Sunday, April 18, 2010

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்: ஜுமாதல் ஊலா

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்: ஜுமாதல் ஊலா

நாயகம் (ஸல்) அவர்கள் ஏகத்துவ பிரச்சாரத்தை மக்களுக்கு எடுத்துக் கூறிய சமயத்தில் இந்த ஜுமாதல்ஊலா மாதத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்.

முஃதா யுத்தம்: ஷாம்(சிரியா) நாட்டின் “பல்கா” என்ற பகுதிக்கு அருகில் உள்ள ஊர் முஃதா ஆகும். இங்கு ரோம் நாட்டின் பெரும் படையோடு (சுமார் இரண்டு லட்சம் நபர்களோடு) மூவாயிரம் வீரர்களைக் கொண்ட மிகச்சிறிய இஸ்லாமியப்படை போரிட்டு வெற்றி பெற்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாமியப் படைக்கு ஜைது இப்னு ஹாரிஸா(ரழி) அவர்களை தளபதியாக நியமித்து ஜைது கொல்லப்பட்டால், ஜஃபர் இப்னு அபூதாலிப்(ரழி) தளபதியாக இருப்பார். ஜஃபரும் கொல்லப்பட்டால், அப்துல்லா இப்னு ரவாஹா (ரழி) தளபதியாக இருப்பார் என்று கூறி படையை வழியனுப்பி வைத்தார்கள். போரில் மூவரும் கொல்லப்படவே, அடுத்த தளபதியாக காலித் இப்னு வலித்(ரழி) அவர்களை சஹாபாக்கள் தேர்ந்தெடுத்தார்கள். காலித்(ரழி) அவர்களின் தலைமையின்கீழ் இஸ்லமியப்படையினர் தீரத்தோடு போரிட்டு வெற்றியோடு மதீனா திரும்பினார்கள். இந்நிகழ்வு ஹிஜ்ரி எட்டம் ஆண்டு ஜுமதல்ஊலா மாதத்தில் நடைபெற்றது.

தாதுர் ரிகாஃ யுத்தம்: நஜ்து பகுதியில் வசிக்கும் கத்ஃபான் கோத்திரத்தைச் சேர்ந்த பனூ முஹாரிப், பனூ ஸஅலபா கிளையினர் முஸ்லிம்களை தாக்க தயாராகின்றனர் என்ற விபரம் தெரிந்ததும் நபி (ஸல்) அவர்கள் 700 பேர் கொண்ட இஸ்லாமிய படையோடு நஜ்து விரைந்தனர். இஸ்லாமியப் படையும் எதிரிப் படையும் எதிரெதிரே அணிவகுத்து யுத்த அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டனர். யுத்தம் நடைபெறவில்லை. அன்று நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமியப் படையினருக்கு “ஸலாத்துல் கவ்ஃப்” என்ற அச்ச நேரத் தொழுகையை தொழுக வைத்தார்கள். இந்நிகழ்வு ஹிஜ்ரி நான்காம் ஆண்டு இதே மாதத்தில் நிகழ்ந்தது.
”ஸலாத்துல் கவ்ஃப்” என்பது எதிரிகள் தாக்கக்கூடும் என்ற அச்சத்தின் போது நான்கு ரகஅத் தொழுகையை இரண்டு ரகஅத்தாக சுருக்கித் தொழப்படுவது ஆகும். இந்த யுத்ததில் படையினரை இரண்டு பிரிவாக ஆக்கி ஒரு பிரிவினர் போரில் அணி வகுக்க, மற்றொரு பிரிவினர் நபி (ஸல்) அவர்களுடன் இரண்டு ரகஅத் தொழுதார்கள். இவர்கள் போருக்கு சென்றபின் முதல் பிரிவு அணியினர் வந்து நாயகத்துடன் இரண்டு ரகஅத் தொழுதார்கள். ஆக நபியவர்கள் நான்கு ரகஅத்தும் படைவீரர்கள் இரண்டிரண்டு ரகஅத்தும் தொழுதார்கள்.
( அச்ச நேரத்தொழுகை பற்றி திருக்குர்ஆனில் அத்தியாயம் 4: வசனம் 101,102ல் காண்க)

ஸஃப்வான் யுத்தம் (முதல் பத்ரு யுத்தம்): ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு துவக்கத்தில் (ஹிஜ்ரத் நிகழ்ந்த 13 வது மாதத்தில்) ஜுமாதல்ஊலா மாதம், முதல் பத்ருயுத்தம் என்ற “ஸஃப்வான் யுத்தம்” நிகழ்ந்தது. குருஸ் இப்னு ஜாபிரில் ஃபஹ்ரி என்பவன் மதீனாவிலுள்ள மேய்ச்சல் நிலங்கள் மீது தாக்குதல் நடத்தி கால்நடைகளை கொள்ளையடித்துச் சென்று விட்டான். இவனைப் பிடிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் எழுபது பேர் கொண்ட சிறிய படையோடு அவனை விரட்டிச் சென்றனர். பத்ரு அறுகிலுள்ள “ஸஃப்வான்” என்ற இடம் வரை அவர்களை விரட்டிச்சென்றும் பிடிக்க முடியாததால் யுத்தமின்றி திரும்பினார்கள். எனவே இதை முதல் பத்ருயுத்தம் என்று சொல்லப்படுகிறது.

”ஈழ்” என்னும் பகுதிக்கு சென்ற இஸ்லாமியப்படை: ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு ஜுமாதல்ஊலா மாதம் ஜைது இப்னு ஹாரிஸா (ரழி) அவர்களின் தலைமையில் சிறிய படையை நபி (ஸல்) அவர்கள் “ஈழ்” என்ற இடத்திற்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு தங்கியிருந்த குரைஷி வியாபாரக் கூட்டத்தின் பொருட்களை இஸ்லாமியப்படையினர் கைப்பற்றினார்கள். பின்னர் நபியவர்களின் உத்திரவிற்கிணங்கி குரைஷிகளிடமே பொருட்களை ஒப்படைத்து விட்டார்கள். அவ்வியாபாரக் கூட்டத்திற்கு தலைவராக நபியவர்களின் மகள் ஜைனப் (ரழி) அவர்களின் கணவர் அபுல்ஆஸ் இருந்தார். அச்சமயம் அவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை. பின்னர் அவர் மக்கா சென்று குரைஷிகளிடம் வியாபாரப் பொருட்களை ஒப்படைத்து விட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு மதீனா திரும்பினார்.


தொகுப்பு: மவ்லவி ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி (துபாய் 055-9764994)



அடிக்குறிப்பு :
இத‌னை ஜமாதுல் ஊலா என‌ ந‌ம‌து கால‌ண்ட‌ர்க‌ளில் த‌வ‌றாக‌ குறிப்பிட்டு வ‌ருகின்ற‌னர்.
ஜுமாதல் ஊலா என்ப‌தே ச‌ரியாகும்.