இஸ்லாம் எனும் வாழ்வியல் வசந்தம்! ( தொடர் )
5. மோரீஸ் புகைல் கமலாதாஸ் - மனமாற்றம்!
இந்தியாவின் தேசத்தந்தை – மகாத்மா காந்தியடிகள் ஒருமுறை இப்படிச் சொன்னார், ‘இந்தியாவின் ஆட்சியதிகாரம் என்னிடம் ஒப்படைக்கப்பட்டால் இஸ்லாத்தின் இரண்டாம் கலீபா – தலைவர் - உமர் பின் கத்தாப் அவர்களைப்போல் ஆட்சி செய்ய விரும்புகிறேன்’. அஹிம்ஸைவாதி என்று போற்றப்பட்டவர் - ஆர்ப்பாட்ட அரசியலுக்கு அப்பாற்பட்டவர் - தேச நலனையே பெரிதாய் மதித்தவர் - அரைநிர்வாணப் பக்கிரியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் - அறநெறிப் பண்பாளர் - தேசத் துரோகிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு தனது இன்னுயிரை தேசத்திற்குத் தந்தவர். அப்படிப்பட்ட அந்த உத்தமர் காந்தியடிகள் உள்ளத்தில் உமறுப் பெருமகனார் சிம்மாசனம் போட்டு வீற்றிருந்தார்.
இஸ்லாமியத்தின் ஆளுமை – நபிகள் பெருமானின் நடைமுறை வாழ்வியல் - அந்த வாழ்வியல் நடைமுறைப்படி வாழ்ந்து காட்டிய இஸ்லாமிய கலீபாக்கள் - அமீருல் மூமினீன்கள் - ஆட்சிக் கட்டில் ஏறியும் மன்னர்களாக இல்லாமல் மக்களின் தொண்டர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொண்ட அந்த முன்மாதிரிகள் - அவர்களில் அண்ணலார் மறைவுக்குப் பின்னர் முதலாவதாக அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களும் இரண்டாவதாக உமர் இப்னு அல்கத்தாப் (ரலி) அவர்களும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தனர். அவரது வாழ்வியலில் மனதை இழந்த மகாத்மாதான் இவ்வாறு மொழிகிறார். இந்தப் பெருமகனார் - உமறு அவர்கள்தாம் ‘முஹம்மது நபிகளின் தலையை வெட்டி வருவேன்’ என்று வீரசபதம் செய்து வெளியே வந்தவர்.
முப்பத்து மூன்று வயதுடையவர் - மூர்க்கங்களில் தம்மை முழுமையாக்கிக் கொண்டவர் - கோபக்குன்றாய் கொதிப்பவர் - உறையிலிருந்து வெளிவரும் வாளை எதிரிகளின் இரத்தம் குடிக்காமல் உறைக்குள் அனுப்புகின்ற வழக்கம் இல்லாதவர் - எதிர்த்து நிற்பவர், எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் அடித்து வீழ்த்தும் ஆற்றல் மிக்கவர். தமது அடிமைப் பெண் ஒருத்தி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாள் என்பதற்காக அவளை அடித்து உதைத்துத் துன்புறுத்தி - இரக்கத்தால் அல்ல – அடித்தடித்து கைவலிக்கிறது என்ற காரணத்தால் நிறுத்திக் கொண்டவர் - அப்படிப்பட்ட அந்த உமர்தான் கையில் வாளேந்தி வருகிறார்.
அவர் வாளேந்தி வருகிறார் என்றால் எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனம். ஆனால் அன்றோ அவர் வருகின்ற வழியில் அவரது நண்பரே மாட்டிக் கொள்கிறார். உமரின் ஆவேசமும் வேகமும் தெரிந்தவர் அவர். அவரும் இஸ்லாத்தைத் தழுவியவர்தாம். கையில் கிடைத்த அவரது கதையை முடிக்கு முன்பே அவர் உதிர்த்த வார்த்தைகளில் திகைத்துப் போகிறார் உமர்.
