Friday, May 21, 2010

இந்தியாவை இஸ்லாம் ஆள வேண்டும்! பேரா. அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)

இந்தியாவை இஸ்லாம் ஆள வேண்டும்! பேரா. அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)
திங்கள், 17 மே 2010 00:16

"என்ன ... இப்புடி திடீர்னு ...?"
தன் நண்பர்கள் சிலரின் வினாவுக்கு அண்மையில் உரியவராகிப் போனவர்.
நாடறிந்த நாத்திகர்; நாவன்மை மிக்கவர்; படைத்த கடவுளைப் பாரெங்கும் சுற்றி மறுத்து நின்றவர்; தத்துவ இயல் கற்றவர்-கற்பிக்கின்ற பேராசிரியரா இவர்? என வியக்க வைக்கும் எளிய தோற்றம்; இனிய பேச்சு; பேச்சினூடே இயல்பாக இழையோடும் நகைச்சுவை - முனைவர் அப்துல்லாஹ் எனும் முன்னாள் பெரியார்தாசன்.

இவர் இஸ்லாத்தைத் தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டதைப் பற்றி, பெரியார் திராவிடர் கழகத்தின் இணைய தளத்தில் கடந்த 01.04.2010 நாளிட்டு, ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. தலைப்பு : தோழர் பெரியார்தாசனின் கொள்கை மாற்றம்.அதே கட்டுரை, அதே தலைப்புடன் கீற்று இணைய இதழில் இருநாட்கள் கழித்து 03.04.2010இல் வெளிவந்திருந்தது.

அதில், "இப்போது பெரியார் சிந்தனைப் பள்ளியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, ஒரு மதவாதியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதால், பெரியார் இயக்கத் தோழர்கள் சிலர் நம்முடைய பெரியார்தாசன், இப்படிப் போய் விட்டாரே என்று ஆதங்கப் பட்டார்கள். அவரது கடந்த கால வரலாறுகளை உன்னிப்பாகக் கவனித்தவர்களுக்கு, இதில் வியப்பு ஏதும் இருக்காது" என்று பழைய பெரியார்தாசனை 'உன்னிப்பாக'க் கவனித்து வந்த, 'பெரியாரிஸ்ட்' ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தவற்றுள், ஆத்திகராக இருந்து, தம் கவிதையைப் படிப்பதற்காகவே, 'பெரியார்தாசன்' ஆக மாறியது. பொதுவுடமைக்காரரான செஞ்சட்டை பஞ்சாட்சரம் நடத்தி வந்த, 'பெரியார் சமதர்ம இயக்கம்' எனும் அமைப்பில் சேர்ந்து கம்யூனிஸ்டாக மாறியது. புத்த மார்க்கத்தில் போய் சேர்ந்து கொண்டு, 'சித்தார்த்தன்' ஆக மாறியது. 'தமிழ்ச் சான்றோர் பேரவை' எனும் அமைப்பில் இருந்தபோது, ஆதி சங்கரரின் தத்துவத்தைப் புகழ்ந்து 'நந்தன்' இதழில் எழுதியது. தொலைக்காட்சியில் வெளியான தன்னம்பிக்கைக் கருத்தரங்கில் 'கல்ராசி' பற்றிப் பரப்புரை செய்தது. பெரியாரும் சிங்காரவேலரும் இணைந்து தொடங்கிய, 'தமிழ்நாடு சுயமரியாதை சமதர்மக் கட்சி'யைத் தத்தெடுத்துக் கொண்டு, அதன் தலைவராக அறிவித்துக் கொண்டது. மேற்கண்ட எல்லாவற்றையும் துறந்து விட்டு, இப்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிம் ஆக மாறிவிட்டிருப்பது. ஆகிய ஏழு குற்றச்சாட்டுகளுக்கு அவரிடமே விளக்கம் கேட்பதற்கு ஒரு வாய்ப்புக் கிட்டியது.

