்தோடு முடிவதில்லை
மனிதர் வாழ்க்கை அத்தனையும்
மரணத்தின்பின் தொடர்ந்திடுமே
மங்கா மறையா நெடுவாழ்க்கை!
மரணம் என்ற போர்வைக்குள்
மறைந்த ஜீவன் அத்தனையும்
மறுபடியும் உயிர் பெற்றங்கே
மஹ்ஷர் மைதான் வந்தடையும்!
அல்லாஹ் எதிரில் நிறுத்தாட்டி
அடியான் உலகில் செய்துவந்த
பாவம் நன்மை இரண்டினையும்
பாகுபடுத்தும் கடும் நாளாம்
கியாமத் என்ற கடும் நாளை
நம்பி அதனை பயத்தோடு
ஏற்பதுவே ஈமானுடைய
ஐந்தாம் பர்ளென்றெடுத்திடுவாய்!
நன்மை தீமை இரண்டினையும்
இன்பம் துன்பம் இரண்டினையும்
லாபம் நஷ்டம் இரண்டினையும்
தருபவன் அல்லாஹ் என நம்பு!
தக்தீர் என்ற தத்துவமே
இதில் அடங்கியிருக்கும் அழகைப்பார்!
தக்தீர் என்ற சத்தியத்தை
நம்புவதே ஆறாம் பர்ளாம்!

நண்பா ஈமான் கடமைகளை
நயமுடன் நான் கூறிவிட்டேன்
சுருக்கமானதென்றாலும்
உருக்கமாகக் கொள்வாய்நீ !
பசுவின் பாலும் வெள்ளைதான்
பாகாய்த் தெரியும் சுண்ணாம்பும்
நீரைக் கலந்தால் வெள்ளைதான்
இரண்டும் ஒன்றாய் ஆயிடுமோ?
இஸ்லாம் என்ற பெயரோடு
முஸ்லிம் பெயரை வைத்தாலும்
ஈமான் இஸ்லாம் தெரியாமல்
இருப்பவர்கள் முஸ்லீமா?
இஸ்லாம் என்ற கோட்டுக்குள்
இருப்பவர்கள்தான் முஸ்லிம்கள்
கோட்டைவிட்டு வெளியானால்
கூட்டைவிட்ட குஞ்சாவாய்!
எனவே அல்லாஹ் காட்டிடுவாய்
இனிதாம் நல்ல பாதைகளை!
உனது விருப்பப்படி நடக்கும்
உத்தமனாய் எனை ஆக்கிடுவாய்!
உற்றம் சுற்றம் பெற்றோர்கள்
கற்றுத்தந்த குருமார்கள்
அனைவரையும்நற் கூட்டத்திலே
ஆக்கித்தருவாய் ஆண்டவனே!
ஆமீன் ஆமீன் யாரப்பல்
ஆலமீனே ஆண்டவனே!
ஆமீன் ஆமீன் யாரப்பல்
ஆலமீனே அல்லாஹ்வே!


( ப‌ர்மிய‌ த‌மிழ் எழுத்தாள‌ர் )

Sunday, June 20, 2010

இஸ்லாமியா வரலாற்றில் இந்த மாதம் : ரஜப்

இஸ்லாமியா வரலாற்றில் இந்த மாதம் : ரஜப்

கண்ணியமிக்க நான்கு மாதங்களில் ரஜப் மாதமும் ஒன்றகும்
. துல்கஅதா, துல்ஹஜ்,முஹர்ரம்,ரஜப் ஆகிய இந்த மாதங்களில் போர் செய்வது தடை
செய்யப்பட்டுள்ளதால் இதை கண்ணியமிக்க மாதங்கள் என்று சொல்லப்படுகிறது

இஸ்ரா, மிஃராஜ்: நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து தாயிஃப் நகருக்குச்சென்று ஏகத்துவப்
பிரச்சாரத்தை முடித்துவிட்டு வந்தபின்பு , மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்வதற்கு
ஒருவருடத்திற்கு முன் , நபித்துவத்தின் பனிரெண்டாவது வருடம், ரஜப் மாதம்
27 ஆம் நாள் இஸ்ரா, மிஃராஜ் என்னும் முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன.
மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராம் (கஃபதுல்லாஹ்)இல் இருந்து, ஜெரூசலத்திலுள்ள பைத்துல் முகத்தஸ் (மஸ்ஜிதுல் அக்ஸா) வரை சென்றது இஸ்ரா எனப்படும்.
‘‘தன் அடியாரை (கஃபாவாகிய) சிறப்புப் பெற்ற பள்ளியிலிருந்து (பைத்துல்
முகத்தஸிலுள்ள ) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு, இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகப் பரிசுத்தமானவன்
." (குர்ஆன் 17:01)
பைத்துல் முகத்தஸிலிருந்து அல்லஹுத்தஆலாவைச் சந்திக்க நபி(ஸல்)
அவர்கள் வானுலகப் பயணம் சென்றது மிஃராஜ் ஆகும்
.
மிஃராஜின் போது தான் இஸ்லாமிய கடமைகளில் மிக முக்கிய கடமையாகிய "தொழுகை" கடமையாக்கப்பட்டது.

அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் அல்அஸதி (ரழி) படைப்பிரிவு:

நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த 17-வது மாதத்தில்
(ரஜப் மாதத்தில்), மக்கா மற்றும் தாயிஃபிற்கு மத்தியிலுள்ள "நக்லா" என்ற
இடத்திற்கு அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் அல்அஸதி (ரழி) அவர்களுடன் எட்டு
முஹாஜிரீன்களைக் கொண்ட ஒரு குழுவை அனுப்பினார்கள். "நக்லா"வில்
தங்கி அங்கு வரும் வியாபாரக் கூட்டத்தை கண்காணித்து தகவல் அனுப்புமாறு
கட்டளையிட்டிருந்தார்கள் . கண்காணிக்கச் சென்றவர்கள், அங்கு வந்த வியா-
பாரக் குழுவினருடன் போரிட்டு விட்டார்கள். போர் தடை செய்யப்பட்ட ரஜப்
மாதத்தில் முஸ்லிம்கள் போரிட்டதால் , முஸ்லிம்கள்மீது குரைஷிகள் பழி
சுமத்தி செய்தி பரப்பினர். அச்சமயத்தில் தான் இறைவன் திருக்குர்ஆனில்
2;217 -வது வசனத்தை இறக்கி வைத்து, புனித மாதத்தில் முஸ்லிம்கள் போர்
செய்ததை விட , இணைவைப்போரின் செயல்கள் மன்னிக்க முடியாத மாபெரும்
குற்றம் என்று தெளிவுபடுத்தினான்.
(நபியே! துல்கஅதா,துல்ஹஜ்,முஹர்ரம்,ரஜப் ஆகிய போர் தடை செய்யத்
தடை செய்யப்பட்ட ) புனிதமான மாதம் பற்றி, அதில் யுத்தம் செய்வது பற்றி உம்மிடம் அ(ந் நிராகரிப்ப)வர்கள் கேட்கின்றனர். (அதற்கு)நீர் கூறுவீராக:
"
அ(ம்மாதத்)தில் போரிடுவது பெரிதா(ன குற்றமா)கும். ஆனால், அல்லாஹ்வுடைய பாதையை விட்டும் (மனிதர்களை நீங்கள்) தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் (ஜனங்களை வரவிடாது) தடுப்பதும், அதில் வசிப்போரை அதிலிருந்து வெளியேற்றுவதும்
, அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிதா(ன குற்றங்களா)கும். (அல்குர்ஆன் 2;217)
இஸ்லாத்தில் முதன் முதலாக ஒரு படைப்பிரிவிற்கு அமீராக நியமிக்கப்பட்டவர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் அல்அஸதி (ரழி) அவர்கள் தான்.

தபூக் யுத்தம் : ஹிஜ்ரி 9, ரஜப் மாதத்தில் தபூக் யுத்தம் நிகழ்ந்தது. இதற்கு ஒரு
வருடத்திற்கு முன் நிகழ்ந்த முஃதா யுத்தத்தில் ரோமர்களை எதிர்த்து முஸ்லிம்கள் வெற்றி பெற்று விட்டதால் , அதற்கு பழி வாங்கும் நோக்கில் ரோமர்கள் , எந்நேரமும் முஸ்லிம்களைத் தாக்கக்கூடிய சூழல் நிலவியது. எனவே , இஸ்லாமிய எல்லைக்குள் ரோமர்கள் புகுந்துவிடுவதை தடுத்து நிறுத்த ’தபூக்’ நோக்கி நபி(ஸல்) அவர்கள் படை திரட்டினார்கள். அந் நேரம்
.....
கடுமையான கோடைகாலம் , பேரீத்தங்கனிகளின் அறுவடை
யில் ஈடுபடும் நேரம் , மக்கள் பஞ்சத்திலும் சிரமத்திலும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த நேரம்
, சஹாபாக்களிடம் போதிய வாகன வசதிகள் இல்லை, தபூக் மதீனாவிலிருந்து நீண்ட தொலைதூரம், பாதையும் கரடுமுரடான சீரற்ற பாதை
.
இத்தகைய சூழலிலும் சஹாபாக்கள் போருக்காக தங்கள் செல்வங்
களை , ஒட்டகங்களை, பேரீத்தங்கனிகளை நாயகத்திடம் வாரி வழங்கி போருக்குப் புறப்பட்டனர்
. 30,000-க்கும் அதிகமான வீரர்கள் போருக்கு தயாராகி புறப்பட்டுச் சென்றதால்
, இவர்களுக்கு போதுமான உணவு வசதி இல்லை , வாகனவசதி இல்லை. எனவே இப்படைக்கு"கஸ்வத்துல் உஸ்ரா" வறுமைப் படை என்றும் பெயர் வந்தது
.
இஸ்லாமியப் படை தபூக் வந்ததை அறிந்த ரோமனியப்படையினர்
போர் செய்ய துணிவின்றி தங்களது நாட்டிற்குள்ளேயே ஓடி ஒளிந்தனர்
.
எனவே யுத்தமின்றி இஸ்லாமியப்படையினர் வெற்றி வாகை சூடியவர்களாக மதீனா திரும்பினார்கள்
.
வெளியில் இஸ்லாத்தையும், உள்ளத்தில் நயவஞ்சகத்தையும்
கொண்ட முனாஃபிகீன்களும், எவ்வித காரணமுமின்றி முஸ்லிம்களில் கஃப் இப்னு மாலிக்
(ரழி), ஹிலால் இப்னு உமையா(ரழி), முராரா இப்னு அர்ரபிஉ (ரழி) ஆகிய மூவரும் தபூக் யுத்ததிற்கு செல்லவில்லை. அம் மூன்று சஹாபாக்களும் மனம்வருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரியதால் , அல்லாஹ் அவர்களின் பாவமன்னிப்பை ஏற்றுக்கொண்டு
குர்ஆனில் 9;118 -வது வசனத்தை அருளினான்.

