வெட்கம் ஈமானை உறுதிப்படுத்தும்!
வெட்கம் என்பது ஈமானை உறுதிப்படுத்தும் – அல்ஹதீஸ்
ஈமானோடு – சீமான்தனத்தோடு வாழு என்பது முஸ்லிம்கள் பலரால் கூறப்படும் வாழ்த்துச் செய்தி. பெரியவர்களிடம் சிறியவர்கள் ஈமானுக்காக துஆச் செய்யுங்கள் எனக் கூறுவதும் உண்டு. ஈமான் என்பதற்கு இறைவன் உள்ளான். அவன் ஒருவனே, அவன் இணையற்றோன். அவன் தேவையில்லாதவன், அவன் நித்திய ஜீவனானவன். மனிதர்களை நல்வழிப்படுத்த தனது தூதர்களை அவன் அனுப்பியுள்ளான். அமரர்கள் வேதங்கள் அவனால் படைக்கப்பட்டவை. நன்மையும் தீமையும் அவனைக் கொண்டே ஏற்படுகின்றன என்பதோடு இஸ்லாத்தின் ஐந்து தூண்களான கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் இவையாவும் கடமை என நம்புவது மட்டும்தான் ஈமான் என்பது பலரின் கருத்து.
மேற்கண்ட நபிமொழிப்படி ஈமான் என்பது கடல் போன்றது. மிகப்பல கிளைகளைக் கொண்டது. எடுத்துக் காட்டாக பிறரை நாவாலும், கையாலும், துன்புறுத்தாமை, தான் விரும்புவதையே தன் சகோதரனுக்குக் கொடுப்பது, ரஸுல் (ஸல்) அவர்களை உளமார நேசிப்பது, அன்சாரி களிடம் அன்பு காட்டுவது, குழப்பங்களைத் தவிர்ப்பது, ஸலாமை, சமாதானத்தைப் பரப்புவது, கணவனிடம் நன்றியோடு நடந்து கொள்வது, இரு சாராரைச் சச்சரவி லிருந்து மீட்டு சமரசம் செய்து வைப்பது, அறப்போர் புரிவது, நிலைத்து நிற்கும் நல்லறங்கள் செய்வது, ஜனாஸாவைப் பின் தொடர்வது, பொது மக்களுக்கு நன்மை தரும் நற்செயல்களைப் புரிவதில் ஊக்கம் காட்டுவது போன்ற எல்லாமே ஈமான் என்பதாகக் கருதப்படும். இறைவனுக்கு மாறுபட்டு நடப்பதும், இறைவனுக்கு இணை வைத்தலும், கணவனுக்கு துரோகம் செய்தலும், விபச்சாரத்தில் ஈடுபடுதலும், பாவமான காரியங்களில் முனைப்பு காட்டுவதும், போதை தரும் பொருட்களை உட்கொள்வதும், அக்கிரமம் செய்தலும், நயவஞ்சகமும், அன்னிய ஆடவர் முன்னிலையில் சகஜமாக நடமாடுவதும், கோள், பொய், புரளி பேசுவதில் மகிழ்ச்சி கொள்வதும், பிறரைப் பரிகசிப்பதும், வெட்கப்பட வேண்டிய செயல்களாகும். இவைகளைச் செய்வதில் நாணமுற்று யார் தவிர்ந்து கொள்கிறார்களோ, அவர்கள் ஈமானில் உறுதி பூண்டவர்களாவர்!
பேராசிரியை. ஹாஜியா. கே. கமருன்னிஸா அப்துல்லாஹ்