கடந்த 07.05.2010இல் ஐக்கிய அரபு அமீரகங்களின் வணிகநகரான துபையில் நடைபெற்ற 'பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக'த்தின் அமீரக்கிளை அறிமுக விழாவில் 'பெரியார்தாசன்' என்று அறியப்பட்ட முனைவர் அப்துல்லாஹ் சிறப்புரையாற்றுவார் என்று குறிப்பிடப்பட்ட அழைப்பு வடிவில் அந்த அரிய வாய்ப்பு வந்தது.
அந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த ஆட்சிமன்றக் குழுவின் துணைத் தலைவரும் அமீரகத் தமிழர்களின் அன்பரும் சமூக ஆர்வலருமான அன்புத் தம்பி குத்தாலம் அஷரஃப் அவர்களைத் தொடர்பு கொண்டு, "சத்தியமார்க்கம்.காம் தளத்துக்காக முனைவரோடு ஒரு பத்துநிமிட நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யமுடியுமா?" என்று கேட்டபோது, "இன்ஷா அல்லாஹ்" என்றார்.

நேர்காணலுக்கு முதல்நாள் நிகழ்ச்சியின் முடிவில், முனைவரைச் சந்தித்து நேரடியாகக் கோரிக்கை வைத்தபோது மகிழ்வுடன் ஒப்புதல் அளித்தார். மறுநாள் 08.05.2010 காலையில் தம்பி அஷ்ரஃபுடன் புறப்பட்டு, முனைவரையும் அழைத்துக் கொண்டு, துபையிலுள்ள 'இஸ்லாமியத் தகவல் மையம்' போய்ச் சேர்ந்தோம். அந்த மைய நூலகத்தின் ஒரு பகுதியில் நேர்காணல் தொடங்கியது. முனைவர் அப்துல்லாஹ் அவர்கள் எனது வினாக்களுக்குப் பொறுமையாகவும் சில கட்டங்களில் உணர்ச்சிவசப்பட்டும் விளக்கமளித்தார். அவரது முழுமையான நேர்காணல், இங்குக் காணொளியாக வெளியிடப் பட்டுள்ளது.

"எல்லாவற்றையும் பார்த்துவிடலாம். ஒவ்வொன்றாகக் கேளுங்கள்" என்று முனைவர் அப்துல்லாஹ் கேட்டுக் கொண்டார். அவரது நேர்காணலின் சுருக்கம்:

சத்தியமார்க்கம்.காம்: ஆத்திகராக இருந்து, தம் கவிதையைப் படிப்பதற்காகவே, 'பெரியார்தாசன்' ஆக மாறியது பற்றிச் சொல்லுங்கள்.

பேரா. Dr. அப்துல்லாஹ்: எனது பதினேழாவது வயதில் நான் பச்சையப்பன் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தபோது ஒரு விழாவில் பேசுவதற்காகப் பெரியார் அங்கு வந்திருந்தார். அவரை வாழ்த்தி ஒரு கவிதை எழுதினேன். அந்தக் கவிதையின் அடியிலுள்ள எனது இயற்பெயரை மாற்றிப் போடும்படி என் பேராசிரியர் அறிவுறுத்தியபோது "பெரியார்தாசன்" எனப் போட்டுக் கொண்டேன். அதன் பின்னர் பெரியாரைக் கற்று, அவரது சீர்திருத்தக் கருத்துகளால் கவரப்பட்டு, அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டு, அவரது சீர்திருத்தக் கருத்துகளைப் பல்லாண்டுகள் பிரச்சாரம் செய்தேன். ஒரு 17 வயது இளைஞன், அவனது அப்போதைய அறிவுத்திறனுடனே, சிந்தனையுடனேயே 64 வயதிலும் இருக்க வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப் படுத்த முடியாது. ஒரு கம்பளிப் பூச்சியை வண்ணத்துப் பூச்சியாக வளர்ச்சி பெறக்கூடாது என்று யாரும் தடுக்கவியலாது. அறியாமை முடிகள் உதிர்ந்த கம்பளிப் பூச்சியாக, அறிவுச் சிறகுகள் முளைத்த வண்ணத்துப் பூச்சியாக நான் இப்போது மாறிப் போனேன். இது என் சொந்த வளர்ச்சி. இதில் குறைகூற, குற்றம் சாட்ட யாருக்கும் உரிமையில்லை.