ஸரியத்துல் கபத் என்ற "கபத்" படைப்பிரிவு: ஹிஜ்ரி 8, ரஜப் மாதத்தில் அபூஉபைதா இப்னு அல்ஜர்ராஹ் (ரழி) அவர்களின் தலைமையில் 300 பேர் கொண்ட ஒரு படையை
நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். குரைஷிகளின் வியாபாரக்கூட்டத்தை இவர்கள் எதிர்பார்த்து பதுங்கி இருந்த போது கடுமையான பசியின் காரணமாக காய்ந்த இலைகளை சாப்பிட்டனர்
. இதனால் இப்படைக்கு "ஸரியத்துல் கபத் - இலைப் படை" என்று பெயர் வந்தது. அதற்கு
பின் அவர்களுக்கு கடலிலிருந்து "அம்பர்" என்ற பெரிய மீன் கிடைத்தது.
அம்மீனை சுமார் 15 நாட்கள் வைத்து சாப்பிட்டார்கள்.

துஆ:
"அல்லாஹும்ம பாரிக்லனா ஃபீ ரஜப, வ ஷஅபான், வ பல்லிஃனர் ரமழான்"

யா அல்லாஹ்! ரஜப் மற்றும் ஷஅபானில் எங்களுக்கு பரக்கத்
செய்வாயாக! ரமழானை அடையும் பாக்கியத்தை எங்களுக்குத் தருவாயாக!
என்று நபி(ஸல்) அவர்கள் இந்த ரஜப் மாதத்தில் துஆச் செய்வார்கள்.

தொகுப்பு
: மவ்லவி அ.சீனி நைனார் முஹம்மது தாவூதி
துபாய் (055 9764994)

Friday, May 21, 2010

இந்தியாவை இஸ்லாம் ஆள வேண்டும்! பேரா. அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)

இந்தியாவை இஸ்லாம் ஆள வேண்டும்! பேரா. அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)
திங்கள், 17 மே 2010 00:16

"என்ன ... இப்புடி திடீர்னு ...?"
தன் நண்பர்கள் சிலரின் வினாவுக்கு அண்மையில் உரியவராகிப் போனவர்.
நாடறிந்த நாத்திகர்; நாவன்மை மிக்கவர்; படைத்த கடவுளைப் பாரெங்கும் சுற்றி மறுத்து நின்றவர்; தத்துவ இயல் கற்றவர்-கற்பிக்கின்ற பேராசிரியரா இவர்? என வியக்க வைக்கும் எளிய தோற்றம்; இனிய பேச்சு; பேச்சினூடே இயல்பாக இழையோடும் நகைச்சுவை - முனைவர் அப்துல்லாஹ் எனும் முன்னாள் பெரியார்தாசன்.

இவர் இஸ்லாத்தைத் தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டதைப் பற்றி, பெரியார் திராவிடர் கழகத்தின் இணைய தளத்தில் கடந்த 01.04.2010 நாளிட்டு, ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. தலைப்பு : தோழர் பெரியார்தாசனின் கொள்கை மாற்றம்.அதே கட்டுரை, அதே தலைப்புடன் கீற்று இணைய இதழில் இருநாட்கள் கழித்து 03.04.2010இல் வெளிவந்திருந்தது.

அதில், "இப்போது பெரியார் சிந்தனைப் பள்ளியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, ஒரு மதவாதியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதால், பெரியார் இயக்கத் தோழர்கள் சிலர் நம்முடைய பெரியார்தாசன், இப்படிப் போய் விட்டாரே என்று ஆதங்கப் பட்டார்கள். அவரது கடந்த கால வரலாறுகளை உன்னிப்பாகக் கவனித்தவர்களுக்கு, இதில் வியப்பு ஏதும் இருக்காது" என்று பழைய பெரியார்தாசனை 'உன்னிப்பாக'க் கவனித்து வந்த, 'பெரியாரிஸ்ட்' ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தவற்றுள், ஆத்திகராக இருந்து, தம் கவிதையைப் படிப்பதற்காகவே, 'பெரியார்தாசன்' ஆக மாறியது. பொதுவுடமைக்காரரான செஞ்சட்டை பஞ்சாட்சரம் நடத்தி வந்த, 'பெரியார் சமதர்ம இயக்கம்' எனும் அமைப்பில் சேர்ந்து கம்யூனிஸ்டாக மாறியது. புத்த மார்க்கத்தில் போய் சேர்ந்து கொண்டு, 'சித்தார்த்தன்' ஆக மாறியது. 'தமிழ்ச் சான்றோர் பேரவை' எனும் அமைப்பில் இருந்தபோது, ஆதி சங்கரரின் தத்துவத்தைப் புகழ்ந்து 'நந்தன்' இதழில் எழுதியது. தொலைக்காட்சியில் வெளியான தன்னம்பிக்கைக் கருத்தரங்கில் 'கல்ராசி' பற்றிப் பரப்புரை செய்தது. பெரியாரும் சிங்காரவேலரும் இணைந்து தொடங்கிய, 'தமிழ்நாடு சுயமரியாதை சமதர்மக் கட்சி'யைத் தத்தெடுத்துக் கொண்டு, அதன் தலைவராக அறிவித்துக் கொண்டது. மேற்கண்ட எல்லாவற்றையும் துறந்து விட்டு, இப்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிம் ஆக மாறிவிட்டிருப்பது. ஆகிய ஏழு குற்றச்சாட்டுகளுக்கு அவரிடமே விளக்கம் கேட்பதற்கு ஒரு வாய்ப்புக் கிட்டியது.

கடந்த 07.05.2010இல் ஐக்கிய அரபு அமீரகங்களின் வணிகநகரான துபையில் நடைபெற்ற 'பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக'த்தின் அமீரக்கிளை அறிமுக விழாவில் 'பெரியார்தாசன்' என்று அறியப்பட்ட முனைவர் அப்துல்லாஹ் சிறப்புரையாற்றுவார் என்று குறிப்பிடப்பட்ட அழைப்பு வடிவில் அந்த அரிய வாய்ப்பு வந்தது.
அந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த ஆட்சிமன்றக் குழுவின் துணைத் தலைவரும் அமீரகத் தமிழர்களின் அன்பரும் சமூக ஆர்வலருமான அன்புத் தம்பி குத்தாலம் அஷரஃப் அவர்களைத் தொடர்பு கொண்டு, "சத்தியமார்க்கம்.காம் தளத்துக்காக முனைவரோடு ஒரு பத்துநிமிட நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யமுடியுமா?" என்று கேட்டபோது, "இன்ஷா அல்லாஹ்" என்றார்.

