Thursday, January 7, 2010

இஸ்லாம் எனும் வாழ்வியல் வசந்தம்!

இஸ்லாம் எனும் வாழ்வியல் வசந்தம்!


4. அருள்மறை காட்டும் அதிசயம்!


ஆதியிறையாலயம் கஅபா அன்றைய நாளில் - அரபகம் - அறியாமையின் உச்சத்தில் நின்றபோது – சுற்றிலும் முன்னூற்று அறுபது சிலைகளால் சூழப்பட்டிருந்தது. அன்றைய வழக்கப்படி அவர்கள் ஆண்|டுக்கு முன்னூற்றறுபது நாட்களையே கணித்திருந்தனர். நாளொன்றுக்கு ஒரு சிலை வீதம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிலையை வணங்கி வந்தனர்.


ஏகத்துவத்தின் இடுப்பொடிக்கும் இந்த ஈனச்செயலை அங்கே அரங்கேற்றி வைத்தவன் அம்ருப்னு லுஹய் எனும் பெயர் தாங்கியவன். குஜா கோத்திரத்துத் தலைவனான அந்த லுஹய் சமயச் சடங்குகளில் ஆழ்ந்த நம்பிக்கையும் தீவிர ஈடுபாடும் கொண்டவன். சமயச் சடங்குகள் நாடி பிற தேசங்கள் சென்றும் வழிபடும் தன்மையுடையவன். அப்படி அவன் நடந்த தேசங்களில் ஒன்று ஸிரியா. மக்கத்து மக்களுக்கும் பிறதேச மக்களுக்கும் வாகைக்குரிய வணிகத் தளமாக – வணிகத் தலைமையகமாக அந்நாளில் சிறப்புற்று விளங்கியது. பழம்பெரும் சிறப்புக்களுக்கும் பெருமைகளுக்கும் உரிய உயரிய தலமாக பேர்பெற்றுத் துலங்கியது. அங்கே நடந்து வந்த இந்தச் சிலைவழியாடு – அது ஏதோ இறைவனுக்கு ஒரு உவப்பான செயல் என்று கருதி – அதாவது - இந்தச் சிலை வழிபாடுகள் இறைவனிடம் இன்னும் அதிக நெருக்கத்தை ஏற்படுத்தித் தரும் என்று தவறாகக் கருதி வழிபட்டு வந்தனர். அந்தச் சிலைகளில் மிகச் சிறப்பாகப் போற்றப்பட்ட ஒரு சிலையின் பெயர் ஹ{பல். அந்தச் சிலையைத்தான் லுஹய் எடுத்து வந்தான். அத்தோடு இன்னும் லாத், உஸ்ஸா, மனாம் எனும் பெயர் கொண்ட சிலைகளையும் எடுத்துவந்தான்.


அந்த ‘ஹ{பல்’ சிலை கஅபா ஆலயத்தின் நடுநாயகமாகப் பொருத்தப்பட்டது. அத்தோடு பல்வேறு சிலைகளும் ‘லாத்’ போன்ற சிலைகளெல்லாம் - தாயிப் நகருக்கு – மக்கத்தைச் சுற்றியிருக்கும் சில நகரங்களுக்கு வழங்கப்பட்டன.


இபுறாஹிம் (அலை) அவர்களின் உருவப்படங்களும் - இதுபோல் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த நபிமார்கள் - மற்றும் இறைநேசச் செல்வர்களின் உருவப் படங்களும் அன்று அந்த ஆதியிறை வீட்டை அலங்கரித்தன. இந்த இறையடியார்கள் எல்லாம் இறைவனிடத்தில் மிகவும் அன்புக்கும் பாசத்துக்கும் உரியவர்கள். இவர்களைத் துணையாகக் கொண்டு அவனை வணங்கினால் ஏற்றம் தரும் ஒரு வணக்கமாக அது அமையக்கூடும் எனும் அறியாமையின் காரணமாக இது நிகழ்த்தப்பெற்றது. சாத்தானிய வலையில் வீழ்கிறோம் என்பது தெரியாமல் - அவன் அழகாக்கிக் காட்டிய இந்த அநாகரிகச் செயல் - சிலைகளாகவும் - உருவப்படக் கலைகளாகவும் ஆலயத்தை அசிங்கப்படுத்திக் கொண்டிருந்தன.


