Tuesday, August 3, 2010

ரமளானின் மூன்று பகுதிகள்

ரமளானின் மூன்று பகுதிகள்

புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமலானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமலானின் 30 நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது.

இந்த கண்ணிய மிக்க மாதத்தின் முப்பது நாட்களைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகையில் அல்லாஹ் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக அடையாளம் காட்டியுள்ளார்கள் என்று கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட்கொடையாகவும்
நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும்
கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது.

அல் ஹதீஸ் ஆதார நூல் இப்னுகுஜைமா பாகம் 3 எண் 191

முதலாவது பத்து நாட்களில்

இந்த ஹதீஸின் அடிப்படையையும் நாம் கவனத்தில் கொண்டு முதலாவது பத்து நாட்களில், அதிகமதிகமாக அல்லாஹ்விடம் துவாச் செய்து அவனால் வழங்கப்பட்ட உயிர், பொருள், இதர செல்வங்கள், கல்வி, அறிவு, ஆற்றல்கள், திறமைகள், பார்வை, செவி, புலன், நுகர்தல், உணர்தல் போன்ற அனைத்து விதமான அருட் கொடைகளையும் நினைவு கூரவும் அவற்றிற்கு முறையாக நன்றி செலுத்திடவும் அதன் மூலம் மேலும் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் அதிகமதிகமான அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெறவும் முயல வேண்டும்

இரண்டாவது பத்தில்
முறையாக அல்லாஹ்விடம் மனமுருகி அதிகம் அதிகம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்றைப் பற்றி மனம் வருந்தி, மீண்டும் அவற்றில் ஈடுபடாமல் இருக்க உறுதியெடுத்துக் கொண்டு அனைத்துத் தொழுகைகளிலும் குறிப்பாக இரவுத் தொழுகைகளிலும் பாவமன்னிப்பையும் இவற்றில் இருந்து பாதுகாவல் பெற அல்லாஹ்வின் உதவியும் கேட்க வேண்டும் என்று உணரலாம்.

மூன்றாவது பத்து நாட்கள் நரகத்தில் இருந்து பாதுகாப்பு தேடவேண்டும்
"முஃமின்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் இடுகின்ற கட்டளைகளில் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்வார்கள்." (அல் குர்ஆன் 66 : 6)

"எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" (அல்குர்ஆன் 2 :201)

அதே போல் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த அந்தஸ்தான சுவனத்தில் இடம் வேண்டியும் பணிவுடனும் மனமுருகியும் நம்பிக்கையுடனும் பிராத்திக்க வேண்டும். அவற்றின்பால் கொண்டு செல்லும் நற்செயல்களில் தொடர்ந்து இறுதி மூச்சுவரை ஈடுபட உறுதி பூண்டு உதவி கோரி பிராத்திக்க வேண்டும். இதையும் ரமலானிலும் ரமலான் அல்லாத ஏனைய நாட்களிலும் தொடர்ந்து கடைப்பிடித்திடல் வேண்டும்.

Sunday, August 1, 2010

சிறுகதை : நான் தான் ஷைத்தான்

சிறுகதை : நான் தான் ஷைத்தான்

(ஷேக் சிந்தாமதார்)

அதிகாலை நாலரை மணிக்கு “பஜ்ர்” தொழுகைக்காக வீட்டிலேயே ஒளு செய்து கொண்டு நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் பள்ளிக்குப் புறப்பட்டார் முஸ்தபா. தெரு விளக்குகள் சரியாக எரியாத காரணத்தாலும் சமீபத்தில் பெய்த மழையாலும் ஓரிடத்தில் கால் தவறிச் சேற்றுக்குள் விழுந்து விட்டார்.

உடைகள் முழுக்கச் சேறாகிவிடவே, வீடு திரும்பி அவற்றை மாற்றிக் கொண்டு மீண்டும் ‘ஒளு’ செய்து கொண்டு புறப்பட்டார்.

அந்த இடத்தை மிகக் கவனமாகக் கடந்து விட்ட போதிலும், சற்று தள்ளி வேறொரு இடத்தில் அதே மாதிரி கால்தவறி மீண்டும் சேற்றில் விழுந்து விட்டார்.

திரும்பவும் வீடு சென்று உடைகளை மாற்றிக் கொண்டு, மிகவும் தாமதமாகிவிட்டதை உணர்ந்து அவசரமாகப் படியிறங்கியபோது, கையில் ‘லாந்தர்’ விளக்குடன் ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார். “பள்ளிக்குத்தானே போறீங்க பாய்? வாங்க நான் கூட்டிட்டுப் போறேன்” என்றவாறு முஸ்தபாவின் கையை பிடித்து அழைத்துச் சென்றார்.

ஜாக்கிரதையாக நடக்கும் கவனத்தில் எதுவும் பேசிக்கொள்ளாமல் வந்த முஸ்தபா, பள்ளிவாசலை நெருங்கியதும் “நீங்கள் யாரு, தெரியலையே?” என்றார் அந்த முதயவரிடம்.

“நான் தான் ஷைத்தான்” என்று சிரித்தார் அவர்

அதிர்ச்சியுடன் நோக்கிய முஸ்தபாவிடம் அமைதியாகத் தொடர்ந்தார் அவர். “உங்களை சேற்றிலே விழ வச்சது நான்தான். ஆனா நீங்க திரும்பவும் வந்துட்டீங்க. இரண்டாவது தடவையும் விழ செஞ்சேன் அப்படியும் விடாமே நீங்க மூணாவது தடவையும் வந்துட்டீங்க. முதல் தடவை சேற்றிலே விழுந்திட்டு நீங்க திரும்பவும் கிளம்பினப்பவே அல்லாஹ் உங்க பாவங்களை மன்னிச்சிட்டான். மீண்டும் ஒரு தடவையும் நீங்க புறப்பட்டதும் உங்க குடும்பத்தார் பாவங்களையும் மன்னிச்சிட்டான். இன்னொரு தடவையும் உங்களை விழவச்சு அதுக்கப்புறம் நீங்க கிளம்பிட்டா, ஊர்க்காரங்க எல்லாரோட பாவங்களையும் மன்னிச்சிடப் போறானேன்னு பயந்துதான் நானே பத்திரமாகக் கூட்டிட்டு வந்தேன்” என்றவாறே நடக்கத் தொடங்கினார் அவர்.

( நர்கிஸ் பெண்கள் மாத இதழ், மே 2010 )