நேர்காணலுக்கு முதல்நாள் நிகழ்ச்சியின் முடிவில், முனைவரைச் சந்தித்து நேரடியாகக் கோரிக்கை வைத்தபோது மகிழ்வுடன் ஒப்புதல் அளித்தார். மறுநாள் 08.05.2010 காலையில் தம்பி அஷ்ரஃபுடன் புறப்பட்டு, முனைவரையும் அழைத்துக் கொண்டு, துபையிலுள்ள 'இஸ்லாமியத் தகவல் மையம்' போய்ச் சேர்ந்தோம். அந்த மைய நூலகத்தின் ஒரு பகுதியில் நேர்காணல் தொடங்கியது. முனைவர் அப்துல்லாஹ் அவர்கள் எனது வினாக்களுக்குப் பொறுமையாகவும் சில கட்டங்களில் உணர்ச்சிவசப்பட்டும் விளக்கமளித்தார். அவரது முழுமையான நேர்காணல், இங்குக் காணொளியாக வெளியிடப் பட்டுள்ளது.

"எல்லாவற்றையும் பார்த்துவிடலாம். ஒவ்வொன்றாகக் கேளுங்கள்" என்று முனைவர் அப்துல்லாஹ் கேட்டுக் கொண்டார். அவரது நேர்காணலின் சுருக்கம்:

சத்தியமார்க்கம்.காம்: ஆத்திகராக இருந்து, தம் கவிதையைப் படிப்பதற்காகவே, 'பெரியார்தாசன்' ஆக மாறியது பற்றிச் சொல்லுங்கள்.

பேரா. Dr. அப்துல்லாஹ்: எனது பதினேழாவது வயதில் நான் பச்சையப்பன் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தபோது ஒரு விழாவில் பேசுவதற்காகப் பெரியார் அங்கு வந்திருந்தார். அவரை வாழ்த்தி ஒரு கவிதை எழுதினேன். அந்தக் கவிதையின் அடியிலுள்ள எனது இயற்பெயரை மாற்றிப் போடும்படி என் பேராசிரியர் அறிவுறுத்தியபோது "பெரியார்தாசன்" எனப் போட்டுக் கொண்டேன். அதன் பின்னர் பெரியாரைக் கற்று, அவரது சீர்திருத்தக் கருத்துகளால் கவரப்பட்டு, அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டு, அவரது சீர்திருத்தக் கருத்துகளைப் பல்லாண்டுகள் பிரச்சாரம் செய்தேன். ஒரு 17 வயது இளைஞன், அவனது அப்போதைய அறிவுத்திறனுடனே, சிந்தனையுடனேயே 64 வயதிலும் இருக்க வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப் படுத்த முடியாது. ஒரு கம்பளிப் பூச்சியை வண்ணத்துப் பூச்சியாக வளர்ச்சி பெறக்கூடாது என்று யாரும் தடுக்கவியலாது. அறியாமை முடிகள் உதிர்ந்த கம்பளிப் பூச்சியாக, அறிவுச் சிறகுகள் முளைத்த வண்ணத்துப் பூச்சியாக நான் இப்போது மாறிப் போனேன். இது என் சொந்த வளர்ச்சி. இதில் குறைகூற, குற்றம் சாட்ட யாருக்கும் உரிமையில்லை.

சத்தியமார்க்கம்.காம்: பொதுவுடமைக்காரரான செஞ்சட்டை பஞ்சாட்சரம் நடத்தி வந்த, 'பெரியார் சமதர்ம இயக்கம்' எனும் அமைப்பில் சேர்ந்து கம்யூனிஸ்டாக மாறியது பற்றி ...

பேரா. Dr. அப்துல்லாஹ்: கம்யூனிஸத்துக்கு நான் போகவில்லை; கம்யூனிஸ்ட்டாக மாறவுமில்லை. கம்யூனிஸம் என்னுடன் எப்போதும் இருக்கிறது; இப்போதும் இருக்கிறது.

சத்தியமார்க்கம்.காம்: புத்த மார்க்கத்தில் போய்ச் சேர்ந்து கொண்டு, 'சித்தார்த்தன்' ஆக மாறியது பற்றி ...

பேரா. Dr. அப்துல்லாஹ்: பாபா ஸாஹிப் அம்பேத்கர் எழுதிய 52 பிரிவுகள் அடங்கிய அவரது நூலை மொழி பெயர்த்தபோது, புத்த மதத்தில் அற்புதமான பல கருத்துகள் இருந்ததைப் படித்து, அவற்றால் ஈர்க்கப் பட்டேன். அப்போதும் எனது இறைமறுப்புக் கொள்கை அப்படியேதான் இருந்தது. ஏனெனில் புத்த மதத்தில் இறையென்று ஒன்றில்லை. "அன்பே இறை" என்பதே அதன் அடிப்படைத் தத்துவம். புத்தரின் 2000ஆம் ஆண்டு நிறைவு விழாவுக்குக் கென்னெத் லேனில் உள்ள புத்தமதத் தலைமையகத்தின் அழைப்பை ஏற்றுக் கொண்டு சென்ற பெரியர், புத்தமதத்தின் கொள்கைகளைப் பாராட்டிப் பேசினார்."புத்தி கொண்டு சிந்திப்பவன் புத்தன்; எனில் நானும் புத்தன்தான்" என்று கூறினார். பெரியார் புத்தானாக இருந்தபோது பெரியார்தாசன் புத்தனாக இருந்ததில் விமர்சனத்துக்கு இடமேயில்லை.