சத்தியமார்க்கம்.காம்: பொதுவுடமைக்காரரான செஞ்சட்டை பஞ்சாட்சரம் நடத்தி வந்த, 'பெரியார் சமதர்ம இயக்கம்' எனும் அமைப்பில் சேர்ந்து கம்யூனிஸ்டாக மாறியது பற்றி ...

பேரா. Dr. அப்துல்லாஹ்: கம்யூனிஸத்துக்கு நான் போகவில்லை; கம்யூனிஸ்ட்டாக மாறவுமில்லை. கம்யூனிஸம் என்னுடன் எப்போதும் இருக்கிறது; இப்போதும் இருக்கிறது.

சத்தியமார்க்கம்.காம்: புத்த மார்க்கத்தில் போய்ச் சேர்ந்து கொண்டு, 'சித்தார்த்தன்' ஆக மாறியது பற்றி ...

பேரா. Dr. அப்துல்லாஹ்: பாபா ஸாஹிப் அம்பேத்கர் எழுதிய 52 பிரிவுகள் அடங்கிய அவரது நூலை மொழி பெயர்த்தபோது, புத்த மதத்தில் அற்புதமான பல கருத்துகள் இருந்ததைப் படித்து, அவற்றால் ஈர்க்கப் பட்டேன். அப்போதும் எனது இறைமறுப்புக் கொள்கை அப்படியேதான் இருந்தது. ஏனெனில் புத்த மதத்தில் இறையென்று ஒன்றில்லை. "அன்பே இறை" என்பதே அதன் அடிப்படைத் தத்துவம். புத்தரின் 2000ஆம் ஆண்டு நிறைவு விழாவுக்குக் கென்னெத் லேனில் உள்ள புத்தமதத் தலைமையகத்தின் அழைப்பை ஏற்றுக் கொண்டு சென்ற பெரியர், புத்தமதத்தின் கொள்கைகளைப் பாராட்டிப் பேசினார்."புத்தி கொண்டு சிந்திப்பவன் புத்தன்; எனில் நானும் புத்தன்தான்" என்று கூறினார். பெரியார் புத்தானாக இருந்தபோது பெரியார்தாசன் புத்தனாக இருந்ததில் விமர்சனத்துக்கு இடமேயில்லை.

சத்தியமார்க்கம்.காம்: 'தமிழ்ச் சான்றோர் பேரவை' எனும் அமைப்பில் இருந்தபோது, ஆதி சங்கரரின் தத்துவத்தைப் புகழ்ந்து 'நந்தன்' இதழில் எழுதியதைப் பற்றி ...

பேரா. Dr. அப்துல்லாஹ்: அது நான் எழுதியதல்ல; ஒரு நேர்காணல். ஆதிசங்கரரைப் புகழ்ந்த குற்றச்சாட்டில் கூடுதலாக விளக்க வேண்டியவை உள்ளன. 'இந்துத் தத்துவம்' என்பது வேறு; இந்தியத் தத்துவம் என்பது வேறு. இந்துத் தத்துவம் என்பது வர்ணாசிரமக் கொள்கையின் அடிப்படையில் மனிதர்களை சாதிவாரியாகக் கூறுபோட்ட பார்ப்பனீயம் ஆகும். இந்தியத் தத்துவம் என்பது சாங்கியம் (கபிலர்), யோகம் (பதஞ்சலி), மீமாம்சம் (ஜெய்மினி), நியாயம் (கோதமர்), வைசேஷிகம் (கணாதர்), வேதாந்தம் (ஆதிசங்கரர்) ஆகியவையாகும். இவற்றை அறுசமயம் என்பர். இந்த ஆறிலும் கடவுள் கொள்கை என்ற ஒன்றே இல்லை. ஆனால், சிலவற்றுள் தவறாக அது புகுத்தப் பட்டது.
ஆதிசங்கரர், தம் ஆசிரியரான கோவிந்த பகவத் என்பவரைப் போற்றிப் பாடிய "பஜகோவிந்தம்" எனும் பாடலை, கோவிந்த'சாமி'க்குப் பாடிய பாட்டாகப் பின்னர் வந்தோர் மாற்றிக் கொண்டனர்.