‘உமது வீட்டைச் சுத்தப்படுத்திக் கொண்டல்லவா நீவிர் என்னைக் கேட்க வேண்டும்? உமது தங்கையும் தங்கையின் கணவரும் ஏற்கெனவே இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள். அவர்களைக் கேட்பதற்கு உம்மால் இயலவில்லை. என்னைக் கேட்க வந்துவிட்டீராக்கும்?’
உமரின் கோபமும் வேகமும் அப்படியே தங்கை மீதும் அவர்தம் கணவர் மீதும் திரும்புகிறது. வழியிலே இருக்கும் தங்கை வீட்டைக் காணவருகிறார். அங்கே அப்போது நபித்தோழர் ஒருவர் அவர்களுக்கு வேதமறையை ஓதிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். புயலாய் சீறிய உமறு கதவை உடைத்து உள்நுழைகிறார்.
தங்கையும் தங்கைக்குத் துணையாய் வந்த மைத்துனரும் உமறுவின் கைகளால் பந்தாடப்படுகின்றனர். மறை ஓதிக்கொடுத்துக் கொண்டிருந்த நபித்தோழர் மறைந்து கொள்கிறார். இரத்தக் காயம்பட்டு தங்கை தள்ளாடுகிறார். அப்போதுதான் உமறுக்குக் கொஞ்சம் சுயநினைவு வருகிறது. ஒன்றாய் பிறந்து வளர்ந்தவர்கள் - ஒரு தாய்மக்கள் - இளவயதுப்பெண் - சிறுமியாய் இருக்கும்போது ஊட்டி வளர்த்த பாசம் - ஒன்றாய் விளையாடிய நேசம் - அந்த நெகிழ்வு இன்னும் நீர்த்துப் போகாத மனிதம் - உமறுவின் கண்களைத் திறக்கிறது.
‘என்ன ஓதிக் கொண்டிருந்தீர்கள்?’
‘தூயவரைத் தவிர வேறெவரும் தொடமுடியாத தூயமறை!’
‘நான் பார்க்க வேண்டும், எடுத்து வா இங்கே’
‘அதைத் தொடுவதற்கும் ஓதுவதற்கும் உமக்கு என்ன அருகதை இருக்கிறது? அசுத்தமானவர் அல்லவா நீர்?’
தங்கை மறையைக் கொடுக்க மறுக்கிறார். சுவடியிலோ தோலிலோ எழுதப்பட்ட இறைவாசகங்கள். ஒரு சில பகுதிகள் மட்டும். அடிதடியில் கீழே விழுந்துகிடந்த அந்த அற்புதத்தின்பால் உமரின் பார்வை திரும்புகிறது. எடுத்துப் படிக்கிறார். இறைமறையின் அந்த அற்புத சக்தி அவரது உள்ளத்தில் ஊடுருவிப் பாய்கிறது. கதவை உடைத்து உள்நுழைந்தவர் மனக்கதவை, அருள்மறைத் திறந்து வைக்கிறது. அடித்து வதைத்த தங்கையும் மைத்துனரும் அதிசயித்துப் பார்க்கையிலேயே அந்த அதிசயம் நிகழ்கிறது. வாளேந்தி வந்த உமறுவின் கைகளில் இருந்து வாள் கீழே விழுகிறது. இதயம் குளிர்ந்து ஆவியாகி அந்த ஆவித்துளி அழுகைத் துளியாகிக் கரையுடைத்துவிடுகிறது.
அவர்கள் அதிசயித்து நின்று கொண்டிருக்கையிலேயே உமறு வெளியேறுகிறார். பக்கத்தில் அர்கம்(ரலி) எனும் பெயருடைய நபித்தோழர் வீட்டில் நண்பர்களுடன் நாயகம் வீற்றிருக்கின்றார்கள். அண்ணலைக் கண்டு அகம் திறக்கிறார் உமர். இருகரம் நீட்டி அணைத்துக் கொள்கிறார்கள் பெருமானார். ‘கொன்று வருவேன்’ என்று வந்தவர் தம்மையே இஸ்லாத்தில் கொண்டு வந்துவிட்டார். இந்நிகழ்ச்சிக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் பெருமானார் இறையிடம் இறைஞ்சினார்கள் இப்படி: ‘இறைவா! உமர் - அபூஜஹல் இருவரில் ஒருவரை எனக்குத் துணையாக்கி வை. இஸ்லாம் வளர்ந்து சிறந்திட ஆதரவு செய்’. அந்தப் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டது.