இறைமறையில் இது குறித்து அவர்கள் அச்சமூட்டப்பட்டனர். இந்த இழிசெயலைக் கண்டித்தும் இதனால் விளையும் பாவங்களைக் குறித்தும் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.


‘திண்ணமாக தனக்கு இணை வைப்பதை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். இது தவிர அனைத்தையும் தான் நாடுகின்றவர்களுக்கு அவன் மன்னித்து விடுவான்’ (4 – 116).


‘சாத்தான் உங்களுக்கு பகிரங்கமான எதிரியாகிய இருக்கிறான். அவனது அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டாம் என்றெல்லாம் இப்படி பல்வேறு இடங்களில் எச்சரிக்கப்பட்டார்கள். அப்படியிருந்தும் மக்கம் முழுமையாக மன்னர் முஹம்மது நபிகளின் காலடியில் பணிந்துவரும்வரை இந்த செயல் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது.


வலீதுபின் முகைரா என்பவன் - மக்கத்தில் அண்ணல் நபிகளை எதிர்பவர்களுக்கு ஆலோசனைகள் சொல்லக்கூடியவனாக இருந்தான். இறைமறை அருள்வேதத்தின் அமைப்பும் தெளிவும் - அவை எடுத்துச் சொல்லும் ஆன்ற பொருளும் - உள்ளங்களை ஊடுருவிச் செல்லும் உயர்ந்த நிலையும் - இருண்ட இதயங்களில் ஒளியேற்றிச் சுடர்வீசச் செய்யும் அற்புதமும் அவர்களுக்கு ஒருசேர வியப்பையும் திகிலையும் ஏற்படுத்தியிருந்தன.


எப்போது வேதகட்டளைகளை வெளியில் சொல்லி மக்களை இறைவன்பால் அழைக்க வேண்டிய அந்த உன்னதப் பணியைப் பெருமானார் அவர்கள் செய்ய ஆரம்பித்தார்களோ, அப்போதிருந்தே இஸ்லாத்தில் இணைவோர் எண்ணிக்கைப் பெருகிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த அற்புதம் அன்றைக்கு மட்டுமல்ல - இறையருளால் இன்றளவும் - இனி இவ்வுலகு உள்ளளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.


ஆயினும் அன்றைக்கு - இந்த ஏகத்துவ அழைப்பொலி – ஓரிறைக் கொள்கையை உரத்து மொழிதல் - ‘அல்லாஹ்’ ஒருவனை மட்டுமே வணக்கத்துக்குரியவனாகவும் முஹம்மது நபிகளை அவனது அடியாராகவும் தூதராகவும் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு அருளப்படுகின்ற அந்த வேதகட்டளைகளை அப்படியே மனதிலேற்று – அதனை வாழ்வின் ஒவ்வொரு நிலைகளிலும் - நபிகளாரைப் பின்பற்றி அப்படியே நடந்து கொள்ளும் அந்த ஒழுங்கமைப்பு – உத்வேகம் பெற்று எழுவதை எதிரிகளால் சகித்துக் கொள்ள இயலவில்லை. எப்படியாவது அண்ணல் அவர்களைத் தடுத்தாக வேண்டிய கட்டாயச் சூழல்களுக்கு ஆளாக்கப்பட்டனர்.