ஆதிசங்கரரின் பாடல்களுள் அர்த்தமுள்ளவை என நான் குறிப்பிட்ட பாடலை நீங்கள் கேட்டாலும் அவை அர்த்தமுள்ளவைதாம் என ஒப்புக் கொள்வீர்கள். கேட்கலாம், தப்பில்லை: சத் சங்கத்துவே நித் சங்கத்துவம் (அறிஞர்களோடு சேர்ந்திருந்தால் உன் தனித்தன்மை உனக்குத் தெரியவரும்). நித் சங்கத்துவே நிர்மோகத்துவம் (உன் தனித்தன்மை உனக்குப் புரிந்துவிட்டால் ஆசைகள் அற்றுப்போகும்).
நிர்மோகத்துவே நிச்சலத் தத்துவம் (ஆசைகள் அற்றுவிட்டால் மனதில் அமைதி உண்டாகும்).

நிச்சலத் தத்துவே ஜீவன் முக்தி (சலனமற்ற அமைதியான மனநிலையே முக்திநிலை).
ஆதிசங்கரர் போட்டிருக்கும் நாமம் அழகாயிருக்கிறது என்பதற்காகவோ அவர் பார்ப்பனர் என்பதற்காகவோ அவரை நான் புகழவில்லை. அத்துவைதம் போதித்த அவரது கருத்துகள் சில அர்த்தமுள்ளவை எனத் தெரிந்து கொண்டு அவற்றைப் புகழ்ந்து, நந்தன் எனும் இதழுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டேன்; அவ்வளவுதான். அந்தக் கருத்துகள் அர்த்தமுள்ளவை என்பதில் இன்றைக்கும் எனக்கு வேறுபட்ட கருத்தில்லை.

சத்தியமார்க்கம்.காம்: தொலைக்காட்சியில் வெளியான தன்னம்பிக்கைக் கருத்தரங்கில் 'கல்ராசி' பற்றிப் பரப்புரை செய்தது ஏன்?

பேரா. Dr. அப்துல்லாஹ்: மனோதத்துவக் கருத்தரங்குகளில் 'கல்ராசி' பற்றியெல்லாம் நான் பரப்புரை செய்யவில்லை. ஏறத்தாழப் பத்தாண்டுகளுக்கு முன்னர், என் நண்பர் ராஜராஜன் என்பவர், தன் இல்ல நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ளுமாறு என்னை அழைத்திருந்தார். அப்போது நானும் அவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட நிழற்படத்தை, அவரது 'பெயர்ராசி' விளம்பரத்துக்காகப் பயன் படுத்தியிருக்கிறார் என்பது பிற்பாடு தெரிய வந்தது. மற்றபடி எனக்கும் எந்த ராசிக்கும் எவ்விதத் தொடர்பும் எப்போதும் இருந்ததில்லை.

சத்தியமார்க்கம்.காம்: பெரியாரும் சிங்காரவேலரும் இணைந்து தொடங்கிய, 'தமிழ்நாடு சுயமரியாதை சமதர்மக் கட்சி'யைத் தத்தெடுத்துக் கொண்டு, அதன் தலைவராக அறிவித்துக் கொண்ட விபரம் ...