உமறின் வருகை அபூஜஹல் கூட்டத்துக்கு ஆத்திரம் ஏற்படுத்தியது. இஸ்லாமியருக்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. உமரின் வருகைக்குப் பிறகு இஸ்லாம் துணிந்து நடக்க ஆரம்பித்தது. எதிரிகள் பயந்து நடக்க ஆரம்பித்தனர். அதுவரை மறைவாக நிகழ்த்தி வந்த வணக்க வழிபாடுகள் - கஃபா இறையாலய முற்றத்திலேயே வெளிப்படையாக நடக்க ஆரம்பித்தன.
அத்தகு பேராற்றல் வாய்ந்த அந்த இறைமறை அன்று மட்டுமல்ல - இன்றும்கூட அதிசயிக்கத்தக்க – ஆச்சரியப்படத்தக்க மாற்றங்களைச் செய்து வருகிறது. இந்த இறைமறை பற்றி இறைவன் ஓரிடத்தில் கூறுகிறான், ‘இதன்வழி தான் நாடியவருக்கு அவன் நேர்வழி கொடுக்கிறான், தான் நாடியவரை விழி கெடுக்கிறான்’.
இன்றைக்கு வலீது பின் முகைராக்கள் இல்லை – அபூஜஹல்கள் - அபூலஹப்கள் - உம்முஜமில்கள் இல்லை. ஆனால் அவர்களைப் போல் உள்ளங்களைப் பெற்ற சல்மான் ருஷ்டிக்கள் இருக்கிறார்கள் - தஸ்லீமா நஸ்ரின்கள் இருக்கிறார்கள். இந்தக் கழிசடைகளை நாம் கவனத்தில் கொள்ளத் தேவையில்லை. காலமே அவர்களை அடித்து அப்புறப்படுத்தும்.
அரபி மொழியைப் பேசுகின்றவர்கள் - அரபி மொழியில் திறமையும் தேர்ச்சியும் பெற்றவர்கள் - ஆழ்ந்த ஞானமும் புலமையும் கொண்டவர்கள் அன்றைக்கு – அண்ணலாரை எதிர்த்தவர்களாய் இருந்தார்கள். அன்றைக்கு – அவர்களிடத்தில் ஒரு வழக்கமிருந்தது. அதாவது மக்கத்திற்குப் பக்கத்தில் ‘உக்காள்’ என்ற வியாபாரச் சந்தை இருந்தது. மக்கள் பெருவாரியாகக் கூடுமிடமாகவும் இருந்தது. பேரறிஞர்களும் பெருங்கவி விற்பன்னர்களும் தங்கள் மேதாவிலாசம் காட்டும் மேடையாகவும் அது மிளிர்ந்தது. அங்கே அடிக்கடி கவிதைப் போட்டிகள் நடப்பதுண்டு. வெற்றி பெறுகின்ற கவிதைகளைத் தங்கத்தில் எழுதி அதனைக் ‘கஅபா’ ஆலய முகப்பில் கட்டித் தொங்கவிடும் பழக்கம் இருந்தது. என்னதான் மனிதன் கற்பனையின் உச்சத்திற்குச் சென்று கவிதை யாத்தாலும் - கடந்த காலச் சம்பவங்களைக் கனிவாகச் சொன்னாலும் - இயற்கையின் இயல்புகளை இனிதாகப் பேசினாலும் - வாழ்வின் நடைமுறைகளை வர்ணித்துக் காட்டினாலும் - ஏக இறைவனின் ஒரு வரியின் சிறப்பையேனும் ஒற்றை வார்த்தையையேனும் வெற்றி பெறத்தக்க வகையில் அந்தக் கவிதைகள் சிறப்புறவில்லை. மக்களின் உள்ளங்களை ஊடுருவிச் சென்று ஒளியூட்டும் பான்மை பெற்றதாகவில்லை. அதனால்தான் அருள்மறையின் வாசகங்கள் - வசனங்கள் அவர்களிடம் ஓதிக் காட்டப்பட்ட போதெல்லாம் அவர்கள் தங்களை மறந்தார்கள் - தம் சிறப்புகளை – உள்ளங்களை எல்லாம் இழந்தார்கள். அணியணியாகத் தங்களை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்கள். அப்படித்தான் ஒரு சமயம் பெருமானபியவர்கள் அருள்மறையின் ஒரு அத்தியாயம் - ‘நஜ்ம்’ என்று சொல்லக்கூடிய ‘நட்சத்திரங்கள்’ என்று பொருள்படக்கூடிய – அந்த தலைப்பின்கீழ் வரக்கூடிய வசனங்களை ஓதிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே இஸ்லாத்தைத் தழுவியவர்களும் - தழுவாதவர்களும் இருந்தார்கள். அந்த வசனத்தினை ஓதிக்கொண்டிருக்கையிலேயே பெருமானபியவர்கள் இறைவனுக்குச் சிரவணக்கம் செய்தார்கள். இஸ்லாத்தைத் தழுவாதவர்கள்தாம் அதிகம் கேட்டுக் கொண்டிருந்தார்கள் எனினும் - அந்த வசனங்களின் வலிமை – வேகம் - ஆற்றல் - அற்புதம் - அந்த மக்கள் அனைவரையும் தம்மை மறந்து ஏக இறைவனுக்குச் சிரவணக்கம் செய்ய வைத்தது. அப்படி ஒரு பேராற்றல் அந்த அருள்மறைக்கு இருந்தது. அனைத்தையும் அடக்கியாளும் ஆற்றல் மிக்கவரின் அற்புத வார்த்தைகள் அல்லவோ அவை! அவர்கள் - எவரெல்லாம் அன்று நபி பெருமானாருடன் ஏக இறைவனை வணங்கினார்களோ – அவர்கள் அத்தனை பேரும் பின்னாளில் இஸ்லாத்தைத் தழுவினார்கள் என்ற பேருண்மை இஸ்லாமியத்தின் வரலாற்றில் மிளிரக் காண்கிறோம்.
அப்படிப்பட்ட சிறப்புக்கும் மேன்மைக்குமுரிய அந்த வேத வசனங்கள் அரபிகள் அல்லாதவரை – அரபி மொழி தெரியாதவரை – எப்படியெல்லாம் வசியப்படுத்தி அவர்களையும் இஸ்லாத்தின் பக்கம் இழுத்திருக்கிறது என்பதும் தொடர்ந்து வருகின்ற நீண்ட நெடும் வரலாறாகும். இங்கு அத்தனையையும் எடுத்தெழுதுவதும் விளக்குவதும் நோக்கம் அல்ல. அருள்மறையின் மேன்மைகள் - அவை எடுத்துச் சொல்லும் உண்மைகள் - கடந்த கால சரித்திரங்களை அது படம்பிடிக்கும் பான்மைகள் - மறுக்க முடியாத அதனுடைய அத்தாட்சிகள் - பல்வேறு இடங்களில் ‘அறிவுடையவர்களாக இருந்தால் நீங்கள் இதனை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?’ – என்று பலவிடங்களில் சிந்தனைக்குத் தூண்டிலிடும் அதன் தெளிவுகள் - மனித வாக்குகளோ – போக்குகளோ – அதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாத உயர்தன்மைகள் - எல்லாம் மற்றவர் மனங்களில் - அதாவது இஸ்லாமியர் அல்லாதவர் மனங்களில் எப்படியெல்லாம் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது இக்கட்டுரைத் தொடருக்கு அவசியம் என்பதால் ஒருசில நிகழ்வுகளையும் அதன் விளைவுகளையும்ம மட்டும் எடுத்துச் சொல்வது நலம் என நினைக்கிறேன்.
