ஈமானின் •பர்ளுகள்
-ஷாஹா-
ஈமான் பொருளைக் கூறிடுவேன்
இதமாய் அதனைக் கேட்டிடுவீர்
ஈமான் பொருளாம் நம்பிக்கை
என்று மனத்தில் வைத்திடுவீர்!
கண்ணால் பார்க்கும் பொருளெல்லாம்
ஈமானதிலே சேர்வதில்லை
எண்ணமதிலே வேரூன்றி
ஏந்தி வளர்வதே ஈமானாம்!
ஆறு கிளைகள் அதற்குண்டு
அடுக்கடுக்காகச் சொல்லுகிறேன்
அதையும் மனத்தில் அன்போடு
அடக்கி வைப்பீர் மானிடரே!
அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான்
அவனே எல்லாம் வல்லவனாம்
என்றே ஈமான் முதல் பர்ளை
எண்ணி மனத்தில் வைத்திடுவீர்!
இறைவன் கட்டளை நிறைவேற்ற
இருக்கின்றார்கள் வானவர்கள்
ஜிப்ரீல் முதலாம் மலக்குகளை
நம்புவதே இரண்டாம் பர்ளாம்!
கெட்டழியும் மனிதர்குலம்
தட்டழிந்து திரியாமல்
கட்டுக்கோப்பாய் வாழ்வதற்கு
காட்டிய ஒளியே நபிமார்கள்!
ஆதி மனிதர் ஆதம் முதல்
அருமை அண்ணல் அவர்கள்வரை
எண்ணில் அடங்கா நபிமார்கள்
மண்ணில் தோன்றினர் என நம்பு!
பிரளயம் கண்ட நூஹ¤நபி
இறைவன் தோழர் இபுறாஹீம்
மூஸா ஈஸா தாவூதும்
எங்கள் நபிகள் கோமானும்
நபிகள் என்று ஏற்பதுவே
மூன்றாம் கடமை ஈமானில்!
லட்சத்திருபத்து நாலாயிரம்
நபிமார் என்ற தலைவர்களில்
மூஸா தாவூத் இருவருடன்
ஈஸா முஹம்மத் இருவருக்கும்
நான்கு வேதங்கள் இறக்கித் தந்தான்
நாயன் கருணைக் கனிவோடு!
மூஸா பெற்றார் தவ்ராத்தை
ஸபூரைப் பெற்றார் தாவூதும்
ஈஸா பெற்றார் இஞ்சீலை
இணையில்லாத புர்கானை
எங்கள் நபிகள் கோமானார்
இறஸ¥லுல்லாஹ் பெற்றார்கள்!
இந்தவேதங்கள் நான்கினையும்
நயமுடன் ஏற்பது ஈமானில்
நான்காம் கடமையாகும் இதை
நன்றாய் மனதில் வைத்திடுவீர்!
மரணத்தோடு முடிவதில்லை
மனிதர் வாழ்க்கை அத்தனையும்
மரணத்தின்பின் தொடர்ந்திடுமே
மங்கா மறையா நெடுவாழ்க்கை!
மரணம் என்ற போர்வைக்குள்
மறைந்த ஜீவன் அத்தனையும்
மறுபடியும் உயிர் பெற்றங்கே
மஹ்ஷர் மைதான் வந்தடையும்!
அல்லாஹ் எதிரில் நிறுத்தாட்டி
அடியான் உலகில் செய்துவந்த
பாவம் நன்மை இரண்டினையும்
பாகுபடுத்தும் கடும் நாளாம்
கியாமத் என்ற கடும் நாளை
நம்பி அதனை பயத்தோடு
ஏற்பதுவே ஈமானுடைய
ஐந்தாம் பர்ளென்றெடுத்திடுவாய்!
நன்மை தீமை இரண்டினையும்
இன்பம் துன்பம் இரண்டினையும்
லாபம் நஷ்டம் இரண்டினையும்
தருபவன் அல்லாஹ் என நம்பு!
தக்தீர் என்ற தத்துவமே
இதில் அடங்கியிருக்கும் அழகைப்பார்!
தக்தீர் என்ற சத்தியத்தை
நம்புவதே ஆறாம் பர்ளாம்!
நண்பா ஈமான் கடமைகளை
நயமுடன் நான் கூறிவிட்டேன்
சுருக்கமானதென்றாலும்
உருக்கமாகக் கொள்வாய்நீ !
பசுவின் பாலும் வெள்ளைதான்
பாகாய்த் தெரியும் சுண்ணாம்பும்
நீரைக் கலந்தால் வெள்ளைதான்
இரண்டும் ஒன்றாய் ஆயிடுமோ?
இஸ்லாம் என்ற பெயரோடு
முஸ்லிம் பெயரை வைத்தாலும்
ஈமான் இஸ்லாம் தெரியாமல்
இருப்பவர்கள் முஸ்லீமா?
இஸ்லாம் என்ற கோட்டுக்குள்
இருப்பவர்கள்தான் முஸ்லிம்கள்
கோட்டைவிட்டு வெளியானால்
கூட்டைவிட்ட குஞ்சாவாய்!
எனவே அல்லாஹ் காட்டிடுவாய்
இனிதாம் நல்ல பாதைகளை!
உனது விருப்பப்படி நடக்கும்
உத்தமனாய் எனை ஆக்கிடுவாய்!
உற்றம் சுற்றம் பெற்றோர்கள்
கற்றுத்தந்த குருமார்கள்
அனைவரையும்நற் கூட்டத்திலே
ஆக்கித்தருவாய் ஆண்டவனே!
ஆமீன் ஆமீன் யாரப்பல்
ஆலமீனே ஆண்டவனே!
ஆமீன் ஆமீன் யாரப்பல்
ஆலமீனே அல்லாஹ்வே!
( பர்மிய தமிழ் எழுத்தாளர் )