Saturday, May 15, 2010

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்: ஜுமாதல் ஆகிரா

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்: ஜுமாதல் ஆகிரா

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்:

ஜுமாதல் ஆகிரா


http://www.mudukulathur.com/religiondetails.asp?id=291


இஸ்லாமிய வரலாற்றில் இந்த ஜுமாதல் ஆகிரா மாதத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்.

தாதுஸ்ஸலாசில் யுத்தம்:
மதீனாவிலிருந்து பத்து நாள் நடைதூரத்தில் வாதில்குரா என்ற இடத்திற்கு அருகிலுள்ள பகுதி தான் ’தாதுஸ்ஸலாசில்’ ஆகும். முஃதா யுத்தம் முடிந்தவுடன் ‘குழாஆ’ கிளையினர் முஸ்லிம்களைத் தாக்க தயாராகின்றனர் என்ற விபரம் நபி (ஸல்) அவர்களுக்கு தெரியவரவே, அம்ரு இப்னு ஆஸ்(ரழி) அவர்களின் தலைமையில் 300 படை வீரர்களுடன் ஒரு படையை அப்பகுதிக்கு அனுப்பி வைத்தார்கள். எதிரிகளின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் விபரத்தை அம்ரு(ரழி) அவர்கள் நாயகத்திற்கு தெரிவித்தார்கள். உடனே நபியவர்கள் அபூஉபைதா(ரழி) அவர்களின் தலைமையில் மேலும் 200 படை வீரர்களை உதவிக்கு அனுப்பி வைத்தார்கள். இப்படை வீரர்களில் அபூபக்கர்(ரழி), உமர்(ரழி) அவர்களும் இருந்தார்கள்.இஸ்லாமியப்படை எதிரிப்படையினரை தாக்கி சிதறடிக்கச் செய்து விட்டு வெற்றியோடு மதீனா திரும்பினார்கள். இந்நிகழ்வு ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு ஜுமாதல் ஆகிரா மாதத்தில் நிகழ்ந்தது.

ஜைது இப்னு ஹாரிஸா(ரழி) படைப்பிரிவு:
ரோம் நாட்டு மன்னர் கைஸருக்கு நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய அழைப்பு கடிதம் எழுதி திஹ்யா இப்னு கலீஃபதுல் கல்பீ(ரழி) என்ற தோழரிடம் கொடுத்தனுப்பினார்கள். அக்கடிதத்தைப் பெற்றுக்கொண்ட மன்னர் கைஸர்,நாயகத்தின் தூதுவராக வந்த திஹ்யா(ரழி) அவர்களை கண்ணியப்படுத்தி உயர்ரக ஆடைகள் அன்பளிப்புகள் கொடுத்து அனுப்பி வைத்தார். மதீனா வரும் வழியில் ‘ஹிஸ்மா’ என்ற இடத்தில் ஜுதாம் கிளையைச் சேர்ந்த சிலர் திஹ்யா(ரழி) அவர்களைத் தாக்கி அவருடைய பொருட்களை
வழிப்பறி செய்து கொண்டனர். திஹ்யா(ரழி) அவர்கள் மதீனா வந்து சேர்ந்ததும் நாயகத்திடம் வரும் வழியில் வழிப்பறி செய்யப்பட்ட விபரத்தை கூறினார். உடனே நபியவர்கள் ஜைது இப்னு ஹாரிஸா(ரழி) அவர்களின் தலைமையில் 500 பேர் கொண்ட படையை ஹிஸ்மா பகுதிக்கு அனுப்பி வைத்தார்கள். இந்நிகழ்வு ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு இதே மாதத்தில் நிகழ்ந்தது.

அலி இப்னு அபூதாலிப்(ரழி) படைப்பிரிவு:
இதே மாதத்தில் ‘ஃபதக்’ என்ற பகுதியில் வசிக்கும் பனு ஸஃது இப்னு பக்ர் கிளையினரிடம், அலி இப்னு அபூதாலிப்(ரழி) அவர்களின் தலைமையில் ஒரு படைப்பிரிவை நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