சத்தியமார்க்கம்.காம்: 'தமிழ்ச் சான்றோர் பேரவை' எனும் அமைப்பில் இருந்தபோது, ஆதி சங்கரரின் தத்துவத்தைப் புகழ்ந்து 'நந்தன்' இதழில் எழுதியதைப் பற்றி ...

பேரா. Dr. அப்துல்லாஹ்: அது நான் எழுதியதல்ல; ஒரு நேர்காணல். ஆதிசங்கரரைப் புகழ்ந்த குற்றச்சாட்டில் கூடுதலாக விளக்க வேண்டியவை உள்ளன. 'இந்துத் தத்துவம்' என்பது வேறு; இந்தியத் தத்துவம் என்பது வேறு. இந்துத் தத்துவம் என்பது வர்ணாசிரமக் கொள்கையின் அடிப்படையில் மனிதர்களை சாதிவாரியாகக் கூறுபோட்ட பார்ப்பனீயம் ஆகும். இந்தியத் தத்துவம் என்பது சாங்கியம் (கபிலர்), யோகம் (பதஞ்சலி), மீமாம்சம் (ஜெய்மினி), நியாயம் (கோதமர்), வைசேஷிகம் (கணாதர்), வேதாந்தம் (ஆதிசங்கரர்) ஆகியவையாகும். இவற்றை அறுசமயம் என்பர். இந்த ஆறிலும் கடவுள் கொள்கை என்ற ஒன்றே இல்லை. ஆனால், சிலவற்றுள் தவறாக அது புகுத்தப் பட்டது.
ஆதிசங்கரர், தம் ஆசிரியரான கோவிந்த பகவத் என்பவரைப் போற்றிப் பாடிய "பஜகோவிந்தம்" எனும் பாடலை, கோவிந்த'சாமி'க்குப் பாடிய பாட்டாகப் பின்னர் வந்தோர் மாற்றிக் கொண்டனர்.

ஆதிசங்கரரின் பாடல்களுள் அர்த்தமுள்ளவை என நான் குறிப்பிட்ட பாடலை நீங்கள் கேட்டாலும் அவை அர்த்தமுள்ளவைதாம் என ஒப்புக் கொள்வீர்கள். கேட்கலாம், தப்பில்லை: சத் சங்கத்துவே நித் சங்கத்துவம் (அறிஞர்களோடு சேர்ந்திருந்தால் உன் தனித்தன்மை உனக்குத் தெரியவரும்). நித் சங்கத்துவே நிர்மோகத்துவம் (உன் தனித்தன்மை உனக்குப் புரிந்துவிட்டால் ஆசைகள் அற்றுப்போகும்).
நிர்மோகத்துவே நிச்சலத் தத்துவம் (ஆசைகள் அற்றுவிட்டால் மனதில் அமைதி உண்டாகும்).

நிச்சலத் தத்துவே ஜீவன் முக்தி (சலனமற்ற அமைதியான மனநிலையே முக்திநிலை).
ஆதிசங்கரர் போட்டிருக்கும் நாமம் அழகாயிருக்கிறது என்பதற்காகவோ அவர் பார்ப்பனர் என்பதற்காகவோ அவரை நான் புகழவில்லை. அத்துவைதம் போதித்த அவரது கருத்துகள் சில அர்த்தமுள்ளவை எனத் தெரிந்து கொண்டு அவற்றைப் புகழ்ந்து, நந்தன் எனும் இதழுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டேன்; அவ்வளவுதான். அந்தக் கருத்துகள் அர்த்தமுள்ளவை என்பதில் இன்றைக்கும் எனக்கு வேறுபட்ட கருத்தில்லை.

சத்தியமார்க்கம்.காம்: தொலைக்காட்சியில் வெளியான தன்னம்பிக்கைக் கருத்தரங்கில் 'கல்ராசி' பற்றிப் பரப்புரை செய்தது ஏன்?

பேரா. Dr. அப்துல்லாஹ்: மனோதத்துவக் கருத்தரங்குகளில் 'கல்ராசி' பற்றியெல்லாம் நான் பரப்புரை செய்யவில்லை. ஏறத்தாழப் பத்தாண்டுகளுக்கு முன்னர், என் நண்பர் ராஜராஜன் என்பவர், தன் இல்ல நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ளுமாறு என்னை அழைத்திருந்தார். அப்போது நானும் அவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட நிழற்படத்தை, அவரது 'பெயர்ராசி' விளம்பரத்துக்காகப் பயன் படுத்தியிருக்கிறார் என்பது பிற்பாடு தெரிய வந்தது. மற்றபடி எனக்கும் எந்த ராசிக்கும் எவ்விதத் தொடர்பும் எப்போதும் இருந்ததில்லை.

சத்தியமார்க்கம்.காம்: பெரியாரும் சிங்காரவேலரும் இணைந்து தொடங்கிய, 'தமிழ்நாடு சுயமரியாதை சமதர்மக் கட்சி'யைத் தத்தெடுத்துக் கொண்டு, அதன் தலைவராக அறிவித்துக் கொண்ட விபரம் ...