அருள்மறையின் அரும்திறமும் பொருட்திறமும் வெறும் ஏட்டளவில் மட்டும் சொல்லி நிறுத்தத்தக்கவையன்று. அதன் ஆழஅகலங்கள் ஆழ்மனதையும் ஊடுருவும் வல்லமை வாய்ந்தவை. அருள்மறையில் ஆதம் (அலை) அவர்கள் முதல் முஹம்மது நபிகள் (ஸல்) ஈறாக பல்வேறு நபிமார்களின் சரிதங்கள் - தேவையான அளவுக்கு விளக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கில் - லட்சக்கணக்கில் இறைத்தூதர்கள் வந்திருக்கிறார்கள். ‘இவ்வுலகில் இறைத்தூதர்கள் வராத பகுதிகளே இல்லை’ என்று இறைமறைப் பேசுகின்ற அந்த சத்திய வார்த்தைகளை மெய்ப்படுத்துமுகத்தான் - முன்னர் நடந்த பல்வேறு சம்பவங்கள் - ஒரு படிப்பினையாக - இங்கே விளக்கப்படுகின்றன. அப்படி விளக்கப்படுகின்ற சம்பவங்களில் ஒன்று – சரித்திரங்களில் ஒன்றுதான் - பழைய ஏற்பாடு வேதமாக வழங்கப்பட்ட – புதிய ஏற்பாடும் மறுதலிக்காத - மூஸா (அலை) என்று அழைக்கப்படுகின்ற மோஸஸ் அவர்களின் சரித்திரம். அரபியில் ‘மிஸ்ர்’ என்று அழைக்கப்படுகின்ற இன்றைய எகிப்தில் அவர்கள் இறைத்தூதராக இருந்தார்கள். ஓரிறைக்கொள்கையை எடுத்துச் சொல்லும் இனிய பணியில் அவர்கள் ஈடுபட்டிருந்தபோது – அண்ணல் பெருமானை எதிர்த்த அபூஜஹல் - நபிகளார் காலத்து ‘பிர்அவுன்’ ஆக இருந்ததுபோல – அங்கே மூஸா (அலை) அவர்களை எதிர்த்து ‘பிர்அவுன்’ – ‘பாரோன்’ என்று பைபிள் பேசும் அவனிருந்தான். மூஸா (அலை) அவர்களை எதிர்த்துப் பெருங்கலகம் செய்த பாதகன் மட்டுமில்லை – தன்னை ‘இறைவன்’ என்றே வாதித்தவன் அவன். இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களின் கூட்டத்தாரை அடிமைப்படுத்தி கொடுமை புரிந்துகொண்டிருந்த கொடுங்கோலன் அவன். எத்தனையோ அத்தாட்சிகள் இறைவன் புறமிருந்து அவனுக்குக் காண்பிக்கப்பட்ட பிறகும் - சாத்தானிய வலையில் விழுந்து தன்னை இறைவன் என்று வாதிட்ட அவன் நைல் நதியில் மூழ்கடிக்கப்பட்டான். ‘அவனது உடலை உலகத்தார்க்கு ஓர் அத்தாட்சியாக நாம் ஆக்கி வைப்போம்’ என்று இறைமறைப் பேசுகிறது.
ஏறத்தாழ இரு நூற்றாண்டுகளுக்கு முன்னால் - தொல்பொருள் மற்றும் கடல் ஆய்வில் ஈடுபட்டவர்கள் - நைல் நதியில் அவனது உடலைக் கண்டுபிடித்து – அவ்வுடல் இன்றைக்கு எகிப்தில் - பிரமிடுகளில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட ‘மம்மி’களோடு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் இன்றும்கூட தேவையானால் போய் பார்த்துக் கொள்ளலாம். அந்த அவனது உயிரற்ற உடல் - ஒரு கிறித்துவ மருத்துவர் - பேராசிரியர் - ஆய்வாளர் ஒருவரால் பரிசோதிக்கப்படுகிறது. அவனது உடல் பற்றிக் கூறும் வேதமறை வசனம் அவரது உள்ளத்தில் இஸ்லாமிய ஒளிச்சுடரை ஏற்றி வைத்தது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆம்! நம்பித்தான் ஆகவேண்டும் - வேறு வழியில்லை.