கஅபா இறையாலயம் புனித ஆலயமாக இருந்ததால் - அங்கு ஏக இறைவனை வழிபட வருவோர் எண்ணிக்கை எப்போதும் அதிகமாகவே இருக்கும். முன்னர் வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களும் - யாத்ரீகர்களும் - வழிப்போக்கர் - மற்றும் பயணிகளும் அங்கு வருவதையும், வந்து தொழுவதையும் முக்கியமாக்கிக் கொண்டிருந்தனர். ஹஜ்ஜுக் காலங்களிலும், ‘ஹஜ்’ அல்லாத மற்றையக் காலங்களிலும் இறையாலயம் சென்று வழிபடுவது – முன்னர் வேதங்கள் வழிப்படியும் - கட்டாயமாக்கப்பட்டிருந்தது. ‘ஹஜ்’ அல்லாத காலங்களில் அங்கு வந்து வழிபடும் அந்த நிகழ்ச்சியை ‘உம்ரா’ என்று சொல்வார்கள். ஏகனை வழிபடுவதும் - ஹஜ்ஜுக் கடமைகள்வழி அங்கு அந்த புனித ஆலயத்தை ஏழுமுறை வலம் வருவதும் கடமையாக்கிக் கொள்வார்கள்.


அப்படிப்பட்ட காலங்களில் எல்லாம் பிறதேசத்தவர் பெருமளவு வருவார்கள். அவர்களிடம் நபிபெருமான் சென்று இஸ்லாத்தை எடுத்தியம்புவதும் அவர்கள் ஏற்றுக் கொள்வதும் அதற்குப் பிறகு வெளியூர்க்காரர்கள் தங்களிடங்களில் இஸ்லாத்தை எடுத்துரைப்பதும் - அந்த உண்மையின் பக்கம் மக்கள் அணியணியாகத் திரள்வதும் எதிரிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஏற்படுத்தாமல் என்ன செய்யும்? அதற்காக அண்ணலை அழித்துவிடவும் ஒழித்துவிடவும் முனைந்தார்கள். அபூதாலிபின் பின்புலம் - அன்னை கதீஜாவின் செல்வ பலம் - அண்ணலைச் சேர்ந்த தோழர்களின் புஜபலம் - அண்ணலின் ஆன்ம பலம் - அத்தனைக்கும் மேலாக ஏக இறைவனின் அருள்பலம் அத்தனையும் ஒன்று சேர்ந்து அண்ணலைக் காத்து நின்றன. அதனால் அழிக்கவும் ஒழிக்கவும் முடியாத நிலையில் அவர்கள் பின்வாங்கி – மக்கத்திற்கு வருகின்றவர்களைத் தடைசெய்வது என்பதும் இயலாமல் - ஆனால் அவர்களிடம் அண்ணலைப் பற்றித் தவறாகவும், அவதூறாகவும் எடுத்துரைப்பது என கங்கணம் கட்டிக்கொண்டார்கள். ஏக இறைவன் அருள்வாக்கை – வஹியின் வருகையை – எழுதப்படிக்கத் தெரியாத நபிகளார் எடுத்துரைக்கும் அந்த வேதவரிகளை மந்திரம் என்றும் மாயச்சொற்கள் என்றும் மொழிந்தனர். அவர்களை சூனியக்காரர் என்று சொன்னார்கள். சோதிடக்காரர் என்று சொன்னார்கள். இறைமறையின் ஓசைநயத்தையும் கருத்தாழத்தையும் கவனத்தில் கொண்டு நபிகளாரைக் கவிஞர் என்று சொன்னார்கள். இன்னும் பைத்தியக்காரர் என்று சொன்னார்கள். இன்னும் எப்படியெல்லாம் வித்தியாசமாக வர்ணிக்க முடியுமோ அப்படியெல்லாம் - மந்திரக்காரர் - மாயக்காரர் - பொய்யர் - என்றெல்லாம் எடுத்துச் சொன்னார்கள்.