பேரா. Dr. அப்துல்லாஹ்: பெரியார் திராவிடர் கழகத்திலிருந்து ஒரு காலகட்டத்தில் நான் வெளியேற்றப் பட்டேன். அதற்கு, நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதைக் காரணமாகச் சொன்னார்கள். என்னுடன் கல்லூரியில் பணியாற்றிய பெண்ணொருவர் என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்; நானும் விரும்பினேன். திருமணம் செய்து கொண்டோம். அந்தத் திருமணம் முடிந்து பத்தாண்டுகளுக்குப் பின்னர் அதைக் காரணமாகச் சொல்லி நான் வெளியேற்றப் பட்டேன். அந்த அநீதியான கேலிக்கூத்தை அன்று யாருமே தட்டிக் கேட்கவில்லை. எனவே, யாராலும் கண்டு கொள்ளப் படாமல் தூசி படிந்து கிடந்த 'தமிழ்நாடு சுயமரியாதை சமதர்மக் கட்சி'க்குப் புத்துயிர் கொடுக்கலாம் என்றெண்ணி அதற்குத் தலைமை ஏற்றேன். பின்னர், ஒரு கட்சியை நடத்துவதெல்லாம் எனக்குக் கைவராது என்று கண்டு கொண்டு, அதில் தீவிரம் காட்டவில்லை. அது வெறும் லெட்டர்பேடு கட்சிதான்.

சத்தியமார்க்கம்.காம்: மேற்கண்ட எல்லாவற்றையும் துறந்து விட்டு, இப்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிம் ஆக மாறிவிட்டிருப்பதுதான் தீவிர விமர்சனமாகியுள்ளது ...

பேரா. Dr. அப்துல்லாஹ்: இஸ்லாத்தை எனது வாழ்வியல் நெறியாக நான் ஏற்றுக் கொண்டது சிலர் கேட்பதுபோல் திடீர் நிகழ்வல்ல; பத்தாண்டுகால மனப் போராட்டத்தின் முடிவு இது. கடவுள் மறுப்பைக் குறித்த மீளாய்வு எனக்குத் தோன்றி வெகுகாலமாகி விட்டது. அதன் எதிரொலியாகக் கல்கி இதழில் 52 வாரம் 'நான் நாத்திகன் இல்லை' எனும் சுய பிரகடனத்தைத் தலைப்பிட்டு எழுதினேன். அத்தொடர் தொடங்கியது 2000ஆம் ஆண்டில். கடவுளைத் தேடிய எனது முயற்சியில் பல மதங்களைப் படித்துப் பார்த்து, இறுதியாக நான் மெய்க்கடவுளைக் கண்டு கொண்டது குர்ஆனில். நான் வெளியில் இருந்தபோது இஸ்லாத்திற்குக் குறைவும் இருந்ததில்லை; இணைந்த பிறது அதற்குத் தனிப் பெருமையும் சேர்ந்துவிடவில்லை. யார் வந்தாலும் வராவிட்டாலும் அது என்றும் வாழும் மார்க்கம். இஸ்லாத்தைத் தேர்ந்தது என் தனிப்பட்ட முடிவு. இதில் யாரும் கேள்வி கேட்க முடியாது. நான் இஸ்லாத்தில் என்னை இணைத்துக் கொண்டது அரசியலுக்குத்தான். இஸ்லாத்தில் எனக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தியாவை உண்மை இஸ்லாம் ஆள வேண்டும் என்ற அரசியல் ஆசை இருக்கிறது. இதை வெளிப்படையாக அறிவிப்பதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை. நன்றி கூறி, பிரார்த்தனையுடன் நேர்காணலை நிறைவு செய்து, பகல் தொழுகையை முடித்துக் கொண்டு பள்ளியை விட்டு வெளியே வந்தபோது, பெரியாரைப் பற்றிப் பேச்சு வந்தது.

"எவ்வளவோ பாடுபட்டும் நம் நாட்டில் சாதிகள் ஒழிந்துவிடவில்லை. சாதி ஒழிப்பை மேடைபோட்டுப் பேசிவிட்டு என் சொந்த ஊருக்குப் போனால், என்னை என் சாதியோடு சேர்த்தே எனது ஊரைச் சேர்ந்தோர் குறிப்பிட்டுப் பேசுவதைக் காதால் கேட்க வேண்டிய நிலை இருந்தது!. இப்போது என் சாதி, என்னை விட்டும் தானாக ஓடிப் போனதே! நம் ஊர்ப்பக்கம் சாதி-சனம் என்று சேர்த்துச் சொல்வார்களல்லவா? சாதியோடு சேர்ந்து கொண்டு என் சனமும் என்னை விட்டு ஒதுங்கிப் போனது. கடந்த பத்து நாட்களுக்குள் எனது குடும்பத்தில் நடந்த ஒரு திருமணத்துக்கு எனக்கு அழைப்பில்லை; ஓர் இறப்புக்கு அறிவிப்பில்லை! இஸ்லாத்தில் இணைவதால் இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எனக்குத் தெரியும். எல்லாவற்றையும் எதிர்பார்த்தே நான் இஸ்லாத்துக்கு வந்தேன்"

"பெரியாரின் மறைவுக்குப் பிறகு கொஞ்சகாலம் சாதியாதிக்கம் அடங்கிக் கிடந்தது. இன்றோ, சங்கங்கள் வளர்க்கும் சாதிகள் என்பதாய்ச் சாதிச் சங்கங்கள் தமிழகத்தில் பெருகிப் போய்விட்டன. சாதி அரசியல் தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் ஆட்சி செய்கிறது". "சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, சமூக சீர்திருத்தம் போன்ற - கடவுள் மறுப்பு தவிர்த்த - பெரியாரின் கொள்கைகள் இன்றும் என்னிடம் உள்ளன. கடவுள் மறுப்புப் பற்றிய எனது மீளாய்வுகூட ஒருவகையில் பெரியாரின் கொள்கை அடிப்படையில் எழுந்ததுதான்" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் முனைவர் அப்துல்லாஹ்.
"எப்படி?"