மோரீஸ் புகைல் என்று சொல்லப்படுகின்ற அந்த மருத்துவர் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்தவர். எகிப்தின் ‘மம்மி’களை சோதனை செய்து பார்க்கின்ற ஆய்வாளர்களுக்குத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். பிரான்ஸ் தேசத்தின் வேண்டுதலுக்கேற்ப எகிப்து ‘பாடம்’ செய்யப்பட்ட அந்த ‘மம்மி’களை பிரான்ஸ{க்கு அனுப்பி வைத்தது. அப்போது நைல்நதியில் கண்டெடுக்கப்பட்ட ‘பிர்அவுன்’ உடலும் அங்கு வந்தது. ஒரு மன்னனுக்குரிய மரியாதையோடு அவனது உடல் - செத்த உடல் - இறக்கப்பட்டது. அதுவும் சோதனைக்காக மோரீஸின் பார்வைக்கு வந்தது. நீண்டநேர ஆய்வுக்குப்பின் அவனது உடம்பில் அதிகச் சேதம் இல்லாத விபரமும் - உப்புத்தன்மை அவனது உடம்பில் இருக்கும் விபரமும் கண்டறியப்பட்டது. நெடுநேர ஆய்வுக்குப்பிறகு அவர் தமது முடிவை எழுதுகையில், பக்கத்தில் நின்றிருந்த ஒருவர், இந்த உடல் பற்றி அருள்மறை வசனம் கூறுகின்ற கருத்தை அவரது செவிகளில் போட்டு வைத்தார். பிடிவாதமாக மறுத்தார் மோரீஸ்.
அவரது சிந்தனையும் விளக்கமும் வித்தியாசமாக இருந்தன. சாதாரண நிலையில் இருக்கும் எவரென்றாலும் அவரது கருத்தை ஆமோதிக்கவே செய்வர். ஆயினும் இறைமறைக் கூற்றை எவர் மறுக்கவியலும்? மறுக்கவேண்டும் என்ற எண்ணத்திலும் மோரீஸ் கூறவில்லை. அவரது ஆய்வை மட்டுமே வெளிப்படுத்தினார்.
அவர் சொன்னதெல்லாம் இதைத்தாம் - அதாவது ‘மம்மி’களைப்பற்றிய உண்மைகள் வெளி உலகுக்குத் தெரிந்து ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கும் குறைவாகத்தான் ஆகிறது. ஒரு மருத்துவராக இருக்கும் எனக்கே இந்த விஷயங்கள் எல்லாம் இப்போதுதான் தெரிய வருகின்றன. விவிலியத்தில் - பைபிளில் - பாரோனின் மரணம் கூறப்பட்டிருக்கிறதேயன்றி – அவனது செத்த உடல்பற்றி – எந்தத் தகவலும் இல்லை. இந்த செய்தி எப்படி ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் முஹம்மது நபிகளுக்குத் தெரியவந்தது?’ என்பதுதான்.
வீட்டிற்கு வந்தபிறகும் அவரது தாகம் தணியவில்லை. பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடுகளை எல்லாம் புரட்டிப் பார்த்தும் அவனது – பாரோனின் மரணத்தைத்தவிர அவனது உடல்பற்றிய எந்த சிறுகுறிப்பும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆய்வறிக்கையை எடுத்துக்கொண்டு – அதற்குப்பிறகு – சவூதியில் நடந்த மாநாட்டுக்கு மோரீஸ் புறப்பட்டார். அங்கு ஆய்வாளர்கள் - அறிஞர்கள் மத்தியில் அவர் தமது ஆய்வு முடிவை வெளியிட்டார். அப்போது அருகிலிருந்த ஒருவர் அவனது மரணம் பற்றியும் உடல் பற்றியும் அருள்மறை கூறும் கருத்துக்களை அங்கு படித்துக் காட்டினார்.
‘என்றும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உனது உடலைப் பாதுகாப்போம். நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள்’ - (10-92).