அருள்மறையில் எங்கேனும் குறைகாண முடியுமா என்பதில் குறியாக இருந்தவன் - அந்த வலீதுப்னு முகைரா – அவன்தான் அவர்களுக்கு ஆலோசனை தரக்கூடியவனாக இருந்தான். வேதமறையின் வெளிப்பாடுகளை எல்லாம் நோக்கினான். ஏதேனும் - எங்கேனும் தவறுகாண முடியுமா என்றெல்லாம் துருவினான். முகம் கடுகடுத்தான், சினந்தான், சிந்தையை இன்னும் சிறுமைக்கண்ணோடு குறுக்கிக் கொண்டான். எந்தக் குறையும் காணமுடியாமல் அதன்பிறகு கூடிநின்ற - கூடிவந்த எதிரிகள் கொறித்துப்போட்ட எச்சில் வார்த்தைகளின் இருட்டு முடிச்சுக்களை அவிழ்த்தான்.


‘எத்தனையோ சூனியக்காரர்களைப் பார்த்திருக்கிறோம். இவரிடம் வந்த இந்த சூனியத்தைவிடச் சிறந்ததாக இன்னொரு சூனியம் இருப்பதாகத் தெரியவில்லை. வேதமறையை சூனியம் என்று சொல்வதனைப் போலொரு உண்மையில்லை. இது மனித வாக்குகளின் மேன்மைமிக்க சூனியமாகவிருக்கிறது.


வலீது பின் முகைரா அண்ணலுக்கு இடர் விளைத்தவர்களில் அபூஜஹலைப் போல் முக்கியமானவன். செல்வத்தாலும், சிறப்புக்களாலும் பேர் பெற்றிருந்தவன். அண்ணல் வாக்குகளை உண்மையென அறிந்திருந்தும் ஆணவத்தின் காரணமாகவும் இறுமாப்பு மற்றும் சுயபெருமைகளின் காரணமாகவும் மறுதலித்தவன். பெருநிலங்களுக்குச் சொந்தக்காரன். அக்காலத்தில் அவனது நிலபுலன்களிலிருந்து பெறும் வருமானமே ஆண்டுக்கு கோடி தினார்களைத் தொடும் என்று சொல்லப்படுகிறது. இந்த செல்வம் மற்றும் பத்துப்பிள்ளைகளைப் பெற்றிருந்தான் - அந்தப் பிள்ளைகளால் ஏற்பட்ட கர்வம் - இன்னும் அபூஜஹல் போன்றோரின் தோழமை அவனை அண்ணலை எதிர்க்க வைத்தது. அதனால் இறைவனே கடிந்து இவனை நரகத்துக்குரியவனாக அறிவித்தான். இவனது பெற்ற பிள்ளைகளில் மூவர் பின்னர் இஸ்லாத்தைத் தழுவினர். அவர்களில் மிகச் சிறந்தவர் காலிதுப்னு வலீத். அண்ணல் வாயால் ‘ஸைபுல்லாஹ் - அல்லாஹ்வின் வாள்’ என்று பாராட்டப்பட்டவர்.


முகைரா மொழிந்தான், ‘இறைமறை மனிதக் கூற்றுதான். சூனியமேயன்றி வேறில்லை. தந்தைக்கும்-பிள்ளைக்கும் இடையில், தாரம்-கணவனுக்கிடையில், அண்ணன்-தங்கை-சகோதரர்களுக்கிடையில், மாமன்-மச்சான்-மருமகன் போன்ற உறவுகளுக்கிடையில் இந்த சூனியத்தைக் கொண்டு முஹம்மது பிரித்துவிடுகிறார் என்று சொல்வோம். அதனால் அவரை யாரும் சட்டை செய்ய வேண்டாம் என்று உரத்துக் கூறுவோம்’ என்று அவனும் அவனது தோழர்களும் முடிவெடுத்துக் கொண்டார்கள். அதை நிறைவேற்றிட ஆயத்தமாகிப் புறப்பட்டார்கள். வழியில் காண்போரிடம் எல்லாம் அண்ணலின் புதிய மார்க்கத்தைப் பற்றிய அபாயத்தை முன்மொழிந்தார்கள் - அவர்களின் முன் செல்வதையும் பாவம் என்றார்கள். அவர்களின் மெய்யுரைகளைப் பொய்யுரைகள் என்றார்கள். அவரிருக்கும் பக்கமே போகாதீர்கள் என்றார்கள்.