துல் உஷைரா யுத்தம்:
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஜுமாதல் ஆகிரா மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் 200 தோழர்களுடன் இப்போருக்கு புறப்பட்டார்கள். மக்காவிலிருந்து வியாபாரப் பொருட்களுடன் ’ஷாம்’ நாடு நோக்கிச் சென்று கொண்டிருந்த குரைஷிகளின் வியாபாரக் கூட்டத்தைத் தாக்கி அவர்களுக்கு பொருளாதாரச் சேதத்தை
உண்டாக்குவதே நபியவர்களின் நோக்கம். ஆனால் நபியவர்களின் படை ’துல் உஷைரா’ என்ற இடத்திற்கு வரும் முன்பே, குரைஷிகளின் வியாபாரக்கூட்டம் அவ்விடத்தை கடந்து சென்று விட்டார்கள் என்ற விபரம் தெரியவந்தது. எனவே யுத்தமின்றி இஸ்லாமியப் படைகள் மதீனா திரும்பினார்கள்.
பின்னர் குரைஷிகளின் இதே வியாபரக்கூட்டம் ஷாமிலிருந்து மக்கா திரும்பி வரும் சமயம், அவர்களைத் தாக்கச் சென்ற போது தான் “பத்ரு யுத்தம்” நடைபெற்றது.

தூகரத் யுத்தம்:
ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்கு பின் இந்த யுத்தம் நிகழ்ந்தது. நபி(ஸல்) அவர்களின் ஒட்டகங்களை மேய்க்கச்சென்றவரை ஃபஸாரா கிளையைச் சேர்ந்த அப்துர்ரஹ்மான் என்பவன் கொன்று விட்டு ஒட்டகங்களை ஓட்டிச்சென்று விட்டதால் ஏற்பட்டது இந்த யுத்தம். இப்போரில் முக்கிய வீரராக இருந்தவர் ஸலமா இப்னு அக்வா(ரழி) அவர்கள். இப்போரிலும் இஸ்லாமியப் படையினருக்கே வெற்றி கிடைத்தது. இந்த யுத்ததிலும் நபி(ஸல்) அவர்கள் ”ஸலாத்துல் கவ்ஃ” என்னும் அச்ச நேரத்தொழுகையை தொழுக வைத்தார்கள்.

கலீஃபா அபூபக்கர்(ரழி) அவர்களின் வஃபாத்:
ஹிஜ்ரி 13ஆம் ஆண்டு, ஜுமாதல் ஆகிரா மாதம் (கி.பி. 634 ஆகஸ்டு மாதம்) இஸ்லாமியப் பேரரசின் முதல் கலீஃபா அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்கள் தங்களின் 63-வது வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்கள். அவர்கள் இரண்டு வருடம், மூன்று மாதம், பத்து நாட்கள் கலீஃபாவாக சிறப்பாக பணியற்றியுள்ளார்கள்.

உமர்(ரழி) அவர்களிடம் உடண்படிக்கை:
ஹிஜ்ரி 13, ஜுமாதல் ஆகிரா 22ஆம் நாள் மக்கள் உமர்(ரழி) அவர்களை, இரண்டாம் கலீஃபாவாக ஆக்கி உடண்படிக்கை செய்தார்கள்.

யர்மூக் யுத்தம்:
ஹிஜ்ரி 13, ஜுமாதல் ஆகிரா மாதத்தில் ரோம் நாட்டுப்படையினருக்கும் இஸ்லாமியப் படையினருக்கும் யர்மூக் என்னும் இடத்தில் நிகழ்ந்த பெரிய யுத்தம். ஒரு லட்சத்திற்கும் அதிகமான
ரோம் நாட்டு எதிரிப்படையுடன், 30,000 பேர் கொண்ட இஸ்லாமியப் படையினர் போரிட்டு வெற்றி பெற்றார்கள். இஸ்லாமியப் படையை காலித் இப்னு வலீத்(ரழி), அபூஉபைதா இப்னு ஜர்ராஹ்(ரழி) ஆகிய
முக்கிய தளபதிகள் வழிநடத்திச் சென்று வெற்றி வாகை சூடினார்கள்.
(இப்போர் ஹிஜ்ரி 15ஆம் ஆண்டு ரஜப் மாதத்தில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.)

ஜமல் யுத்தம்:
ஹிஜ்ரி 36, ஜுமாதல் ஆகிரா மாதத்தில் அலி(ரழி) அவர்களின் ஆதரவாளர்களுக்கும், உஸ்மான்(ரழி) அவர்களின் கொலைக்குப் பழி வாங்க கோரியவர்களுக்கும் மத்தியில், ஈராக்கில் உள்ள பஸரா நகருக்கு வெளியில் நடைபெற்ற போர். இருதரப்பிலும் இஸ்லாமியர்களே மோதிக்கொண்ட துயரமான நிகழ்ச்சி இப்போரில் ஏற்பட்டது. (ஜுமாதல் ஊலா மாதத்தில் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.)

தொகுப்பு: மவ்லவி ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி துபாய். (055 9764994)