ஏகத்துவத்தை மறுத்தவன் - இறைத்தூதரை மறுத்தவன் - மறுமையை மறுத்தவன் - எத்தனையோ அத்தாட்சிகள் இறைவன் புறமிருந்து இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களால் காட்டப்பெற்றும் சாத்தானிய வலையில் விழுந்து தன்னை சாய்த்துக் கொண்டவன் - அவனது செத்த உடல் பற்றிய ஒரு குறிப்பு – சாதாரண ஒருவரையல்ல – ஒரு மருத்துவரை – பேராசிரியரை – ஆய்வுக்குழுவின் தலைவரை மாற்றியமைத்திருக்கிறது என்பது எவ்வளவு பெரிய விஷயம்? அருள்மறையின் அந்த வலிமையை எப்படி விளக்கிச் சொல்ல முடியும் - முழுவதுமாக!
அந்த இடத்திலேயே மோரீஸ் தம்மை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார். அவர் கூறினார். நான் ‘இந்த வேதத்தை நம்புகிறேன். என்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்கிறேன்’. அதற்குப்பிறகு ஒரு பத்து ஆண்டுகள் குர்ஆன் கூற்றுப்படியுள்ள சில செய்திகளை ஆய்ந்தார். அவற்றை பைபிள் கூற்றுப்படியும் ஒப்பு நோக்கினார். அந்த ஆராய்ச்சியின் விளைவு ‘விஞ்ஞான ஒளியில் குர்ஆன்’ என்றொரு நூல் எழுதினார். இலட்சக்கணக்கில் அந்த நூல் விற்றுத் தீர்ந்தது. இன்னும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது. பலர் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டிருக்கிறார்கள்.
அதைப்போல சமீபத்தில் இஸ்லாத்தைத் தழுவியிருப்பவர் நம் இந்தியாவில் - கேரளாவைச் சார்ந்தவர் - மலையாள பத்திரிகை உலகின் பழைய ஆசிரியர் - மாத்ருபூமி பத்திரிகை ஆசிரியரின் மகள் - அவரும் டாக்டர்தாம் - கமலாதாஸ் என்ற பெயருடையவர். மாதவி குட்டி என்ற பெயரில் இலக்கிய உலகுக்கு அறிமுகமானவர். அவர் தாயாரும் மிகச்சிறந்த கவிஞர்தாம். இந்து மதத்தில் இருந்து இஸ்லாத்தைத் தழுவியிருக்கிறார்.
மறுஜென்ம நம்பிக்கையும் - இறந்தபிறகு ஒரு காக்காவாக அல்லது குருவி, விலங்காக பிறப்பதில் நம்பிக்கையின்மையும், மரணத்திற்குப்பின் எரியூட்டுதலில் விருப்பமும் இல்லாத அவரது மனதை அருள்மறை மாற்றியிருக்கிறது. ‘என்னுடைய மனதிற்கும் ஆன்மாவுக்கும் இஸ்லாம் விடையளிக்கிறது. அந்த உண்மையில் நான் இஸ்லாத்தைத் தழுவியிருக்கிறேன்’ என்கிறார் அவர். இன்று தமது பெயரை ‘ஸ{ரையா’ என்று மாற்றிக் கொண்டிருக்கிறார். குர்ஆனில் சில பகுதிகளை மனப்பாடமிட்டிருக்கிறார். இஸ்லாமியம் பற்றிய கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இஸ்லாமிய மாநாடுகளில் பங்கேற்கிறார். இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருக்கும் உரிமைகளில் மனம் நிறைவடைகிறார். ‘நாலபாட்’ எனும் தமது சொந்த ஊரில் ஒரு பள்ளிவாயிலைக் கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இப்படி எண்ணற்ற அற்புதங்களைப் பேசுகின்ற அருள்மறையில் முன்வேதங்கள் பற்றிய குறிப்புக்கள் உண்டா? முன்வேதங்களில் நபிபெருமானாரைப் பற்றிய முன்னறிவிப்புகள் உண்டா? மற்றைய வேதங்கள் இஸ்லாமியரைப்பற்றிப் பேசுவதுண்டா? அந்த அருள்மறை இந்துப் பெருமக்களைப் பற்றிப் பேசுகிறதா? என்ன பேசுகிறது? அவர்களின் மூலம் என்ன என்பது போன்ற விபரங்களை வருமிதழில் பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்!
இறையருளால் வசந்தம் மீண்டும் வரும்!
ப.அத்தாவுல்லா