துபைல் பின் அம்ர் அத்தவ்ஸீ என்பவர் மக்கத்தின் பக்கத்து ஊர்க்காரர், பண்பாளர், படித்தவர், சிறந்த கவிஞர். ஹஜ் யாத்திரை காலத்தில் மக்காவுக்கு வந்திருந்தார். அவரை வரவேற்றும் மகிழ்ந்தும் மக்கத்தார் மகிழ்ந்திருந்தனர். ஆனால் அவருக்கு நபிகள் பெருமானைப்பற்றி எதுவும் தெரியாது. எதிரிகளுக்கு அச்சம். எங்கே முஹம்மது இவரையும் தம் பக்கம் இழுத்து விடுவாரோ என்றோர் ஐயப்பாடு. வரவேற்புப் படலங்கள் எல்லாம் முடிந்த பிறகு – விருந்துபச்சாரங்கள் எல்லாம் நடந்த பிறகு – அளவளாவிக் கொண்டிருக்கையில் - அவர்களாகவே ஒரு பொய்ச்சங்கதியை அவிழ்த்து விடுகிறார்கள்.


‘இங்கே முஹம்மது என்று சொல்லக் கூடியவர் தம்மை இறைவனின் தூதர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். என்ன மாய சூனியமோ – எவராக இருந்தாலும் அவர்களைத் தம்பக்கம் வசியமாக்கி வளைத்துக் கொள்கிறார். தங்களின் உயர்குலச் சிறப்பும் பெருமையும் நாங்கள் அறிவோம். அந்த மாயவலைக்காரரின் வலை வீழாதிருக்கத் தங்களுக்கு அறிவுறுத்துதல் நமது கடனன்றோ? அதனால் உரைத்தோம். தப்பித்தவறிக்கூட அவர் இருக்கும் பக்கம் நெருங்கி விடாதீர்கள்!’


‘இப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி தாங்கள் முன்னரே எச்சரித்தது பற்றி அகமிக மகிழ்கிறேன். இனி அவர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பேன். பஞ்சிருக்கிறதா, உங்களிடத்தில்? கொஞ்சம் தந்தால் வசதியாக இருக்கும். அவர்தம் மாயவுரைகள் செவிகளில் விழுந்துவிடக் கூடாதல்லவா? அவ்வழி செல்கையில் செவியில் வைத்துக் கொள்வது நலமன்றோ?’


நபிகளாரின் மாயமந்திர வார்த்தைகள் காதுகளில் தவறிக்கூட விழுந்துவிடக் கூடாது என்று துபைல் காதுகளில் பஞ்சினை வைத்துக் கொண்டு நடந்தார். ஆயினும் இறைவிதியை எவர் மாற்ற இயலும்?


வழக்கம்போல் கஃபா இறையாலயத்தின் ஓர் ஓரத்தில் உத்தமர் உயர்வானவனை வணங்கிக் கொண்டிருக்கையில் அவ்வழியாக வருகிறார் துபைல். அண்ணலார் ஓதிக் கொண்டிருக்கும் அருள்வேத வசனங்கள் பஞ்சடைக்க மறந்த அவர் செவிகளில் விழுந்து விடுகிறது. பஞ்சைத் தேடியவர் பஞ்சை மறந்தார் - தமது நெஞ்சைத் திறந்தார். வேத வரிகள் - அதன் இனிமையும் சொந்நயமும் கருத்தாழமும் கட்டமைப்பும் துபைலின் விழிகளை அருவிகளாக்கின. எங்கோ ஒளிந்து கிடந்த அந்த நம்பிக்கை ஒளிச்சுடர் அவரது உள்ளத்தை ஒளிமயமாக்கியது. தொழுகை முடிந்தது. துபைலின் பேச்சு தூய நபிகளிடம் தொடர்ந்தது. இஸ்லாமியத்தின் போதனை ஏந்தல் நபிவழி அவரது நெஞ்சத்தில் இறங்கியது. பஞ்சடைக்க மறந்தவர் பஞ்சாய் பறந்தார் - தமது உற்ற நண்பர்களிடமெல்லாம் இஸ்லாத்தை எடுத்து வைத்தார். எதிரிகள் மீண்டும் தம் கைகளால் தங்களையே அறைந்து கொண்டார்.