மனப் பிறழ்வு, மனக் குழப்பம் ஆகிய உளவியல் சார்ந்த நோய்களுக்கு உரிய ஆலோசனைகளும் மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுக்க வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளும் முனைவர் அப்துல்லாஹ் வழங்கி வருகிறார். அணுக வேண்டிய முகவரி:

Prof. Dr. Abdullah (Periyar Dhasan),
109, Mahalakshmi Nagar,
Thiruverkadu, Chennai 600077
Tamilnadu, India
Tel : 044-26801919; Cell : +91-9444146444
Email : vperiyardhasan@yahoo.com எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும்

"உயிர்களின் தொடக்கம் குறித்து இருவகை இயல்களே உள. ஒன்றாவது பரிணாமவியல்; இரண்டாவது படைப்பியல். பரிணாமவியலைப் பெரியார் இறுதிவரை ஒப்புக் கொள்ளவில்லை. ஏனெனில், பரிணாமவியலைப் பற்றி அவர் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார். எனவே, மறுதலித்தார். படைப்பியலைப் பற்றிக் கவலைப்படாததால் அதையும் மறுத்தார். இரண்டில் ஒன்று இருக்க வேண்டும்; அது உண்மையானதாக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ஏனெனில், பரிணாமவியல் தவறென்றால் படைப்பியல் மட்டுமே எஞ்சுகிறது. அந்தச் சிந்தனை என் தேடலாக மாறியது. 'எல்லாவற்றையும் படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டும்' எனும் முடிவு எனக்கு ஏற்பட்டு வெகு காலமாகி விட்டது. அது தெளிவாகத் தெரிந்தது இறைவேதமான குர்ஆனை ஆய்வு செய்தபோதுதான். அல்ஹம்து லில்லாஹ், எல்லாப் புகழும் இறைவனுக்கே!"

எல்லாப் புகழுக்கும் உரிய வல்ல இறைவன், நமக்கும் அவருக்கும் ஈமானில் உறுதியையும் இறைமறையில் ஈடுபாட்டையும் இறைவழி இஸ்லாத்தின் அடிப்படைகளான குர்ஆன்-ஹதீஸில் தெளிவையும் அதிகமதிகம் வழங்கியருள வேண்டும்; உண்மை இஸ்லாத்தில் உறுதியுடன் நடைபயில உதவி புரிய வேண்டும்!

- ஜமீல் (அமீரகப் பிரதிநிதி, சத்தியமார்க்கம்.காம்)
http://www.satyamargam.com/prof-dr-abdullah-ex-periyar-dhasans-exclusive-interview

Saturday, May 15, 2010

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்: ஜுமாதல் ஆகிரா

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்: ஜுமாதல் ஆகிரா

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்:

ஜுமாதல் ஆகிரா


http://www.mudukulathur.com/religiondetails.asp?id=291


இஸ்லாமிய வரலாற்றில் இந்த ஜுமாதல் ஆகிரா மாதத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்.

தாதுஸ்ஸலாசில் யுத்தம்:
மதீனாவிலிருந்து பத்து நாள் நடைதூரத்தில் வாதில்குரா என்ற இடத்திற்கு அருகிலுள்ள பகுதி தான் ’தாதுஸ்ஸலாசில்’ ஆகும். முஃதா யுத்தம் முடிந்தவுடன் ‘குழாஆ’ கிளையினர் முஸ்லிம்களைத் தாக்க தயாராகின்றனர் என்ற விபரம் நபி (ஸல்) அவர்களுக்கு தெரியவரவே, அம்ரு இப்னு ஆஸ்(ரழி) அவர்களின் தலைமையில் 300 படை வீரர்களுடன் ஒரு படையை அப்பகுதிக்கு அனுப்பி வைத்தார்கள். எதிரிகளின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் விபரத்தை அம்ரு(ரழி) அவர்கள் நாயகத்திற்கு தெரிவித்தார்கள். உடனே நபியவர்கள் அபூஉபைதா(ரழி) அவர்களின் தலைமையில் மேலும் 200 படை வீரர்களை உதவிக்கு அனுப்பி வைத்தார்கள். இப்படை வீரர்களில் அபூபக்கர்(ரழி), உமர்(ரழி) அவர்களும் இருந்தார்கள்.இஸ்லாமியப்படை எதிரிப்படையினரை தாக்கி சிதறடிக்கச் செய்து விட்டு வெற்றியோடு மதீனா திரும்பினார்கள். இந்நிகழ்வு ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு ஜுமாதல் ஆகிரா மாதத்தில் நிகழ்ந்தது.

ஜைது இப்னு ஹாரிஸா(ரழி) படைப்பிரிவு:
ரோம் நாட்டு மன்னர் கைஸருக்கு நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய அழைப்பு கடிதம் எழுதி திஹ்யா இப்னு கலீஃபதுல் கல்பீ(ரழி) என்ற தோழரிடம் கொடுத்தனுப்பினார்கள். அக்கடிதத்தைப் பெற்றுக்கொண்ட மன்னர் கைஸர்,நாயகத்தின் தூதுவராக வந்த திஹ்யா(ரழி) அவர்களை கண்ணியப்படுத்தி உயர்ரக ஆடைகள் அன்பளிப்புகள் கொடுத்து அனுப்பி வைத்தார். மதீனா வரும் வழியில் ‘ஹிஸ்மா’ என்ற இடத்தில் ஜுதாம் கிளையைச் சேர்ந்த சிலர் திஹ்யா(ரழி) அவர்களைத் தாக்கி அவருடைய பொருட்களை
வழிப்பறி செய்து கொண்டனர். திஹ்யா(ரழி) அவர்கள் மதீனா வந்து சேர்ந்ததும் நாயகத்திடம் வரும் வழியில் வழிப்பறி செய்யப்பட்ட விபரத்தை கூறினார். உடனே நபியவர்கள் ஜைது இப்னு ஹாரிஸா(ரழி) அவர்களின் தலைமையில் 500 பேர் கொண்ட படையை ஹிஸ்மா பகுதிக்கு அனுப்பி வைத்தார்கள். இந்நிகழ்வு ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு இதே மாதத்தில் நிகழ்ந்தது.