பேரா. Dr. அப்துல்லாஹ்: பெரியார் திராவிடர் கழகத்திலிருந்து ஒரு காலகட்டத்தில் நான் வெளியேற்றப் பட்டேன். அதற்கு, நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதைக் காரணமாகச் சொன்னார்கள். என்னுடன் கல்லூரியில் பணியாற்றிய பெண்ணொருவர் என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்; நானும் விரும்பினேன். திருமணம் செய்து கொண்டோம். அந்தத் திருமணம் முடிந்து பத்தாண்டுகளுக்குப் பின்னர் அதைக் காரணமாகச் சொல்லி நான் வெளியேற்றப் பட்டேன். அந்த அநீதியான கேலிக்கூத்தை அன்று யாருமே தட்டிக் கேட்கவில்லை. எனவே, யாராலும் கண்டு கொள்ளப் படாமல் தூசி படிந்து கிடந்த 'தமிழ்நாடு சுயமரியாதை சமதர்மக் கட்சி'க்குப் புத்துயிர் கொடுக்கலாம் என்றெண்ணி அதற்குத் தலைமை ஏற்றேன். பின்னர், ஒரு கட்சியை நடத்துவதெல்லாம் எனக்குக் கைவராது என்று கண்டு கொண்டு, அதில் தீவிரம் காட்டவில்லை. அது வெறும் லெட்டர்பேடு கட்சிதான்.

சத்தியமார்க்கம்.காம்: மேற்கண்ட எல்லாவற்றையும் துறந்து விட்டு, இப்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிம் ஆக மாறிவிட்டிருப்பதுதான் தீவிர விமர்சனமாகியுள்ளது ...

பேரா. Dr. அப்துல்லாஹ்: இஸ்லாத்தை எனது வாழ்வியல் நெறியாக நான் ஏற்றுக் கொண்டது சிலர் கேட்பதுபோல் திடீர் நிகழ்வல்ல; பத்தாண்டுகால மனப் போராட்டத்தின் முடிவு இது. கடவுள் மறுப்பைக் குறித்த மீளாய்வு எனக்குத் தோன்றி வெகுகாலமாகி விட்டது. அதன் எதிரொலியாகக் கல்கி இதழில் 52 வாரம் 'நான் நாத்திகன் இல்லை' எனும் சுய பிரகடனத்தைத் தலைப்பிட்டு எழுதினேன். அத்தொடர் தொடங்கியது 2000ஆம் ஆண்டில். கடவுளைத் தேடிய எனது முயற்சியில் பல மதங்களைப் படித்துப் பார்த்து, இறுதியாக நான் மெய்க்கடவுளைக் கண்டு கொண்டது குர்ஆனில். நான் வெளியில் இருந்தபோது இஸ்லாத்திற்குக் குறைவும் இருந்ததில்லை; இணைந்த பிறது அதற்குத் தனிப் பெருமையும் சேர்ந்துவிடவில்லை. யார் வந்தாலும் வராவிட்டாலும் அது என்றும் வாழும் மார்க்கம். இஸ்லாத்தைத் தேர்ந்தது என் தனிப்பட்ட முடிவு. இதில் யாரும் கேள்வி கேட்க முடியாது. நான் இஸ்லாத்தில் என்னை இணைத்துக் கொண்டது அரசியலுக்குத்தான். இஸ்லாத்தில் எனக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தியாவை உண்மை இஸ்லாம் ஆள வேண்டும் என்ற அரசியல் ஆசை இருக்கிறது. இதை வெளிப்படையாக அறிவிப்பதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை. நன்றி கூறி, பிரார்த்தனையுடன் நேர்காணலை நிறைவு செய்து, பகல் தொழுகையை முடித்துக் கொண்டு பள்ளியை விட்டு வெளியே வந்தபோது, பெரியாரைப் பற்றிப் பேச்சு வந்தது.

"எவ்வளவோ பாடுபட்டும் நம் நாட்டில் சாதிகள் ஒழிந்துவிடவில்லை. சாதி ஒழிப்பை மேடைபோட்டுப் பேசிவிட்டு என் சொந்த ஊருக்குப் போனால், என்னை என் சாதியோடு சேர்த்தே எனது ஊரைச் சேர்ந்தோர் குறிப்பிட்டுப் பேசுவதைக் காதால் கேட்க வேண்டிய நிலை இருந்தது!. இப்போது என் சாதி, என்னை விட்டும் தானாக ஓடிப் போனதே! நம் ஊர்ப்பக்கம் சாதி-சனம் என்று சேர்த்துச் சொல்வார்களல்லவா? சாதியோடு சேர்ந்து கொண்டு என் சனமும் என்னை விட்டு ஒதுங்கிப் போனது. கடந்த பத்து நாட்களுக்குள் எனது குடும்பத்தில் நடந்த ஒரு திருமணத்துக்கு எனக்கு அழைப்பில்லை; ஓர் இறப்புக்கு அறிவிப்பில்லை! இஸ்லாத்தில் இணைவதால் இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எனக்குத் தெரியும். எல்லாவற்றையும் எதிர்பார்த்தே நான் இஸ்லாத்துக்கு வந்தேன்"