ழிமாத் அஸ்தீ என்பவர் மற்றொருவர். மாய மந்திரங்கள் கற்றவர். அவரும் மக்கம் வருகிறார். அவரிடத்தும் எதிரிகள் நபிகளார் பற்றி அவதூறு பேசுகின்றனர். ஒருவேளை தாம் மந்திரித்துப் பார்த்தால் ‘முஹம்மது’ சரியாகி விடுவார் என்று தப்புக் கணக்குப் போட்டு விடுகிறார் அஸ்தீ. இறையாலய முற்றத்தில் இறைத்தூதருடன் உரையாடுகிறார்.


‘தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மாயவினைக் கோளாறுகளை மந்திரித்துப் பார்க்கவா’ என்கிறார். சாந்த குணத்தின் நற்குணநாதர் அவர்களுக்கு இஸ்லாமியத்தின் இனிய போதனைகளை மட்டும் எடுத்துச் சொல்கிறார். அந்த இத மொழிகளிலும் - இதயத்தை ஈரமாக்கி விழிகளில் நீர் பெருகச் செய்யும் அருமொழிகளிலும் அஸ்தீ மனதைப் பறிகொடுக்கிறார். இது மாங்காய்கூட பறித்துத் தர முடியாத மந்திரம் அல்ல. மந்திரங்களை எல்லாம் மண் கவ்வச் செய்துவிடும் மாபெரும் ஆற்றல் வாய்ந்தது என்பது அந்த மந்திரம் கற்றவரின் மனதில் படுகிறது. இறைத்தூதரின் கைப்பிடித்து இஸ்லாத்தில் இணைந்து கொள்கிறார்.


அதுபோல் மற்றொருவர் ஸ{வைத் இப்னு ஸாமித். அவரும் அறிஞர்தாம். நுண்ணறிவாளர். கவிஞர். உயர்குலச் சிறப்பும் நாகரிகப் பண்பாடும் கொண்டவர். லுக்மானுல் ஹக்கீம் (அலை) எனும் இறைநேயரின் அருமொழிகளை அகம் தாங்கியவர். அவரையும் எதிரிகள் சந்தித்து அண்ணலைக் காண வேண்டாம் என்று தடை போடுகின்றனர். எனினும் காணும் வாய்ப்பு கிடைக்கிறது – அண்ணல் நபிகளுக்கும் அவருக்கும் இடையில் கலந்துரையாடல் நடக்கிறது. லுக்மானுல் ஹக்கீம் அவர்களின் அரிய போதனைகளைச் சிறப்புக்குரியவை என்று செம்மல் நபிகள் ஏற்றுக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் அந்த இறைநேயருக்கும் இறைவனான ஏகனின் அருள் வேதங்களை அவர் முன்னால் ஓதிக் காட்டுகிறார்கள். புலன்கள் எல்லாம் ஊடுருவிச் செல்லும் அந்தப் புதுமையில் ஸாமித் புல்லரித்துப் போகிறார்.; அதன் சொல்லவொண்ணா சுவையலங்காரங்களிலும் - சுகவலங்காரங்களிலும் சொக்கிப் போகிறார் - மனம் நெக்குருகிப் போகிறார். பெருமானபியவர்களின் கைப்பிடித்து இஸ்லாமிய வட்டத்துக்குள் வந்துவிடுகிறார்.