அலி இப்னு அபூதாலிப்(ரழி) படைப்பிரிவு:
இதே மாதத்தில் ‘ஃபதக்’ என்ற பகுதியில் வசிக்கும் பனு ஸஃது இப்னு பக்ர் கிளையினரிடம், அலி இப்னு அபூதாலிப்(ரழி) அவர்களின் தலைமையில் ஒரு படைப்பிரிவை நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

துல் உஷைரா யுத்தம்:
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஜுமாதல் ஆகிரா மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் 200 தோழர்களுடன் இப்போருக்கு புறப்பட்டார்கள். மக்காவிலிருந்து வியாபாரப் பொருட்களுடன் ’ஷாம்’ நாடு நோக்கிச் சென்று கொண்டிருந்த குரைஷிகளின் வியாபாரக் கூட்டத்தைத் தாக்கி அவர்களுக்கு பொருளாதாரச் சேதத்தை
உண்டாக்குவதே நபியவர்களின் நோக்கம். ஆனால் நபியவர்களின் படை ’துல் உஷைரா’ என்ற இடத்திற்கு வரும் முன்பே, குரைஷிகளின் வியாபாரக்கூட்டம் அவ்விடத்தை கடந்து சென்று விட்டார்கள் என்ற விபரம் தெரியவந்தது. எனவே யுத்தமின்றி இஸ்லாமியப் படைகள் மதீனா திரும்பினார்கள்.
பின்னர் குரைஷிகளின் இதே வியாபரக்கூட்டம் ஷாமிலிருந்து மக்கா திரும்பி வரும் சமயம், அவர்களைத் தாக்கச் சென்ற போது தான் “பத்ரு யுத்தம்” நடைபெற்றது.

தூகரத் யுத்தம்:
ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்கு பின் இந்த யுத்தம் நிகழ்ந்தது. நபி(ஸல்) அவர்களின் ஒட்டகங்களை மேய்க்கச்சென்றவரை ஃபஸாரா கிளையைச் சேர்ந்த அப்துர்ரஹ்மான் என்பவன் கொன்று விட்டு ஒட்டகங்களை ஓட்டிச்சென்று விட்டதால் ஏற்பட்டது இந்த யுத்தம். இப்போரில் முக்கிய வீரராக இருந்தவர் ஸலமா இப்னு அக்வா(ரழி) அவர்கள். இப்போரிலும் இஸ்லாமியப் படையினருக்கே வெற்றி கிடைத்தது. இந்த யுத்ததிலும் நபி(ஸல்) அவர்கள் ”ஸலாத்துல் கவ்ஃ” என்னும் அச்ச நேரத்தொழுகையை தொழுக வைத்தார்கள்.

கலீஃபா அபூபக்கர்(ரழி) அவர்களின் வஃபாத்:
ஹிஜ்ரி 13ஆம் ஆண்டு, ஜுமாதல் ஆகிரா மாதம் (கி.பி. 634 ஆகஸ்டு மாதம்) இஸ்லாமியப் பேரரசின் முதல் கலீஃபா அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்கள் தங்களின் 63-வது வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்கள். அவர்கள் இரண்டு வருடம், மூன்று மாதம், பத்து நாட்கள் கலீஃபாவாக சிறப்பாக பணியற்றியுள்ளார்கள்.

உமர்(ரழி) அவர்களிடம் உடண்படிக்கை:
ஹிஜ்ரி 13, ஜுமாதல் ஆகிரா 22ஆம் நாள் மக்கள் உமர்(ரழி) அவர்களை, இரண்டாம் கலீஃபாவாக ஆக்கி உடண்படிக்கை செய்தார்கள்.

யர்மூக் யுத்தம்:
ஹிஜ்ரி 13, ஜுமாதல் ஆகிரா மாதத்தில் ரோம் நாட்டுப்படையினருக்கும் இஸ்லாமியப் படையினருக்கும் யர்மூக் என்னும் இடத்தில் நிகழ்ந்த பெரிய யுத்தம். ஒரு லட்சத்திற்கும் அதிகமான
ரோம் நாட்டு எதிரிப்படையுடன், 30,000 பேர் கொண்ட இஸ்லாமியப் படையினர் போரிட்டு வெற்றி பெற்றார்கள். இஸ்லாமியப் படையை காலித் இப்னு வலீத்(ரழி), அபூஉபைதா இப்னு ஜர்ராஹ்(ரழி) ஆகிய
முக்கிய தளபதிகள் வழிநடத்திச் சென்று வெற்றி வாகை சூடினார்கள்.
(இப்போர் ஹிஜ்ரி 15ஆம் ஆண்டு ரஜப் மாதத்தில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.)

ஜமல் யுத்தம்:
ஹிஜ்ரி 36, ஜுமாதல் ஆகிரா மாதத்தில் அலி(ரழி) அவர்களின் ஆதரவாளர்களுக்கும், உஸ்மான்(ரழி) அவர்களின் கொலைக்குப் பழி வாங்க கோரியவர்களுக்கும் மத்தியில், ஈராக்கில் உள்ள பஸரா நகருக்கு வெளியில் நடைபெற்ற போர். இருதரப்பிலும் இஸ்லாமியர்களே மோதிக்கொண்ட துயரமான நிகழ்ச்சி இப்போரில் ஏற்பட்டது. (ஜுமாதல் ஊலா மாதத்தில் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.)

தொகுப்பு: மவ்லவி ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி துபாய். (055 9764994)