"பெரியாரின் மறைவுக்குப் பிறகு கொஞ்சகாலம் சாதியாதிக்கம் அடங்கிக் கிடந்தது. இன்றோ, சங்கங்கள் வளர்க்கும் சாதிகள் என்பதாய்ச் சாதிச் சங்கங்கள் தமிழகத்தில் பெருகிப் போய்விட்டன. சாதி அரசியல் தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் ஆட்சி செய்கிறது". "சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, சமூக சீர்திருத்தம் போன்ற - கடவுள் மறுப்பு தவிர்த்த - பெரியாரின் கொள்கைகள் இன்றும் என்னிடம் உள்ளன. கடவுள் மறுப்புப் பற்றிய எனது மீளாய்வுகூட ஒருவகையில் பெரியாரின் கொள்கை அடிப்படையில் எழுந்ததுதான்" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் முனைவர் அப்துல்லாஹ்.
"எப்படி?"

மனப் பிறழ்வு, மனக் குழப்பம் ஆகிய உளவியல் சார்ந்த நோய்களுக்கு உரிய ஆலோசனைகளும் மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுக்க வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளும் முனைவர் அப்துல்லாஹ் வழங்கி வருகிறார். அணுக வேண்டிய முகவரி:

Prof. Dr. Abdullah (Periyar Dhasan),
109, Mahalakshmi Nagar,
Thiruverkadu, Chennai 600077
Tamilnadu, India
Tel : 044-26801919; Cell : +91-9444146444
Email : vperiyardhasan@yahoo.com எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும்

"உயிர்களின் தொடக்கம் குறித்து இருவகை இயல்களே உள. ஒன்றாவது பரிணாமவியல்; இரண்டாவது படைப்பியல். பரிணாமவியலைப் பெரியார் இறுதிவரை ஒப்புக் கொள்ளவில்லை. ஏனெனில், பரிணாமவியலைப் பற்றி அவர் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார். எனவே, மறுதலித்தார். படைப்பியலைப் பற்றிக் கவலைப்படாததால் அதையும் மறுத்தார். இரண்டில் ஒன்று இருக்க வேண்டும்; அது உண்மையானதாக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ஏனெனில், பரிணாமவியல் தவறென்றால் படைப்பியல் மட்டுமே எஞ்சுகிறது. அந்தச் சிந்தனை என் தேடலாக மாறியது. 'எல்லாவற்றையும் படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டும்' எனும் முடிவு எனக்கு ஏற்பட்டு வெகு காலமாகி விட்டது. அது தெளிவாகத் தெரிந்தது இறைவேதமான குர்ஆனை ஆய்வு செய்தபோதுதான். அல்ஹம்து லில்லாஹ், எல்லாப் புகழும் இறைவனுக்கே!"

எல்லாப் புகழுக்கும் உரிய வல்ல இறைவன், நமக்கும் அவருக்கும் ஈமானில் உறுதியையும் இறைமறையில் ஈடுபாட்டையும் இறைவழி இஸ்லாத்தின் அடிப்படைகளான குர்ஆன்-ஹதீஸில் தெளிவையும் அதிகமதிகம் வழங்கியருள வேண்டும்; உண்மை இஸ்லாத்தில் உறுதியுடன் நடைபயில உதவி புரிய வேண்டும்!

- ஜமீல் (அமீரகப் பிரதிநிதி, சத்தியமார்க்கம்.காம்)
http://www.satyamargam.com/prof-dr-abdullah-ex-periyar-dhasans-exclusive-interview