இவை மட்டுமா? இவைபோல் இன்னும் அடுக்கடுக்கான அநேகச் சம்பவங்கள் - ஆயிரமாயிரம் நிகழ்ச்சிகள் அங்கே அந்த மக்க மண்ணில் நாளும் நடந்து வருகின்றன. இப்படியே விட்டால் இந்த ஊரையும் - கொஞ்ச நாளில் இந்த உலகத்தையுமே முஹம்மது - இஸ்லாமாக்கி விடுவார்போல் தெரிகிறது எனும் திகிலுணர்வு அந்தத் தீயவர்களின் பிடரியைப் பிடித்துத் தள்ளுகிறது. முளையிலேயே தடுப்பதற்கான வழிவகைகள் எத்தனை உண்டோ அத்தனையும் வைத்துப் பார்த்தாயிற்று. தடையிட தடையிட தடைகளே உடைபடும் அந்த ஒப்பரிய வேதத்தின் ஒளிச்சுவாலை முன் அவர்களால் நிற்க முடியவில்லை. வேறு ஏதேனும் வழிகளில் ‘முஹம்மது’வை வீழ்த்திவிடலாம் என்று திட்டம் தீட்டுகின்றனர். ஓங்கரிய செல்வத்தின் அதிபதியாக்கி விடலாமா என்று கேட்கின்றனர். ஒப்பாரும் மிக்காருமில்லா சுவனப் பேரழகியை மணமுடித்து வைக்கலாமா எனக் கேட்கின்றனர். வாழுகின்ற காலமெல்லாம் மக்க நிலத்தை ஆளுகின்ற தலைவராக – அரசராக மணிமுடி சூட்டி விடலாமா என்று கேட்கின்றனர்.


தமது பேச்சும் மூச்சும் இஸ்லாமாகிப்போன - இறைமார்க்கமாகிப் போன பெருமானார் மொழிகின்றார்கள், ‘எனது வலது கையில் சூரியனையும் இடது கையில் சந்திரனையும் தந்தாலும் என்னுள்ளம் மாற மாட்டேன். இறையருளையன்றி வேறு எதனையும் நாட மாட்டேன். உங்கள் வீண்குரலுக்குச் செவிசாய்க்க மாட்டேன். இறைக்கட்டளையை உயிர் உள்ளவரைச் சொல்லாமல் விடமாட்டேன்’ – உறுதிபட எழுந்த அந்த உத்தம நபிகளின் பதிலில் உடைபட்டுப் போகிறார்கள் உதவாக்கரைகள்.


அபூலஹப் - அண்ணலின் பெரிய தந்தை உறவினன். உம்முஜமீல் என்பாள் அந்த உதவாக்கரையின் உறுதுணையாய் வாய்த்தவள். அண்ணலை ஆரம்பகாலத்தில் இருந்தே அநீதியாக எதிர்த்தவன். அராஜக நடைமுறைகளைக் கைக்கொண்டவன். ஆணவ மனதுக்காரன். அடித்தும் அதட்டியும் வதைக்கும் வன்னெஞ்சக்காரன். அவனுக்குத் துணையாக வாய்த்த அந்த பேய், நபிகளார் நடக்கும் நிலம் பார்த்து கல்லையும் முள்ளையும் பரப்பி வைக்கும் கடின மனதுக்காரி. காழ்ப்பும் கசப்பும் கொண்ட நச்சரவு. அவர்கள் இருவரும் சேர்ந்திழைத்த கொடுமைகளுக்காக இறைவனே அவர்கள்மீது கோபப்பட்டான். வேத வசனப்படி அவன் அழிந்தான். விறகு பொறுக்கச் சென்ற அவனது மனைவியும் - ஈச்ச நார்க்கயிறு – அவள் கழுத்தில் சுருக்கிட அழிந்தாள்.


‘அபூலஹபுடைய இரு கைகளும் நாசமாகட்டும் அவனும் நாசமாகட்டும்! அவனுடைய பொருளும் அவன் சம்பாதித்ததும் அவனுக்குப் பயனளிக்கவில்லை. கொழுந்து விட்டெரியும் நெருப்பில் விரைவில் அவன் நுழைவான். விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியும் (நுழைவாள்) அவளுடைய கழுத்தில் ஈச்ச நாரினாலான கயிறுதான் (அதனால் அவள் அழிவாள்).


அதனைப்போல் இன்னொரு அநியாயக்காரன், ‘அறிவின் தந்தையாய்’ போற்றப்பட்டவன் அவன். அண்ணலுக்கு எதிராக அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்ட கயவர்களில் தலைமையானவன். இழிகுணமும் இழிந்த செயலும் - கொடுமனமும் கூடா ஒழுக்கமும் - அராஜக அரசியலும் ஆர்ப்பாட்ட குணமும் கொண்ட அக்கினி மனதுக்காரன். அவனது அடாவடிச் செயல்களால் - அண்ணலை எதிர்த்த அறியாமையின் காரணத்தால் ‘அபூஜஹல்’ – ‘அறியாமையின் தந்தை’ எனப் பேர் வாங்கியவன்.


தாருன்னத்வா எனும் குரைஷியரின் தலைமை மண்டபத்தை இவனைப்போன்ற வஞ்சகர்கள்தாம் அலங்கரித்திருந்தனர். ஆதியில் நற்பண்புகளுக்கென்று ஆரம்பிக்கப்பட்ட அம்மன்றம், இவனைப் போன்ற கயவர்களின் தலைமையகமாக மாறிப் போயிற்று. அங்கேதான் மக்கத்துக் காபிர்கள் எல்லாம் கூடுவது வழக்கம். நபிகளாரின் இனிய மார்க்கம் தேசங்களை எல்லாம் தழுவிச் செல்லும் தென்றலாக வீசுவதை இந்தத் தீய மனதுக்காரர்களால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.


முஹம்மது நபிகளை எப்படியாவது அழித்து ஒழித்துவிடுவது என்பதுதான் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் முடிவாக இருக்கும் என்று தப்புக்கணக்குப் போடுகின்றனர். அங்கே தலைமை தாங்கி வந்த இந்த அபூஜஹல் அங்கே பேசுகிறான். எவர் முஹம்மதுவின் தலையைக் கொண்டு வருகிறாரோ அவருக்கு நூறு ஒட்டகைகளைப் பரிசாகத் தருவதாக வாக்களிக்கிறான். அவரை வளர விடுவது முன்னோர்களின் மதத்தை அழித்துவிடும் என்கிறான். முஹம்மதுவை ஒழித்துவிடுவது மக்கம் பிழைக்கும் வழியாகும் என்கிறான். நாள்தோறும் வணங்கிவரும் சிலைகளெல்லாம் நாசமாகி விடுவதா என்கிறான் - அவரை அழித்துவிடுவது சிலைகளை மகிழ்ச்சி கொள்ளச் செய்யும் வீரதீரச் செயல் என்கிறான். இப்படி புகைந்து கொண்டிருக்கும் மக்கத்தின் - நபிகளாரின் எதிர்ப்பாளர்கள் மத்தியில் நெய்யூற்றி நெருப்பை வளர்க்கிறான்.


அவனது ஆவேச உரையில் அக்கினித் தழலாய் கையில் வாளேந்தி வந்தது ஓர் உருவம். ‘வென்று வருவேன், முஹம்மது உயிரைக் கொன்று வருவேன். அவரது தலையை உன்னிடம் கொண்டு வருவேன்’ என்று சீறிச் சினந்த அந்தச் சிங்கம் அருள்மறையின் குளிர்நீர்ப் பொய்கையில் குளிர்ந்த விதத்தை இறையருளால் வரும் இதழில் பார்ப்போம்.


இன்ஷா அல்லாஹ் - வளரும்!


ப.அத்தாவுல்லா